

சில வகை பொருள்கள், விஷயங்கள் மீதான மக்களின் அச்சத்தை போஃபியா என்று அழைக்கிறது மருத்துவ உலகம். நடைமுறையில் இந்த போஃபியாவில் சேராத அச்சங்களும் உண்டு. இந்தியாவில் இன்று வழக்கொழிந்து போன தந்தி ஒரு காலத்தில் அச்சத்தின் பிரதிநிதியாகவே இருந்தது. தந்தி வந்தாலே அது துன்பத்தின் அறிவிப்பாக பார்க்கப்பட்டது. அதேபோல அச்சத்திற்குரிய விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது அரசு அலுவலகங்களில் இருந்து வரும் நோட்டீஸ்.
குறிப்பாக வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது என்றால் வரி செலுத்துபவர்களின் வயிற்றில் புளியை கரைத்து விடும். ஆனால் வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ் வெறும் விளக்கம் பெருவதற்கான கடிதம் மட்டுமே. அந்த நோட்டீஸை பார்த்து அச்சம் கொள்ளத் தேவை இல்லை.
இப்படிச் சொல்லும் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. வருமான வரித் துறை எப்போது, எதற்காகவெல்லாம், என்னென்ன நோட்டீஸ் அனுப்பும் என்று விளக்குகிறார் இங்கே...
“வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தாலே எல்லோருக்குள்ளும் ஒரு பதற்றம் உருவாகி விடும். அப்படியெல்லாம் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ்களை நாம் வருமான வரித் துறை அனுப்பும் கடிதங்கள் என எடுத்துக் கொள்ளலாம். வருமான வரித் துறை சில நேரங்களில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும், இது வாடிக்கையான நிகழ்வு தான். வெறும் கடிதம் என்றால் மக்கள் அதை எளிதாக கடந்து சென்று விடுவார்கள் என்பதற்காக விளக்கக் கடிதங்களுக்கு ஒரு அதிகாரபூர்வ அந்தஸ்த்து கொடுக்க அவற்றை "நோட்டீஸ்" என்று அழைக்கின்றனர்.
வருமான வரித் துறையில் இருந்து முக்கியமாக இரண்டு மூன்று நோட்டீஸ்கள் வரும். வருமான வரிச் சட்டத்தின் உட்பிரிவுகளின் படி அனுப்பப்படும் இந்த நோட்டீஸ்கள். அந்த உட்பிரிவுகளின் பெயரிலேயே பொதுவழக்கில் அறியப்படுகின்றன. அதன்படி பிரிவு 143(2)-ன் கீழ் ஒரு நோட்டீஸ் வரும், பிரிவு 142 (1) -ன் கீழ் ஒரு நோட்டீஸ் வரலாம். பிரிவு 156-ன் கீழ் இன்டிமேஷன் அல்லது டிமாண்ட் நோட்டீஸும் வரலாம்.
ஸ்க்ரூடினைசிங் (scrutinizing): வரி செலுத்துபவர் வருமான வரித் தாக்கல் செய்து விட்டார். அவரது வரித் தாக்கல் மதிப்பீடு செய்யப்பட்டு அவர் அதிகமாக வரி செலுத்த வேண்டியது இருந்தால் டிமாண்ட் வந்திருக்கும். ஒரு வேளை அதிகமாக வரி செலுத்தியிருந்தால் அவருக்கு ரீ ஃபண்ட் வந்திருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து கணினி தோராயமாக, பரவலாக சில வரித் தாக்கல் கணக்குகளை தேர்வு செய்து ஆய்வு பண்ணும். அதற்கு "ஸ்க்ரூடினைசிங்" என்று பெயர்.
