

வருங்கால வைப்பு நிதி என்பது பணியாளர்கள் வாங்கும் மாதச்சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பணியாற்றும் நிறுவனம் ஒரு தொகையையும் சேர்த்து வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதாகும். ஆனால் ஒரு நிறுவனத்தில் பணியாளராக பணியாற்றும் நபர்கள் மட்டுமே இதன் மூலம் பயன் பெற முடியும்.
அரசு மற்றும் நிறுவனங்கள் சாராத மக்களுக்கும் எதிர்கால நிதி பாதுகாப்பு வழங்கவும், ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பை வழங்கவும் செயல்படுத்தப்படுவது public provident fund எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். பிபிஎப் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டம் 1968 ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
எல்லோரும் முதலீடு செய்யலாம்
இந்த திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக சுய தொழில் செய்வோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் வராதவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து அதிக பயன் பெற முடியும். பிபிஎப் நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். நீண்டகாலம் முதலீடு செய்து வயதான காலத்தில் அதிகமான லாபத்தை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பானதாகவும் அரசு சார்ந்ததாக இருப்பதாலும் வருமான வரி சேமிப்பு வசதிகள், கடன் வசதிகள் என பலவற்றை இந்த திட்டம் கொண்டிருப்பதால் அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.
பிபிஎப் கணக்கைத் தொடங்க ரூபாய் 100 இருந்தால் தொடங்கி விடலாம். ஆனால் ஒரு நிதியாண்டில் குறைந்தது ரூ.500 முதலீடு செய்ய வேண்டும். இளமைக்காலத்தில் இதில் சேர்ந்து விட்டால் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது மிகப் பெரிய தொகையைப் பெறலாம்.
தனிநபர்கள், தொடர்ச்சியான வருமானமுள்ள மாத சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பினருமே பிபிஎப் கணக்கை தொடங்க முடியும்.
தபால் நிலையங்களில் பிபிஎப் கணக்கு தொடங்கலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்களிலும் பிபிஎப் கணக்கு தொடங்கும் வசதி உள்ளது. தனிநபர்கள் வயது வராத குழந்தைகள் மற்றும் காப்பாளர்களால் பராமரிக்கப்படும் குழந்தைகள் ஆகியோரின் பெயரிலும் பிபிஎப் கணக்கை தொடங்க முடியும்
எவ்வளவு தொகை?
பிபிஎப் கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500/- ஐ முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதேபோல, ஒரு நிதியாண்டில் ரூ.150,000 மட்டுமே அதிகபட்சமாக முதலீடு செய்ய முடியும். இதனை ஒரே தவணையாகவோ அல்லது பல தவணைகளாகவே செலுத்தலாம். எனினும் அதிகபட்மாக 12 தவணைகள் மட்டுமே செலுத்த முடியும்.
பிபிஎப் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 15 ஆண்டுகள் கால அளவாகும். முதலீடு செய்யும் பணத்தை 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்க முடியாது. திட்டம் கண்டிப்பாக 15 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். பிபிஎப் கணக்கில் உள்ள மொத்த தொகையும் எடுக்க வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு பின்பு மட்டுமே எடுக்க முடியும்.
நிதி தேவைக்காக அந்த தொகையில் ஒரு பகுதியை சில நிபந்தனைகளுடன் எடுக்க முடியும். 7வது ஆண்டிலிருந்து, பிபிஎப் கணக்கில் உள்ளதொகையின் ஒரு பகுதியை வருடத்திற்கு ஒரு முறை எடுக்க முடியும். மேலும், அந்த தொகையானது நான்காவது ஆண்டின் முடிவில் உள்ள தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது.
கடன் பெற முடியும்
பிபிஎப் தொகையை முன்கூட்டியே எடுக்க முடியாது என்றாலும் அதில் இருந்து குறிப்பிட்ட தொகையை கடனாக பெற முடியும். இந்த கடன்களை மூன்றாம் ஆண்டின் முடிவிலிருந்து ஆறாவது ஆண்டு வரையிலும் பெற முடியும். அதிகபட்சம் நமது சேமிப்பில் இருந்து 25 சதவீதத்தை கடனாக பெற முடியும்.
