

வாடகை கார்களின் பின்னால், உணவகங்களில் காசாளருக்கு பின்னால் என பல இடங்களில் சில வங்கிகளின் பெயர்களைப் பார்த்திருப்போம். இந்த வங்கிகள் ஏன் இவர்களிடம் விளம்பரம் செய்ய சொல்ல வேண்டும் அல்லது எதற்காக இவர்கள் அந்த வங்கிகளுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அப்போது எழுந்திருக்கும். அது வெறும் விளம்பர பலகை மட்டும் இல்லை; அந்த வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இருக்கும் நேர்மையான உறவின் அடையாளம் என்கிறார் எழுத்தாளரும், முன்னாள் வங்கி பொது மேலாளருமான "குறள் இனிது" சோம.வீரப்பன்.
வணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும்போது இதுபோன்ற சின்னச் சின்ன புரிதல்கள் வங்கி வாடிக்கையாளர் உறவை, நேர்மையை வலுப்படுத்தும் எனும் அவர், வணிக கடன் பெறும்போது கேட்கப்படும் "டேர்ன் ஓவர்", செக்யூரிட்டி இன்ஸ்பெக்ஷன் குறித்து இங்கே விளக்குகிறார்...
கடைகள், சிறு உணவகம், குறு நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக ஒருவர் வங்கியில் கடன் பெற்றிருக்கிறார். அவர் வாங்கிய கடனுக்காக, கடன் பெறுபவரின் ஆண்டு வருமானம், வியாபார வாய்ப்புகள், கடன் தொகைக்கான செக்யூரிட்டி, கியாரண்டி, மார்ஜின் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வங்கி கடன் கொடுத்திருக்கும். இவற்றைத் தவிர வாடிக்கையாளரிடமிருந்து வங்கிவேறு ஒரு விஷயத்தையும் எதிர்பார்க்கும்.
பொதுவாக கடன் வாங்கி தொழில் தெடாங்கும் அந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் வங்கிகளின் இந்த எதிர்பார்ப்பை விரும்புவதில்லை. பீடிகை அதிகமாக இருக்கிறதல்லவா. விஷயம் இதுதான்... அதாவது கடன் கொடுத்திருக்கும் வங்கி வாடிக்கையாளரின் கடை, நிறுவனத்தில் வங்கியின் பெயரை எழுதி வைக்க வேண்டும் என வங்கிச் சொல்லும்.
நேர்மையின் அடையாளம்: அதாவாது கடையில் உள்ள பொருள்கள் இந்த வங்கிக்கு "ஹைபாதிக்கேட்" செய்யப்பட்டுள்ளது என்று எழுதி வைக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்தின. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. வங்கியில் கடன் வாங்கியிருப்பதாக எழுத வேண்டாம். "வீ பேங்க் வித்" என வங்கியின் பெயரை எழுதி வேண்டும் என்று சொல்லப்பட்டது. பின்பு இதுவும் மாற்றப்பட்டு, கடையின் காசாளருக்கு பின்புறம் "அவர் பேங்கர்ஸ்" என்று கடன் கொடுத்த வங்கியின் பெயரை எழுதும் முறை வந்தது. கடன் மூலமாக வாங்கியிருக்கும் வாகனங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
சரி, வங்கிகள் ஏன் இந்த நடைமுறையை பின்பற்ற சொல்கின்றன? இதன் அவசியம் என்ன? - காரணம் இதுதான்: சிலர் ஒரே செக்யூரிட்டியை பல இடங்களில் அடமானமாக வைத்து கடன் பெற்று விடுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. எல்லோரும் இப்படிச் செய்வதில்லை என்றாலும் தவறுகளை தவிர்ப்பதற்காகவே இது. இன்று கடன் பெறாமல் எந்த தொழிலும் நடைபெறுவதில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் வங்கியின் இந்த நடவடிக்கையை நேர்மறையாக எடுத்துக் கொண்டு வங்கியின் பெயரை தங்களது இடங்களில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு நேர்மையின் அடையாளம்.