143(2) நோட்டீஸ்: தாக்கல் செய்யப்பட்ட ஒரு கணக்கை மேலும் ஆய்வு செய்வதே "ஸ்க்ரூடினைசிங்". அதாவது தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, வருமானம் சரியானபடி தெரிவிக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்யும். இதற்காக பரவலாக சில வரித் தாக்கல்கள் எடுக்கப்படும். அப்படி ஒரு வரித் தாக்கல் கணக்கு ஸ்க்ரூடினைசிங்-க்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அந்த தாக்கலுக்குத் தொடர்புடைய வரி செலுத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வருமான வரிச் சட்டம் பிரிவு 143 (2) கீழ் இதனை, 143 (2) நோட்டீஸ் என்பர். அதில், இந்தாண்டு நீங்கள் தாக்கல் செய்திருக்கும் வருமான வரித் தாக்கல் ஸ்க்ரூடினைசிங் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எங்களுக்கு இந்த இந்த தகவல்கள் தேவைப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டிருக்கும்.
பதில் அனுப்பினால் போதும்: நோட்டீசில் கேட்கப்பட்டு்ள்ள தகவல்களை நாம் வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். முன்பு தனிப்பட்ட சந்திப்புகள் நடக்கும் இப்போது அவை கிடையாது என்பதால் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை அனுப்பி வைத்தால் போதும். வரிமான வரித் துறை கேட்டிருக்கும் கேள்விகளுக்கு வரி செலுத்துபவர் அனுப்பியிருக்கும் தகவல்களே போதுமானதாகவும் திருப்திகரமாகவும் இருந்தால் வருமான வரித் துறையினர் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். கூடுதலாக ஏதாவது கேள்விகள் இருந்தால், அதனைத் திரும்பவும் அனுப்புவார்கள். இந்த ஆய்வு இயல்பான ஒன்றே. வரி செலுத்துபவர் மீது சந்தேகம் வந்து, அவரது வரி தாக்கல் கணக்கை மட்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள் என்று அர்த்தம் கிடையாது.
ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட வரித் தாக்கல்களில் இருந்து கணினி தோராயமாக சில கணக்குகளை எடுத்துக் கொடுக்கும். உதாரணத்திற்கு வரி செலுத்து அந்த ஆண்டில் ஒரு குறிப்பிட்ட சொத்தை விற்பனை செய்திருக்கிறார், அதன்மூலம் அவருக்கு ரூ.5 கோடி வருமானம் வந்துள்ளது. இந்த சொத்து விற்பனை குறித்து ஆய்வு செய்யுங்கள் என்று கணினி எடுத்துக்கொடுக்கும். இப்படி ஏதாவது குறிப்பிட்ட நிகழ்வுகள் இருக்கும். அதேபோல அந்த குறிப்பிட்ட நடவடிக்கை குறித்து மட்டும் தான் கேள்விகளும் கேட்கப்படும்.
இந்த ஆண்டு நீங்கள் இந்த சொத்தை விற்பனை செய்தீர்களா? அதைப்பற்றி தகவல்கள் கொடுங்கள் என்று கேட்பார்கள் நாம் விளக்கம் தரப்போகிறோம். சொத்து விற்பனை செய்தது தொடர்பான விற்பனை பத்திரம் நம்மிடம் இருக்கும். அதன் ஜெராக்ஸ் காப்பி கொடுத்தால் போதும். அதே போல அதற்காக பெறப்பட்ட பண விபரம். தற்போதைய சூழலில் அனைத்து பண பரிமாற்றங்களும் வங்கி மூலமாகவே நடப்பதால், வங்கியில் எந்தெந்தெந்த தேதியில் தொகைகள் பெறப்பட்டன போன்ற விபரங்களையும், சொத்து விற்பனையை பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ததற்கான ஆவணங்களை காட்டி, இந்த தகவல்கள் வரி தாக்கல் படிவத்தில் காட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தால் போதுமானது. வேலை சுலபம்.
