தேசிய சேமிப்பு பத்திரம்: யாருக்கு ஏற்ற முதலீடு?- அடிப்படை தகவல்கள்

தேசிய சேமிப்பு பத்திரம்: யாருக்கு ஏற்ற முதலீடு?- அடிப்படை தகவல்கள்
Updated on
3 min read

இந்தியர்களில் நடுத்தர வருமான பிரிவினரில் பெரும்பாலானோருக்கு வருமான வரியை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது உண்டு. இதற்காக இன்சூரன்ஸ் தொடங்கி பல்வேறு விதமான முதலீடுகளை செய்வது வழக்கம்.

அந்த வகையில் வருமான வரி கெடு முடியும்போது கூட முதலீட்டை கணக்கில் காட்ட பெருமளவு தேர்வு செய்யும் திட்டம் என்எஸ்சி (National saving certificate) எனப்படும் தேசிய சேமிப்பு பத்திரமாகும். அடிப்படையில் இது ஒரு சேமிப்பு திட்டம் தான். இதன் மூலம் நீண்டகால அடிப்படையில் வட்டி வருவாயும், அதற்கு வருமான வரி விலக்கும் பெற முடியும்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு பெரும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கு அரசுக்கு பெரிய அளவில் நிதி தேவைப்பட்டது. மக்களிடம் இருந்து பணத்தை திரட்டி அதை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில் தொடங்கப்பட்டதே இந்த தேசிய சேமிப்பு பத்திரமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த முதலீட்டையும் ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்தை நோக்கி செலுத்துவதே அரசின் நோக்கமாகும்.

யாருக்கு பொருத்தம்?

தேசிய சேமிப்பு பத்திரம் என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை , ஒருவர் தபால் நிலையத்தில் எளிதாக பெறலாம். இது சிறிய மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம் என்பது மிகவும் பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லாத ஒரு சேமிப்பு திட்டமாகும்.

தேசிய சேமிப்பு பத்திரத்தை முதிர்வு காலம் முடிந்த பிறகு எவ்வளவு தொகை கொடுத்து வாங்கினோமோ, அந்த தொகையும் அதற்கான வட்டியும் சேர்த்து திருப்பி வாங்கிக்கொள்ள முடியும். வட்டியை தனியாக பெறும் வசதியும் உண்டு.

பொது வருங்கால வைப்பு நிதி, தபால்நிலைய பிக்சட் டெபாசிட் போன்று இந்த திட்டமும் ரிஸ்க் இல்லாத அதேசமயம் நிலையான வட்டியை பெறும் திட்டமாகும். இதனை சிறியவர்களுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ கூட்டுக் கணக்காக அருகில் வாங்கலாம்.

தேசிய சேமிப்பு பத்திரம் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், பணம் செலுத்தும் முறை, கணக்கு வகை மற்றும் பல போன்ற விவரங்களைக் கொண்ட என்எஸ்சி முதலீட்டு படிவத்தை நிரப்ப வேண்டும். படிவத்துடன் தனிநபர் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று மற்றும் புகைப்படம் தொடர்பான ஆவணங்களையும் இணைக்க வேண்டும். பின்னர், தனிநபர்கள் தேவையான பணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.

காசோலை, வரைவோலை, தபால் நிலையத்திலிருந்து மாற்றுவதன் மூலம்சேமிப்பு கணக்கு அல்லது மின்னணு பரிமாற்றம் மூலம். பணம் செலுத்தப்பட்டதும், குறிப்பிட்ட தொகையின் அடிப்படையில் முதலீடு செய்யப்பட்ட தனிநபர்களின் பெயரில் அஞ்சல் அலுவலகம் சான்றிதழ் வழங்குகிறது.

ஒருவரிடம், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருக்கும் பட்சத்தில், இணைய வங்கியை பயன்படுத்தி மின்னனு முறையில் கூட தேசிய சேமிப்பு திட்டத்தை வாங்கலாம்.

எவ்வளவு முதலீடு?

குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. ரூ.100களின் மடங்காக முதலீடு செய்யலாம். என்எஸ்இ வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையாக ஏற்று கொள்கின்றன. எனவே அவசர காலத்தில் இதனை வைத்து கடன் பெறவும் முடியும்.

இந்ததிட்டத்தில் பொதுவாக வட்டி ஆண்டு தோறும் மறு முதலீடு செய்யப்பட்டு முதிர்வு காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படுகிறது. ஒரு முதலீட்டாளர், தன்னுடைய குழந்தைகள் உட்பட எந்தவொரு குடும்ப உறுப்பினரையும் வாரிசுதாரராக நியமிக்க முடியும்.

முதலீட்டாளரின் எதிர்பாராத இறப்பு நிகழும் போது, அவருடைய வாரிசுதாரருக்கு அந்த தொகை செல்லும். முதலீட்டாளர் பத்திரம் முதிர்ச்சி அடையும் போது அதில் சேர்ந்து உள்ள முழு தொகையையும் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்

தற்போது இந்த திட்டத்திற்கு 6.8% வட்டி கிடைக்கிறது. மற்ற பல பிக்சட் டெபாசிட்டுகளை விடவும் இது கூடுதல் வட்டியாகும். எனினும் வட்டி விகிதம் என்பது மத்திய நிதியமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அவ்வப்போது மாறக்கூடியதாகும். அதேசமயம் முதலீடு செய்யப்பட்டு விட்டால், அதனை பெறும்போது என்ன வட்டி விகிதம் வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்படுகிறதோ அந்த வட்டி விகிதம் மாறாது. பத்திரம் முடிவடையும் காலத்துக்கு முன்பாக அரசு இந்த திட்டத்துக்கான வட்டியை மாற்றிானலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வட்டியே வழங்கப்படும். ஆனால் புதிதாக வாங்கும்போது அப்போதைய வட்டி விகிதத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் இருக்கும்.

வரிச்சலுகை

தேசிய சேமிப்பு சான்றிதழ் மூலம் கிடைக்கும் பணத்திற்கு, டிடிஎஸ் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். அதிகபட்மாக ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி சலுகை பெற முடியும்.

பத்திரம் முதிர்ச்சியடைந்து பெறப்படும் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. ஆனால் ஒருவரின் வருமான வரி வரம்பை பொறுத்து முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வட்டியை மறு முதலீடு என்ற அடிப்படையில் வரி விலக்கு பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திரம் வாங்க சில நிபந்தனைகள் உள்ளன. இந்தியாவில் வசிப்பவர்கள் தேசிய சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவர். என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அறக்கட்டளைகள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பம் கூட்டாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இந்திய குடியுரிமை இல்லாத நபர்கள் தேசிய சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. தனிநபர்கள் வாங்கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in