

இந்தியாவில் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சேர்ந்து உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 1.8 மில்லியன் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வியைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கல்விக்கான செலவு பெரும் தொகையாக உருவெடுத்துள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு கூட கல்வி செலவு என்பது மலைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுவிலகும் அவல நிலையும் உள்ளது. இந்த நிலையை மாற்றவே வங்கிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வி கடன் வாங்கி படிக்க வைக்கலாம் என பலரும் எண்ணுகின்றனர். ஆனால் கல்விக் கடனை எப்படிப் பெறுவது என்பது பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் விஷயம். எனவே கல்விக் கடன் பெற விரும்புவோர் அதற்கு முன்பாகவே சில விஷயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
யாருக்கு கிடைக்கும்?
வீட்டுக்கடன் உட்பட மற்ற பல கடன்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் ஏதும் கல்விக் கடனுக்கு இல்லை. எனினும் கல்வி கடன் பெற சில நிபந்தனைகள் உள்ளன. மாணவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்தியாவில் பல்கலைக்கழக மானியக் குழுவான யூஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்துப் படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டுத் தொழில் பயிற்சியிலும் தொழில்நுட்பப் படிப்புகளிலும் சேரும் மாணவர்களுக்கும் கூட கல்விக் கடன் பெற முடியும். யாருக்கு கடன் கிடைக்கும். இளங்கலை திட்டம், முதுகலை திட்டம், முனைவர் படிப்புகள் மற்றும் பிஎச்டிகளுக்கு கல்விக் கடன்கள் கிடைக்கும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைக்கும்.
மாணவர் தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் சேருவது, மாணவரின் தகுதி அல்லது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். சில வங்கியில் இந்த விதிமுறை மாறுகிறது.
கல்விக் கடனை ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பெறலாம். அதாவது ஒரு குழந்தைக்கு கல்வி கடன் பெற்றிருந்தாலும் அடுத்த குழந்தைக்கு கல்வி கடன் பெற முடியும். அதுமட்டுமின்றி ஒரே வங்கியிலும் பெறலாம்.
குடும்பத்தில் வீட்டுக்கடன், தனிநபர் கடன், தொழில் கடன் என வேறு எந்தக் கடன் வாங்கியிருந்தாலும் கூடுதலாக கல்விக்கடன் பெற எந்த தடையும் இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
மத்திய அரசின் ‘வித்யாலட்சுமி போர்டல்’ 40 வங்கிகளுடன் இயங்கி வருகிறது. அதில் 70-க்கும் மேற்பட்ட கல்விக் கடன் திட்டங்கள் உள்ளன. அதில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். நம்முடைய விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அதில் தெரிந்துகொள்ளலாம்.
வங்கிகளுடைய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அளிக்கப்படும் விண்ணப்பங்களை எக்காரணம் கொண்டும் கிளை மேலாளர்கள் நிராகரிக்க முடியாது. பிராந்திய மேலாளர் தகுதியில் உள்ளவர்கள் அதுவும் தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே நிராகரிக்க முடியும். 30 நாள் காலவரையறைக்குள் விண்ணப்பதாரருக்குக் கடன் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிப்புக்கான தகுந்த பதில் சொல்ல வேண்டும்.
இதுமட்டுமின்றி கல்விக்கடனை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வங்கி என்ற அடிப்படையில் பகுதி பிரித்து இவ்வளவு சதவீதம் கொடுக்க வேண்டும் என்பது செயல்பாட்டில் உள்ளது. எனவே நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய வங்கியை அணுகி கல்விக் கடன் பெறலாம். தகுதியான நபர் என்றால் உடனடியாக கல்விக் கடன் கிடைக்கும். இதுமட்டுமின்றி நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிளையும் அணுகலாம். வாடிக்கையாளரின் செயல்பாட்டை வைத்து அந்த வங்கிகள் முன்னுரிமை அடிப்படையில் கல்விக் கடன் கொடுக்கலாம்.
எவ்வளவுத் தொகை?
கல்வி கட்டணம் மட்டுமின்றி கல்லூரி, விடுதி, தேர்வு, நூலகம், ஆய்வுக் கூடம், வெளிநாட்டுக்கான பயணச் செலவு, காப்பீட்டுத்தொகை, உபகரணங்கள், சீருடை, கணினிக்குரிய தொகை, புராஜெக்ட், அதற்கான பயணச் செலவு ஆகியவற்றையும் சேர்த்துக் கடன் கோரலாம். குறிப்பாக வெளிநாட்டுக்கு சென்று படிப்பவர்கள் இத்தகைய வகையில் கல்வி கடன் கோருகின்றனர்.