விளக்கம் மட்டுமே: இந்த 143 (2) நோட்டீஸ் என்பது விளக்கம் கேட்டு வருகின்ற நோட்டீஸ் தானே தவிர வரி செலுத்துபவர் ஏதோ குற்றம் செய்துவிட்டார், அவர் மீது சந்தேகம் கொண்டு வருமான வரித் துறை விசாரணை மேற்கொள்கிறது என்று அர்த்தம் கிடையாது. பெரும்பாலும் ஸ்க்ரூடினிங்க் அசஸ்மெண்ட் ஒரு சரிபார்ப்பு நடவடிக்கையாகவே இருக்கும். ஒரு வருமான வரி அதிகாரியிடம் ஆண்டுக்கு 10 ஆயிரம் வரித் தாக்கல்கள் மதிப்பீட்டிற்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் பணம், சொத்து பரிமாற்ற நடவடிக்கைகளைப் பொறுத்து ஒரு 20 வரித்தாக்கல் கணக்குகள் மீண்டும் ஸ்க்ரூடினைசிங் வரலாம்.
பெரிய அளவிலான பங்கு வர்த்தகம், சொத்து விற்பனை, பணப் பரிமாற்றம் நடந்திருந்தால் அந்த குறிப்பிட்ட பரிமாற்றத்தைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்கப்படும். அதற்கு நாம் விளக்கம் கொடுத்தால் போதும். ஒருவேளை வரி செலுத்துபவர் தரும் விளக்கம் வருமான வரித் துறை அதிகாரிக்கு ஏற்புடையதாக இல்லை என்றால், அந்த குறிப்பிட்டத் தொகையையும் வருமானத்தில் சேர்த்துக்கொண்டு அதற்கும் வரி விதிப்பார்கள். நாம் வரி கட்டலாம் அல்லது மேல் முறையீட்டிற்கு போகலாம்.
நோட்டீஸ் 142 (1): ஸ்க்ரூட்டனிங்க் மதிப்பீட்டிற்காக நோட்டீஸ் அனுப்பவது போல, வருமான வரித் தாக்கல் செய்யச் சொல்லியும் வரிமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீஸ் 142 (1) என்று அழைக்கப்படுகிறது. ஒரு வரி செலுத்துபவர் தொடர்ந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வருகிறார். திடீரென ஒரு ஆண்டில் (கடந்த ஆண்டு) ஏதோ ஒரு காரணத்தினால் அவர் வரி தாக்கல் செய்யவில்லை. வரிசையாக எல்லா ஆண்டுகளும் வரி தாக்கல் செய்து வந்த நபர் ஒரு ஆண்டில் மட்டும் வரித் தாக்கல் செய்யவில்லை என்றால், ஏன் வரிதாக்கல் செய்யவில்லை, உங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யுங்கள் என்று கூறி வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த நோட்டீஸே 142 (1) என்றழைக்கப்படுகிறது.
சில நேரங்களில் வருமான வரித்துறை கூடுதல் ஆவணங்கள் கேட்கும் அல்லது கேட்காமலும் போகலாம். அடிப்படையில், வரி செலுத்துபவர் தாக்கல் செய்யாத வருமான வரி கணக்கைக் குறிப்பிட்ட தேதியில் தாக்கல் செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும்.
வருமானம் இல்லை: சரி, குறிப்பிட்ட அந்த ஆண்டில் வரி செலுத்துபவர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது, வரி செலுத்துபவருக்கு அந்த ஆண்டு வருமானம் வராமல் இருக்கலாம். சிலருக்கு எல்லா ஆண்டுகளும் ஒரே மாதிரியான வருமானம் இருக்காது. வரி செலுத்துபவர் வேலை இழந்திருக்கலாம், தொழில் பாதிப்படைந்திருக்கலாம் போன்ற பல காரணங்களால் வருமானம் இல்லாமல் போயிருக்கலாம். வருமானம் இல்லாமல் ஏன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வரி செலுத்துபவர் நினத்திருக்கலாம். ஆனால் வரி செலுத்துபவருக்கு அந்த ஆண்டில் வருமானம் இல்லை என்பது வருமான வரித்துறைக்கு தெரியாது.
