வீட்டுக்கடன் முன்கூட்டியே செலுத்தலாமா: வட்டியை தேர்வு செய்வது எப்படி?

வீட்டுக்கடன் முன்கூட்டியே செலுத்தலாமா: வட்டியை தேர்வு செய்வது எப்படி?
Updated on
3 min read

பலருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது வாழ் நாள் கனவாகவே இருக்கும். ஆனால் பலரும் எதிர்கொள்ளும் முதல் சவாலே நிதி நெருக்கடி தான். கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டுவது பெரும்பாலானோருக்கு சாத்தியமாக இருக்காது. எனவே இன்று வீடு கட்டுபவர்களின் முதல் இலக்கு வீட்டுக்கடன் தான்.

வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டும் என திட்டமிடுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது இது துான். வீடு கட்டும் திட்டத்தை தொடங்கும் முன்பாகவே வீட்டுக் கடன் விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ஒருவருக்கு வீட்டுக்கடன் என்பது, அவர் வாங்கும் சம்பளம் அல்லது அவரது வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சம்பளதாரர்களாக இல்லாமல் தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களது ஆண்டு வருமானத்தை வைத்து கணக்கிட்டு வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.

வங்கியை அணுகி கிடைக்கக்கூடிய கடன் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் எவ்வளவு கடன் கிடைக்கும் என்பது தெரிந்து விட்டால் அதற்கு ஏற்ப நாம் கட்ட ஆசைப்படும் வீட்டை கட்ட எவ்வளவு செலவு செய்வது என்பதை முடிவு செய்ய எளிமையாக இருக்கும்.

எவ்வளவு கடன்?

பிற இஎம்ஐ போக, வீட்டுக் கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் 35% பணம் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும்.

பொதுவாக சம்பளதாரர்களை பொறுத்தவரையில் வங்கிகள் 25 முதல் 30 வயதில் உள்ளவர்களுக்கு வீட்டுக்கடன் வாங்கும் சம்பளத்தைப் போல 70 மடங்கு கிடைக்க வாய்ப்புண்டு. 30 வயதுக்கு மேல் 45 வயதுக்கு கீழ் என்றால் வருமானத்தை போல 50 - 60 மடங்கு வரை கிடைக்கும்.

45 வயதுக்கும் அதிகமானாலும் சுயதொழில் செய்பவர் என்றாலும் ஆண்டு வருமானத்தைப் போல 4 -5 மடங்கு வரை வீட்டுக்கடன் கிடைக்கும். எனினும் இது சில வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களை பொறுத்து மாறக்கூடியது. குறிப்பாக வங்கிகளை விடவும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி வீட்டுக்கடன்களை வழங்குகின்றன.

கூட்டுக்கடன்

கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது இரண்டு பேர் சேர்ந்து கடன் வாங்கலாம். அவ்வாறு கடன் வாங்கும்போது கூடுதல் தொகையை கடனாக பெற வாய்ப்புண்டு. வாங்கும் தொகைக்கு இருவரும் பொறுப்பேற்பதாலும், இருவரது வருமானமும் காரணியாக அமைவதால் இந்த முறையிலான கூட்டுக்கடனுக்கு வங்கிகள் எளிதில் ஒப்புதல் தருகின்றன. தவணையை திருப்பி செலுத்தும் போது இணை விண்ணப்பதாரரின் வருமானமும் கணக்கில் கொள்ளப்படுவதால் இணை விண்ணப்பதாரரைச் சேர்ப்பது ஒரு பெரிய தொகையை கடனாக பெற உதவும்.

இதுபோன்று கடன் வாங்கும்போது நபர் யார் என்பதையும், உங்களுடன் இணைந்து கடன் வாங்க தகுதியான உறவா அது என்பதையும் வங்கிகள் உறுதி செய்யும். பெரும்பாலும் வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது இரத்த உறவுகள் கூட்டு வீட்டுக் கடனின் இணை விண்ணப்பதாரர்களாக மாற வங்கிகள் அனுமதிக்கின்றன.

சில வங்கிகள் உடன்பிறந்தவர்களையும் திருமணமாகாத இணையர்களையும் இணை விண்ணப்பதாரராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த சொத்தின் உரிமையாளராக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அனைவரும் கூட்டுக்கடன் வாங்குபவர்களாக ஏற்றுக் கொள்ப்படுகிறர்கள்.

