

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் ஒரு தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதாகும். ஆனால், ஒரு நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றும் நபர்கள் மட்டுமே இதன் மூலம் பயன் பெற முடியும்.
அரசு மற்றும் நிறுவனங்கள் சாராத மக்களுக்கும் எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கவும், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்படுத்தப்படுவது public provident fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். பிபிஎப் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டம் 1968 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
எல்லோரும் முதலீடு செய்யலாம்: இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக சுய தொழில் செய்வோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் வராதவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து அதிக பயன் பெற முடியும். பிபிஎப் நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். நீண்டகாலம் முதலீடு செய்து வயதான காலத்தில் அதிகமான லாபத்தை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பானதாகவும் அரசு சார்ந்ததாக இருப்பதாலும் வருமான வரி சேமிப்பு வசதிகள், கடன் வசதிகள் என பலவற்றை இந்த திட்டம் கொண்டிருப்பதால் அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.
பிபிஎப் கணக்கைத் தொடங்க ரூபாய் 100 இருந்தால் தொடங்கி விடலாம். ஆனால் ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதலீடு செய்ய வேண்டும். இளமைக்காலத்தில் இதில் சேர்ந்து விட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம்.
தபால் நிலையங்களில் பிபிஎப் கணக்கு தொடங்கலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்களிலும் பிபிஎப் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது.
எவ்வளவு தொகை?
பிபிஎப் கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500/- ஐ முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதேபோல, ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 மட்டுமே அதிகபட்சமாக முதலீடு செய்ய முடியும். இதனை ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவே செலுத்தலாம். எனினும் அதிகபட்மாக 12 தவணைகள் மட்டுமே செலுத்த முடியும்.
பிபிஎப் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 15 ஆண்டுகள் கால அளவாகும். முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்க முடியாது. திட்டம் கண்டிப்பாக 15 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். பிபிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையும் எடுக்க வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே எடுக்க முடியும். அதிகபட்சம் நமது சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை கடனாக பெற முடியும்.
பிஎப் வைப்பு நிதிக்கு மற்ற சிறு சேமிப்புத் திட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது. வங்கியில் செலுத்தப்படும் மற்ற முதலீடுகளை காட்டிலும் பிபிஎப் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
> இது, நெல்லை ஜெனா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்