வருமான வரி | வரி தாக்கல், டிமாண்ட், ரீ ஃபண்ட் - சில அடிப்படை புரிதல்கள்

வருமான வரி | வரி தாக்கல், டிமாண்ட், ரீ ஃபண்ட் - சில அடிப்படை புரிதல்கள்
Updated on
3 min read

ஒவ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரியில் இருந்து ஜூலை மாதம் இறுதி வரையில் பத்திரிகைகள் தொடங்கி பொதுமக்கள் வரை அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று "இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்". குறிப்பாக அரசு, தனியார் துறை மாதச் சம்பளக்காரர்கள். நிதியாண்டு முடிந்த 120 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்ற விதியால் சம்பளக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் பரபரத்துக் கொண்டிருப்பார்கள்.

கரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பின்னர் அனைத்து பரிமாற்றங்களும் ஆன்லைன் வழி மாற்றப்பட்டு, முகமில்லா மதிப்பீடு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் மூலமாக வருமான வரி தாக்கல், அதன் மீதான மதிப்பீடு, ரீ ஃபண்ட், டிமாண்ட் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

இவை குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி...

“வருமான வரியைப் பொறுத்தவரையில் முதல் அடி அல்லது தொடக்க நிகழ்வு என்பது வரி தாக்கல் செய்வது. வரி தாக்கல் செய்தவதற்கு நிரந்தரக் கணக்கு எண் எனப்படும் "பான் எண்" அவசியம். அப்படியென்றால் பான் எண் வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்யவேண்டுமா என்ற கேள்வி நமக்குள் எழும். வரி செலுத்தும் அளவிற்கு உங்களுக்கு ஆண்டு வருமானம் இருந்தால் அல்லது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் கட்டாயம் வரி தாக்கல் செய்ய வேண்டும்.

முன்பெல்லாம் வருமானக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித் துறை அலுவலகத்திற்குச் சென்று, உரிய படிவங்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து பின்னர் வரி தாக்கல் செய்ய வேண்டும். தற்போது இணையம் மூலம் வரி தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் அனைத்து துறைகளையும் போல வருமான வரித் துறையும் ஆன்லைன் வசதியை நடைமுறைப்படுத்துகிறது. www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்றால், உங்களுக்கு என்ன தகவல் வேண்டும் என்று கேட்டு, அதற்கான வழிகாட்டுதலைச் செய்கிறது. இதில் தற்போது உள்ள கூடுதல் சிறப்பம்சம், உங்களுடைய வருமானம் இவ்வளவு என்று சொன்னால், அதற்குரிய வரி எவ்வளவு என்ற தகவலை அந்தத் தளமே உங்களுக்கு தந்து விடும்.

உங்களுடைய வருமானத்துடன், என்ன என்ன கழிவுகள் உண்டு, என்ன வகையான சேமிப்புகள் இருக்கிறது என்ற தகவல்களைத் தந்தால் மட்டும் போதும், நாம் கட்டவேண்டிய வரித் தொகையை கணினியே கூட்டிக் கழித்து தெரிவித்துவிடும். உடனடியாக நமக்கான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தி விட்டு, அதனையும் நாம் வரித் தாக்கல் தகவலுடன் இணைத்து தாக்கல் செய்தாலே போதும், வேலை சுலபமாக முடிந்துவிடும்.

இணையச் சிக்கல்: சரி, இவ்வாறு ஆன்லைன் மூலம் வரி தாக்கல் செய்யும்போது பிரச்சினைகள் வருமா, வந்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும்? முதலில் கனெக்டிவிட்டி எனப்படும் இணைப்பு பிரச்சினைதான் வரும். இது இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை என்றாலும், இதற்கும் வருமான வரித் துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்றாலும் அந்தச் சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இரண்டாவதாக ஒருவர் வருமான வரி தாக்கல் செய்துவிட்டார். அதில் ஏதாவது தவறு இருந்தால் என்னவாகும்? பெரும்பாலானவர்களுக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் கண்டிப்பாக ரிவைஸ்டு ரிட்டர்ன் எனப்படும திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்ய முடியும். தவறாக பதிவு செய்த விஷயங்களை நாம் சரிசெய்து மீண்டும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். இதற்கு ரிவைஸ்டு ரிட்டன் அல்லது திருத்தப்பட்ட படிவம் என அழைக்கப்படுகிறது.

தவறுகளைத் திருத்தலாம்: ஒருவேளை திருத்தப்பட்ட படிவம் தாக்கல் செய்யவில்லை. வருமானத்தையே தவறுதலாக எழுதிவிட்டால் என்ன செய்வது. அதாவது, வருமானம் ரூ.1,10,000 ( ஒரு லட்சத்து 10 ஆயிரம்) என்பதற்கு பதிலாக ரூ.11,00,000 (பதினொரு லட்சம்) என எழுதிவிட்டார் என்றால் 11 லட்சத்திற்கு வரி விதிக்கப்படும்போது வரித் தொகை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான சூழ்நிலைகளிலும் கூட ஒருவர் மேல்முறையீடு போக முடியும்.