டர்ன் ஓவர் (Turn over) எதிர்பார்ப்புகள்: வியாபாரம் செய்பவர்கள் வங்கிகளில் கடன் கேட்டுச் செல்லும்போது, வங்கி வாடிக்கையாளரின் ஆண்டு "டர்ன் ஓவர்" என்ன என்று கேட்கும். அது என்ன "டர்ன் ஓவர்". வியாபார நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை என்று நாம் அதனைப் புரிந்து கொள்ளலாம். கல்வி நிறுவனங்களில் அதனை "டோட்டல் க்ராஸ் ரெசிட்" (Total Cross Receipt) என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எவ்வளவு ரெசிஸ்ட்ஸ் வருகிறது என்று அர்த்தம். வங்கியில் கடன் கேட்டுச் செல்லும்போது, வாடிக்கையாளரின் ஆண்டு இறுதி அறிக்கையான "பேலன்ஸ் ஷீட்"டில் என்ன டேர்ன் ஓவர் அல்லது "க்ராஸ் ரெசிஸ்ட்" காண்பிக்கப்பட்டிருக்கிறதோ, அவை வங்கி கணக்கு புத்தகத்திலும் இருப்பது நல்லது. பொதுவாக வங்கிகள் இந்த இரண்டும் 90 சதவீதம் ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கும்.
வெளிப்படையாக இருங்கள்: இதற்கு என்ன அர்த்தம் என்றால் எல்லா கொள்முதல், விற்பனை நடவடிக்கைகளையும் வங்கியின் மூலமாக செய்யும்போது வருடாந்திர டர்ன் ஓவர் வங்கி கணக்குடன் ஒத்துப் போய்விடும். முன்பு விற்பனை முடிந்ததும் அன்று மாலையில் விற்பனைத் தொகை அல்லது அதற்கான காசோலை வங்கியில் செலுத்தப்படும். அதே போல், கொள்முதல் செய்வதற்கான தொகையும் வங்கிக் காசோலை மூலமாக செலுத்தப்பட்டது. இப்போது காகிதமற்ற பரிமாற்றத்திற்கு மாறிக்கொண்டிருப்பதால் டிஜிட்டல் பரிமாற்றத்தின் மூலமாக விற்பனை மற்றும் கொள்முதல் செய்யலாம்.
இதனால் வாடிக்கையாளரின் ஆண்டு விற்பனை, வருமானம் தெரிய வந்து அதற்கு வரி செலுத்த வேண்டியது வருமே என எண்ணலாம். நாம் செய்த விற்பனைக்கு சட்டப்படியான வரி, ஜிஎஸ்டி செலுத்தி நேர்மையான குடிமகனாக இருப்பதில் தவறில்லையே. வியாபாரத்தின் குறியீடே நாணயம் தானே. அப்போது வாடிக்கையாளர் நிம்மதியாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வங்கி கடன் வழங்கும் போது டர்ன் ஓவர் என்பதை வங்கி கண்டிப்பாக எதிர்பார்க்கும்.
செக்யூரிட்டி ஆய்வு (Security Inspection): கடன் கொடுத்த வங்கியாளர் எந்தப் பொருளுக்காக கடன் கொடுத்தாரோ அந்தப் பொருள் வாடிக்கையாளரால் வாங்கப்பட்டு விட்டதா? அது நன்றாக இருக்கிறதா? பாதுகாப்பாக இருக்கிறதா? - இதைப் பார்க்க வருவதற்கு செக்யூரிட்டி இன்ஸ்பெக்ஷன் அல்லது ஆய்வு என்று பெயர். பொதுவாக வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அதன் புதுமனைப் புகுவிழாவிற்கு வங்கியாளரை அழைக்கும்போது வந்து வீட்டை ஆய்வு செய்துவிட்டு சென்று விடுவார். கார் லோன் வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் சென்று காட்டுவதுண்டு. அப்போது அதனை ஆய்வு செய்ததாக வங்கியாளர் குறித்துக்கொள்வார்.
