

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இன்று பாலிசியை விற்பதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களில் ஒன்றாக முன் வைக்கப்படுவது யூலிப் பாலிசிகள். குறிப்பிட்டு காலத்துக்கு பணம் செலுத்தினால் போதும், அதிகமான இன்சூரன்ஸ் கவரேஜ், திரும்ப கிடைக்கும் தொகையும் பெரிய அளவில் இருக்கும் என கூறி விற்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த சில அடிப்படை புரிதல்கள் அவசியமானதாகும்.
யூலிப் என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். முதலீடு மற்றும் அதில் இருந்து வரும் வருமானம் பாலிசியின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன. எனினும் பாலிசி எடுத்தவர்கள் இறந்துபோனால் காப்பீட்டுத் தொகை என்பது வழக்கமான ஆயுள் காப்பீடுகளில் வழங்குவது போலவே இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் சில நிறுவனங்களின் காப்பீட்டுத் தொகை என்பது சற்று அதிகமாக இருக்கிறது.
எப்படி செயல்படுகிறது?
மொத்ததில் யூலிப் என்பது முதலீடும், காப்பீடும் ஒருங்கிணைந்த ஒரு கலவையான திட்டமாகும். இவை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தற்போது பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
யூலிப் திட்டங்கள் அடிப்படையில் மியூச்சுவல் பண்ட்களை போல செயல்படுகிறன. மியூட்சுவல் பண்ட் போலவே இதிலும் முதலீட்டைக் குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளாகச் செலுத்தலாம். தேவை மற்றும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு முதலீட்டை ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியும். இதற்கான வசதிகளும் இந்த திட்டங்களில் வழங்கப்படுகின்றன.
மியூச்சுவல் பண்ட் போலவே யூலிப் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும் பணம் யூனிட்டுகளாக முதலீடு செய்யப்படுகிறன. இந்த வகை முதலீடு பெருபாலும் பங்குச்சந்தை அடிப்படையிலானது. மியூச்சுவல் பண்ட் போலவே வசூலிக்கப்படும் பணம் ஒரு பண்ட் மூலம் இயக்கப்பட்டு பண்ட் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு லாபம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. யூனிட்டின் மதிப்பு ஏற ஏற முதலீடு செய்த தொகையும் வளர்கிறது.
இந்த முதலீடு என்பது பங்குசந்தை சார்ந்ததாக மட்டுமின்றி கடன் பத்திரங்கள், அரசு பத்திரங்கள் போன்றவை சார்ந்த பண்டுகளிலும் முதலீடு செய்யலாம். அதற்கான பண்ட்டுகளும் உள்ளன. இதனை தேர்வு செய்யும் வசதியும் பாலிசி எடுப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. பண்டுகளை மாற்றிக் கொள்ளவும் முடியும். பங்குச்சந்தை வளரும் காலத்தில் பங்குச்சந்தை திட்டங்களிலும் தேயும் காலத்தில் கடன் பத்திரங்களிலும் முதலீட்டு பணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும்.
மியூச்சுவல் பண்ட் போன்றதா?
இந்த யூனிட்டுகளின் மதிப்பு என்பது மொத்த சொத்து மதிப்பாக (Net Asset Value) பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மொத்த தொகையானது ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும், மொத்த முதலீட்டையும் மொத்த யூனிட்டின் எண்ணிக்கையையும் வைத்து கணக்கிடப்படும். திரும்பக் கிடைக்கும் பணத்தின் விகிதம் மொத்த சொத்து மதிப்பை கருத்தில் கொண்டு கணக்கிடப்படும். பாலிசியில் முதலீடு செய்த பணம் எவ்வாறு வளர்ந்தள்ளது என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.
பார்ப்பதற்கு மியூச்சுவல் பண்ட் போன்ற இது செயல்பட்டாலும் யூலிப் திட்டங்களில் குறைந்தபட்ச பண முடக்கக் காலம் (Lock in period) இருக்கும். இது காப்பீட்டையும் உள்ளடக்கியது என்பது முக்கியமாகும். பங்குகளுடன் இணைந்த மியூட்சுவல் பண்ட் திட்டத்தில், பங்குகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிச் சுதந்திரமாக விற்கலாம்.
ஆனால் யூலிப் திட்டங்களில் வெளியேறுவது கடினம். குறிப்பிட்ட காலம் கண்டிபாக இருந்தே ஆக வேண்டும். வெளியேறுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அடிப்படையாக பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டையும் இழக்கும் சூழல் ஏற்படும்.
ஆயுள் காப்பீடு
இந்த யூலிப் திட்டங்களில் ஆயுள் காப்பீடு திட்டம் என்பதால் நாம் ஒப்புக் கொண்ட காலம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். செலுத்தும் பிரிமீயத்தில் ஒரு தொகை காப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது திட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஒட்டுமொத்தமாகவும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கொரு முறை எனத் தவணை முறையிலும் இதில் பிரிமீயம் செலுத்த முடியும். செலுத்தும் தொகையில் குறிப்பிட்ட பணம் முதலீடாக மியூச்சுவல் பண்ட் போன்று திட்டங்களில் முதலீடு செய்யப்படும். குறிப்பிட்ட தொகை இன்சூரன்ஸுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
யூலிப் முதலீடுகள் சந்தையுடன் இணைந்தவற்றில் முதலீடு செய்யப்படுவதால், சந்தை நிலவரத்தைப் பொறுத்து அதிகமான லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அதேசமயம் சந்தை நிலவரத்தை பொறுத்து முதலீடு செய்த பணத்தில் குறைவு ஏற்படவும், இழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. யூலிப் முதலீடு பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முழுமையாக முதலீடு செய்தால் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்து லாபம் கிடைக்கும் எனவே சந்தை சார்ந்த அனைத்துவித ஆபத்துகளும் இதில் உண்டு.
இத்திட்டம் காப்பீட்டுக்கான அம்சங்களையும் கொண்டிருப்பதால், ஆயுள் காப்பீடும் கிடைக்கும். பொதுவாக யூலிப் திட்டங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடியவை. காப்பீட்டுத் திட்டங்களைப் போலவே நீண்டகாலம் பிரீமியம் செலுத்தினால், இறுதியில் திட்டம் முதிர்ச்சியடையும் போது சிறப்பான லாபம் கிடைக்கும்.
தேவைக்கேற்ப பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு இடையே மாறும் வசதியை யூலிப் வழங்குகிறது. பங்குச்சந்தை சாராத பண்ட்டுகளில் கூட முதலீடு செய்யலாம். அதற்கு ஏற்ப குறைவான லாபம் கிடைக்கும்.
வரி விலக்கு
யூலிப் மூலம் வரும் வருமானத்திற்குப் பிரிவு 80C மற்றும் 10D ன் கீழ் வரிவிலக்கு கிடைக்கும்.
காப்பீட்டு நிறுவனங்கள் நிர்வாகக் கட்டணம், முதலீடுகள் மேலாண்மை கட்டணம், பரிமாற்ற கட்டணம், ஒப்படைக்கும் கட்டணம், பீரிமியம் வசூலிக்கும் கட்டணம், பணம் எடுக்கும் கட்டணம் எனப் பல கட்டணங்களை விதிக்கும். இவை அனைத்தும் காப்பீடு நிறுவன விதிகளைப் பொறுத்து வேறுபடும். இதுவும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்ப மாறுகிறது.