தவறாக வருமானத்தை பதிவு செய்துவிட்டேன் என்பதை நிரூபித்தால் மட்டும் போதும். சில நேரங்களில் அதற்கான வழிமுறைகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். முன்பு மதிப்பீட்டு அதிகாரியை நேரில் சந்தித்துப் பேசமுடியும். தற்போது முகமில்லா மதிப்பீட்டு முறையில் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும், பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

சம்மரி அசஸ்மென்ட்: வரி தாக்கல் செய்த பின்னர் என்ன நடக்கும். அதற்கு பிறகான விஷயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சென்ட்ரல் பிராசஸிங்க் யூனிட் என்று ஒன்று தனியாக இருக்கிறது. இது பெங்களூருவில் இருக்கிறது. அங்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகள் அனைத்தையும் கணினி மூலமாக பிராசஸ் செய்யப்படும். கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்று கணினியே சரிபார்த்து, அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் கணினியே ஒரு மதிப்பீட்டை செய்துவிடும். இது 143 (1) மதிப்பீடு என்று அழைக்கப்படும்.

இதற்கு என்ன அர்த்தம் என்றால், நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே. தாக்கல் செய்யப்பட்டுள்ள விபரங்களின் எண்களில் ஏதாவது பிழை இருந்தால், பிரதானமாக ஏதாவது பிழையாக தெரிந்தால் கணினியே அதனைச் சரி செய்துவிடும். இவற்றைத் தவிர வருமானம் குறித்து விளக்கம் கோரும் விதமாக ஏதாவது தகவல் கேட்பதோ, எதையாவது சேர்ப்பதோ நீக்குவதோ நடக்காது. அதனால் இதனை சம்மரி அசஸ்மென்ட் என்று சொல்வார்கள்.

எப்போது சிக்கல் வரும்? - ஒருவருக்கு எங்கிருந்தெல்லாம் வருமானம் வந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் பிடித்தம் செய்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் சொல்லும் 26 ஏ-வில் சொல்லப்பட்டிருக்கும் வருமானத்திற்கும், நாம் தாக்கல் செய்திருக்கும் வருமானத்திற்கும் வித்தியாசம் இருக்கும்போது கேள்வி வரலாம். அப்படி இல்லையென்றால் வேலை செய்யும் இடத்தில் இருந்து, எவ்வளவு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது என்று ஃபார்ம் 16 வாங்கி இருக்கலாம். அதில், ஒரு பெரிய வருமானம் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் கணக்கில் அதைவிட குறைவாக வருமானம் காட்டப்பட்டிருந்தால் கேள்வி வரும்.

வருமான வரி தாக்கல் செய்யவதற்கு முன் 26 ஏ, ஃபார்ம் 16 கொடுத்திருந்தால் அதனையும் ஒருமுறை பார்த்துவிட்டு வரி தாக்க்ல் செய்யலாம். இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் மதிப்பை விட குறைவாக நாம் வருமானம் காட்டமுடியாது. அதற்கு அதிகமாகவோ, அதே அளவோதான் வருமானத்தைக் காட்ட வேண்டும்.

டிமாண்ட், ரீ ஃபண்ட் : தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கில் எந்தச் சிக்கலும் இல்லை. அனைத்தும் சரியாக இருக்கிறது என்றால் கணினி தானாக மதிப்பீடு செய்துவிடும். அதன்பிறகு அந்த வரி செலுத்துபவருக்கு ஓர் அறிவிப்பு அனுப்பப்படும். அதில், உங்களுடைய மதிப்பீடு முடிந்துவிட்டது, வரி செலுத்துபவர் வருமான வரித் துறைக்கு பணம் செலுத்த வேண்டுமா அல்லது வருமான வரித் துறை, வரி செலுத்துபவருக்கு ஏதாவது திருப்பித் தரவேண்டி இருக்கிறதா போன்ற விபரங்கள் இருக்கும். நீங்கள் அதிகமாக வரி கட்டவேண்டியது இருந்தால், அதற்குப் பெயர் டிமாண்ட். நீங்கள் அதிகமான வரி கட்டியிருந்து வருமான வரித் துறை அதனைத் திருப்பி தந்தால் அதற்கு பெயர் ரீ ஃபண்டு.

நாம் டிமாண்ட் செலுத்த வேண்டியது இருந்தால், அறிவிப்பு வந்த 30 நாள்களுக்குள் வரி செலுத்துபவர் அதனைக் கட்டியாக வேண்டும். ரீ ஃபண்ட் வரவேண்டியது இருந்தால் அதற்கு வட்டி கணக்கிட்டு, அநேகமாக அறிவிப்பு வரும்போதே ரீ ஃபண்டும் வந்துவிடும். வரி செலுத்துபவர் ஏற்கெனவே கொடுத்திருக்கும் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு விடும்.”

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in