வங்கி விதி: தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி உபகரணங்கள் வாங்கும்போது, ஆய்வு நடைமுறை அவசியமாகிறது. உபகரணத்திற்காக கடன் கொடுக்கும் போது, வாடிக்கையாளரிடமிருந்து மார்ஜின் பெற்று, கடன் தொகை விற்பனையாளருக்கு டைரக்ட் பேமென்ட் மூலமாக நேரடியாக செலுத்தி, அதற்கான இன்வாய்ஸ் எல்லாம் பெறப்பட்டிருக்கும். இருந்தாலும், அந்தப் பொருள் கடன் பெற்றவரின் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டது என்று வங்கியாளர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வங்கிகளின் பொதுவான விதி. ஏன் இந்த செக்யூரிட்டி ஆய்வு செய்ய வேண்டும் என்றால், பொருள்களுக்கான ஆவணங்கள் என்பது வேறு. பொருள் நேரடியாக வருவது என்பது வேறு. பொருள் நல்ல நிலையில் வாடிக்கையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்பதற்காக இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
கேஷ் கிரெடிட் (Cash Credit Loan) வகைக் கடன்களில் பொருளின் இருப்பு மாறிக் கொண்டே இருக்கும். உதாரணமாக மளிகைக்கடை அல்லது சூப்பர் மார்கெட்களுக்கு வங்கி கடன் கொடுத்திருந்தால் அங்கு பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கும். பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தநிலைகளில் மாத இறுதியில் ஒரு ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் (Stock Statement) வங்கிக்குக் கொடுக்கப்படும். அதாவது மாதத்தின் கடைசி வேலை நாளில் அன்று இருக்கும் பொருள்களின் இறுதி இருப்பு குறித்த அறிக்கை வங்கிக்கு கொடுக்கப்படும். இந்த ஸ்டாக் ஸ்டேட்மெண்டை சரி பார்க்க வங்கியாளர் வருவார்.
கணமில்லையெனில் பயம் தேவையில்லை: இதில் வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளவேண்டியது, ஸ்டாக் ஸ்டேட்மென்ட் கொடுத்த அன்றே வங்கியில் இருந்து ஆய்வுக்கு வரமாட்டார்கள். அப்படியென்றால் வங்கியாளர் வரும் நாளில் நாம் சமர்ப்பித்த இருப்பு அப்படியே இருக்காது அவைகளில் சில விற்பனையாகி இருக்கலாம். அதனால் வங்கியார் வாடிக்கையாளரின் கணக்கு புத்தகங்களில் இருந்து தனது ஆய்வினைத் தொடங்கலாம். இரண்டாவதாக வங்கியாளர் பொருள்களை ரேண்டமாக ஆய்வு செய்யலாம். அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற இருப்புகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்வார். பொருள்கள் விற்பனையாகி இருந்தால் அதற்கான இன்வாய்ஸ் (Invoice)களை நாம் காட்டலாம். மூன்றாவதாக பொருள்களின் விற்பனை விலைகள் சரியாக இருக்கின்றதா என்று இன்வாய்ஸ்களை ஆய்வு செய்வார்கள்.
பொதுவாக இதுபோன்ற ஆய்வுகள் முன்கூட்டி தெரிவிக்கப்பட்டே நடத்தப்படும். வாடிக்கையாளருக்கு சொல்லாமல் கூட வங்கியாளர் ஆய்வுக்கு வரலாம். வாடிக்கையாளர் மடியில் கணம் இல்லையென்றால் பயம் கொள்ளவேண்டிய தேவையில்லை தானே. வங்கியாளர் ஆய்வுக்கு வரும்போது வாடிக்கையாளர் அவரை இன்முகத்துடன் வரவேற்று, வங்கிச் சேவைகளின் நிறைகுறைகளை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.