

கடை, சிறு உணவகம், குறு நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் வங்கியில் கடன் பெற்றிருக்கிறார். அவர் வாங்கிய கடனுக்காக, கடன் பெறுபவரின் ஆண்டு வருமானம், வியாபார வாய்ப்புகள், கடன் தொகைக்கான செக்யூரிட்டி, கியாரண்டி, மார்ஜின் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வங்கி கடன் கொடுத்திருக்கும். இவற்றைத் தவிர வாடிக்கையாளரிடமிருந்து வங்கி வேறு ஒரு விஷயத்தையும் எதிர்பார்க்கும்.
பொதுவாக கடன் வாங்கி தொழில் தெடாங்கும் அந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளின் இந்த எதிர்பார்ப்பை விரும்புவதில்லை. விஷயம் இதுதான்... வாடிக்கையாளர் அவரது கடை, நிறுவனத்தில் வங்கியின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என வங்கிச் சொல்லும்.
அதாவது கடையில் உள்ள பொருள்கள் இந்த வங்கிக்கு "ஹைபாதிக்கேட்" செய்யப்பட்டுள்ளது என்று எழுதி வைக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்தின. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டு, "வீ பேங்க் வித்" என வங்கியின் பெயரை எழுதி வேண்டும் என்று சொல்லப்பட்டது. பின்பு இதுவும் மாற்றப்பட்டு, கடையின் காசாளருக்கு பின்புறம் "அவர் பேங்கர்ஸ்" என்று கடன் கொடுத்த வங்கியின் பெயரை எழுதும் முறை வந்தது. கடன் மூலமாக வாங்கியிருக்கும் வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
சரி, வங்கிகள் ஏன் இந்த நடைமுறையை பின்பற்ற சொல்கின்றன? இதன் அவசியம் என்ன? - காரணம் இதுதான்: சிலர் ஒரே செக்யூரிட்டியை பல இடங்களில் அடமானமாக வைத்து கடன் பெற்று விடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. எல்லோரும் இப்படிச் செய்வதில்லை என்றாலும் தவறுகளை தவிர்ப்பதற்காகவே இது.
இன்று கடன் பெறாமல் எந்த தொழிலும் நடைபெறுவதில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் வங்கியின் இந்த நடவடிக்கையை நேர்மறையாக எடுத்துக் கொண்டு வங்கியின் பெயரை தங்களது இடங்களில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நேர்மையின் அடையாளம்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்