கல்வி கடன் வழங்குவதில் மூன்று பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் ரூ. 4 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். இரண்டாவதாக, ரூ. 4- ரூ. 7.5 லட்சம் வரை கடன் கிடைக்கும். மூன்றாவது ரூ.7.5 லட்சம் முதல் எவ்வளவு கடன் தொகை தேவைப்படுகிறதோ அந்தக் கடன் தொகை கோர முடியும்.
இதில் முதல் பிரிவில் பெரிய அளவில் நிபந்தனைகள் இருப்பதில்லை. பெற்றோர் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர் கையெழுத்திட வேண்டும். மாணவர் மைனராக இருந்தால் இணைக் கடன் தாரராக கருதப்படுவார்.
திருமணமான பெண்களுக்கு பெற்றோர் மற்றுமின்றி அவரது கணவனின் பெற்றோர் கூட கையெழுத்து இடலாம். இந்த பிரிவுக்கு பங்குத்தொகை கிடையாது. அதுபோலவே ஜாமீன், அடமானம் என எதுவும் தேவையில்லை.
இரண்டாவது பிரிவில் ரூ. 4 முதல் 7.5 லட்சம் வரையிலான கடனுக்கு மாணவர், பெற்றோர், மூன்றாம் நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும். எனினும் அடமானம் எதுவும் தேவையில்லை. ரூ. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கடனுக்கு 5 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். இதை உடனடி செலுத்த வேண்டும் என்பதில்லை. வேறு உதவித் தொகை கிடைத்தால் அதில் கழித்துக் கொள்ளலாம்.
மூன்றாவது பிரிவில் பெறப்படும் கடன் தொகைக்கு அடமானம் தேவை. அவை, இடமாகவோ கட்டிடங்களாகவோ இருக்கலாம். விவசாய நிலம், வீட்டு மனை, பிளாட், வீடு, நிலையான வைப்புநிதி சான்றிதழ், ரெக்கரிங் டெப்பாசிட், தங்க வைப்பு, பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி பங்குகள் போன்ற சொத்துக்களை அடமானம் வைத்து கல்விக் கடன் பெறலாம். இதுபோலவே பயனாளித் தொகையும் செலுத்த வேண்டும்.
மற்ற கடனைப் போலவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது ஒப்புதலுக்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் இது முன் நிபந்தனை அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் ஒருவரின் முந்தைய வரலாற்றை கணக்கில் கொள்வது என்பது அனைத்து கடன்களுக்குமே ஒரு அளவுகோளாகும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதங்கள் மாறுபடும். சராசரியாக ஆண்டுக்கு 10 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றும்போது பல வங்கிகள் வட்டி விகிதத்தையும் மாற்றுகின்றன.
கல்விக் கடனுக்கு மத்திய அரசு வட்டி மானியம் அளிக்கிறது. ஆண்டுக்கு 4 லட்சம் வருமானம் பெறுவோர் இப்பலனை அனுபவிக்க முடியும். அனைத்துச் சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைப் பெறத் தகுதியானவர்கள். கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே வருமானச் சான்றையும் இணைத்து வழங்க வேண்டும்.
படிப்பு முடித்தவுடன் ஓராண்டு அல்லது வேலை கிடைத்த 6 மாதங்களுக்குப் பின்னர் கடன்தொகையைத் தவணையாகச் செலுத்த வேண்டும். பொதுவாக ரூ.7.5 லட்சம் வரையான கடனை 4 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். 7.5 லட்சத்துக்கும் மேலான கடன் தொகையை 15 ஆண்டுகள்வரை கட்டலாம்.
தேவையான ஆவணங்கள்
கல்விக்கடனுக்கான ஆவணங்களை பொறுத்தவரையில் வழக்கமான KYC எனப்படும் கடன் கோருபவர்களின் அடையாள சுய விவர ஆவணங்கள் அவசியம் தேவை. இது தவிர பெற்றோரின் சம்பளம் மற்றும் வருமான வரிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களையும் வங்கிகள் கோருகின்றன. கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர் மற்றும் ஜாமீன் வழங்கும் நபர்களின் வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களும் கோரப்படுகின்றன. இதுவும் வங்கிகளை பொறுத்து மாறக்கூடியது.
வருமான வரி விலக்கு
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80E இன் கீழ், உங்கள் கல்விக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த விலக்கு, இந்தியா, வெளிநாட்டு படிப்பு என்று அனைத்து விதமான கல்விக் கடனுக்கும் பொருந்தும். வரி விலக்கு கல்விக் கடனின் வட்டிப் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். அசல் தொகைக்கு அல்ல. இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. வங்கியின் அசல் மற்றும் வட்டி குறித்த விவர அறிக்கையை வங்கியில் பெற்று சமர்பிக்க வேண்டும். இதன் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம்.