வரி தாக்கல் அவசியம்: வருமானமே இல்லாத போதும் ஏன் வரித்தாக்கல் செய்யவேண்டும் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கலாம். வராத அல்லது இல்லாத வருமானத்திற்கு வரி தாக்கல் செய்ய சொல்லி வருமான வரித்துறை சொல்வதில்லை. தொடர்ந்து வரி தாக்கல் செய்த ஒருவர் அந்தாண்டு மட்டும் வரி தாக்கல் செய்யவில்லை என்று கேட்டு, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யச் சொல்கிறார்கள். வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை அல்லது வருமானமே இல்லை என்றாலும் கூட அதனைக் குறிப்பிட்டு வருமான வரி படிவம் தாக்கல் செய்திருந்தால் இந்த சிக்கல் வர வாய்ப்பில்லை.
நோட்டீஸ் 148: ஏதோ ஒரு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கில் சந்தேகம், கணக்கு தப்பாக வந்திருக்கிறது, அதை மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வருமான வரித் துறை முடிவு செய்கிறது என்றால் வருமான வரித் துறை, வருமான வரிச்சட்டம் பிரிவு 148-ன் படி நோட்டீஸ் அனுப்பலாம். பழைய கணக்கில் சந்தேகமா என்று வரி செலுத்துபவர் கவலையடைத் தேவையில்லை. தங்களுக்கு என்னென்னத் தகவல்கள் வேண்டும் என்று அந்த நோட்டீஸ்-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் வருமான வரித் துறையில் இருந்து வரும் அனைத்து நோட்டீஸ்களும் அவர்களுக்கு என்னென்ன தகவல்கள் வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, வருமான வரி தாக்கல் செய்யுங்கள், காப்பி ஆஃப் புக்ஸ் ஆஃப் அக்கவுண்ட்ஸ் கொடுங்கள் என்று வருமான வரித்துறைக்கு தேவையானவற்றை கேட்டிருப்பார்கள்.
சரி பார்ப்பதே பிரதானம்: இந்த தகவல்கள் அனைத்தும் சரி பார்த்துக் கொள்ளும் காரணங்களுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது என்பதை வரி செலுத்துபவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக பல சமயங்களில் வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ்கள், அவர்களிடம் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதாக, விபரங்கள் கேட்பதாகவே இருக்கும். விபரங்கள் மட்டும் தான் கேட்கிறார்கள். கேட்கின்ற கேள்விகளுக்கு உரிய ஆவணங்கள், ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்தால் போதும் எந்த சிக்கலும் இல்லை.
நோட்டீஸ் 156: இவை இல்லாமல் டிமாண்ட் நோட்டீஸ் என்று ஒன்று வரும். வரி செலுத்துபவர் வருமான வரி தாக்கல் செய்திருப்பார். அதில், அவரின் அனைத்து வருமானங்களையும் தெரிவித்து அதற்குரிய வரித் தொகையை கட்டியிருப்பார். ஆனால் மதிப்பீடு செய்யும்போது அவர் செலுத்திய தொகையை விட கூடுதல் தொகை வரியாக செலுத்த வேண்டி இருந்தால், அவர் செலுத்தியதை தவிர்த்த கூடுதல் தொகையைக் கட்டச் சொல்லி டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பப்படும் இதனை 156 நோட்டீஸ் என்பர். வரி செலுத்துபவர் அந்தக் கூடுதல் தொகையை செலுத்திவிட்டாலேபோது, விளக்கம் தர தேவையில்லை.
வருமான வரித் துறையில் இருந்து வரும் நோட்டீஸ் வரி செலுத்துபவர்களுக்கு நினைவூட்டல், விளக்கம் கேட்டுப் பெறல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக தான் இருக்கும். அதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.