இந்த கடன்கள் 24 மாதங்களில் கட்டி முடிக்கப்பட வேண்டும். இந்த கடனுக்கான வட்டி விகிதமாக பிபிஎப் நிதிக்கு அப்போது இருக்கும் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். 3 முதல் 6-வது ஆண்டுகளுக்குள் ஏற்கெனவே பெற்ற கடனை முழுவதுமாக செலுத்தி இருந்தால் இரண்டாவது முறை கடன் பெறலாம்.
கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
ஒரு நிதியாண்டில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச நிதியை முதலீடு செய்யாமல் போனால் கணக்கு முடிவுக்கு வந்து விடும். எனவே குறைந்தபட்ச தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலுத்துவது அவசியமாகும். எனினும் இயல்புநிலை கட்டணத்தை, சந்தா நிலுவைகளுடன் செலுத்துவதன் மூலம் அந்த கணக்கை மீண்டும் தொடர முடியும்.
பிபிஎப் கணக்குகளுக்கு வட்டி விகிதம் ஒவ்வொரு மாதத்தின் 5-ம் தேதி முதல் கடைசி தேதிக்குள் இருந்த குறைந்தபட்ச தொகையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. எனவே ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5-ம் தேதிகளுக்குள் பிபிஎப் கணக்கில் பணத்தை செலுத்தவது வட்டி விடுபடாமல் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை கூட்டு வட்டி நிதியாண்டு நிறைவு பெறும் மார்ச் 31-ம் தேதி கணக்கில் வரவு வைக்கப்படும்.
பிபிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும், பிபிஎப் கணக்கில் கிடைக்கும் மொத்த முதிர்வு தொகை மற்றும் அதற்கு வழங்கப்படும் வட்டி ஆகியவற்றிற்கு வரி கிடையாது. வட்டிகளின் மீதான வரி விலக்கு மட்டுமல்லாது முதலீடுகளுக்கு சொத்து வரியிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது.
பிபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களுடைய கணக்கினை 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும் கூட தொடரலாம். அதனை 5 ஆண்டுகள் பிரிவுகளாகவோ அல்லது 15 ஆண்டுகளாகவோ மீண்டும் தொடர முடியும். இந்த கணக்கு முடியும் வரையிலும், நிலுவையிலுள்ள கணக்கிற்கு பிபிஎப் நிதியின் படி வட்டி விகிதம் அந்த கணக்கு முழுமையாக முடிக்கப்படும் வரை வரவு வைக்கப்படும்.
பிபிஎப் கணக்கு காலம் முடிந்த பின்னர் புதிதாக தொகையை செலுத்தாவிட்டாலும் கூட அந்த தொகையிலிருந்து எந்தவொரு தொகையையும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எடுக்கும் வசதி உள்ளது.
எனினும், ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அவ்வகையில் பணத்தை பிபிஎப் கணக்கில் இருந்து எடுக்க முடியும். நீங்கள், 15 ஆண்டுகள் முடிந்த பின்னரும், உங்கள் முதலீடுகளை தொடரும் பட்சத்தில் அதிகரிக்கப்பட்ட ஒவ்வொரு 5 ஆண்டுகளின் தொடக்கத்தில் 60 சதவீத தொகையை எடுக்ககலாம்.
பிபிஎப் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தால் அவர் சேமித்த பணம் மற்றும் அதன் வட்டி ஆகியவை அவருடைய வாரிசுதாரருக்கு வழங்கப்படும். அதுபோலவே பிபிஎப் திட்டத்தில் சேர்ந்தவர் மரணமடைந்தால் பிபிஎப் கணக்கில் உள்ள தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக அவரது வாரிசுதாரர்களால் எடுத்துக் கொள்ள முடியும்.
வட்டி எவ்வளவு?
முதலீடு செய்யப்படும் தொகைக்கான வட்டி விகிதம் எவ்வளவு என்பதை மத்திய அரசு முடிவு செய்து அவ்வப்போ அறிவிக்கும். தற்போது பிபிஎப் வட்டி விகிதம் என்பது பிபிஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதம் இதனால் பிஎப் வைப்பு நிதிக்கு மற்ற சிறு சேமிப்புத் திட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் தொடர்ந்து கிடைக்கிறது. வங்கியில் செலுத்தப்படும் மற்ற முதலீடுகளை காட்டிலும் பிபிஎப் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.