மாத தவணை

வாங்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும்.இஎம்ஐ எனப்படும் மாத தவணை போக வாங்கும் சம்பளத் தொகையில் 35 சதவிகிதமாவது மீதம் இருந்தால் தான் அன்றாட செலவுகளை சமாளிக்க இயலும். எனவே அதனை கணக்கிட்டு வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

வீ்ட்டுக்கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை என்பது கடனுக்கான தொகை, வட்டி வீதம், கடன் செலுத்தும் காலம் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். இதன் மூலமே இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆவணங்கள்

வங்கிக்கடன் வாங்க கொடுத்த விண்ணப்பப்படிவத்தின் நகல், கடனுக்காக வழங்கப்பட்டட ஆவணங்களின் நகல்கள், வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதம், வங்கிக்கொடுத்த ஆவணங்கள் இதனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதத்தில் வாடிக்கையாளரின் பெயர் இருக்கும். அடுத்ததாக எவ்வளவு தொகை கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு எந்த வகையில் கடன் வழங்கப்படுகிறது என்று கடன் தன்மைப் பற்றிய தகவல்கள் இருக்கும். பிறகு மொத்தக் கடன் தொகையில் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மார்ஜின் தொகை எவ்வளவு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது தவிர திருப்பிச் செலுத்தும் காலம், வட்டி, கடனை எத்தனைத் தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும், தவணையை எப்போது செலுத்த ஆரம்பிக்க வேண்டும் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தது வட்டி, கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு, வட்டி ரெப்போ போன்றவையும் வங்கியின் ஒப்புதல் கடிதத்தில் இருக்கும்.

முன்கூட்டியே செலுத்தலாமா?

வீட்டுக்கடன் பெற்றவர்கள் இஎம்ஐ தவிர கூடுதல் தொகையை செலுத்தி வீட்டுக்கடன் பெறும் காலத்துக்கு முன்பாகவே செலுத்தி முடிக்க முடியும். இதன் மூலம் வட்டியை குறைத்துக் கொள்ள வாய்ப்புண்டு.

வங்கிக்கடன் தொகைக்கான இஎம்ஐ செலுத்தும் தொகையை அதிகப்படுத்துவதால், விரைவில் கடனை அடைக்க முடியும். அதாவது குறைவான தொகை நீண்ட ஆண்டுகள் என்பதற்கு பதிலாக அதிகமான தொகை குறைவான ஆண்டுகள் என்று திட்டமிடலாம். வருமானம் உயரும்போது, அந்த உபரித்தொகையை இஎம்ஐ செலுத்தும்போது, விரைவாக கடனை அடைக்க முடியும்.

ஒருவருக்கு ஊதிய உயர்வு, போனஸ், வேறு வழிகளில் வருமான உயர்வு கிடைக்கும்பட்சத்தில் அந்த தொகையையும் கடனைதிருப்திச் செலுத்த பயன்படுத்தலாம்.

கூடுதலாகக் கிடைக்கும் பணத்தை கடனை திருப்பிச் செலுத்தும்போது, கடன் தொகை குறையும். குறைந்த கடன் தொகைக்கு வழக்கமான இஎம்ஐ அளவு செலுத்தும்போது, கடன் செலுத்துவது விரைவாகக் குறையும், வட்டியும் குறைந்துவரும். நாளடைவில் பணம் சேமிப்பது தெரியவரும்.

கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் நீண்டதாக இருந்தால் மாதத் தவணை குறைவாகவும், திருப்பி செலுத்தும் வட்டி அதிகமாகவும் இருக்கும் என்பதால் திரும்ப செலுத்தும் காலத்தைக் குறைத்து நிர்ணயிக்கலாம்.

கையில் கூடுதல் பணம் இருந்தால், அதை முன்கூட்டியே செலுத்தி, மாதத் தவணையைக் குறைக்கலாம். ஒருவர் தனது பிற சேமிப்புகளை பயன்படுத்தி வீட்டுக் கடன் தொகையை கூடுதலாக முன்கூட்டியே செலுத்தலாம். அதேசமயம் மாதாந்திர கடன் தவணையைத் தவறவிட்டால் ஒருவரது கடன் வாங்கும் மதிப்பு எண்ணாக கருதப்படும்கிரெடிட் புள்ளிகளைப் பாதிக்கும். அதனால், எதிர்காலத்தில் வேறு கடன் பெற முயற்சிக்கும்போது சிக்கலாகி விடும். எனவே கூடுதலாக தொகையை கட்டும் அதேவேளையில் ஒப்புக் கொண்ட தவணைத் தொகையை சரியான முறையில் கட்ட வேண்டும்.

வட்டி கணக்கீடு

வீட்டுக்கடன் வாங்கும்போது பலருக்கும் உள்ள ஒரு சந்தேகம் நான் கடன் வாங்கும்போது ப்ளோட்டிங் வட்டி (Floting) விகிதத்தை தேர்வு செய்வதா அல்லது பிக்சட் வட்டி விகிதத்தை தேர்வு செய்வதா என்ற குழப்பம் ஏற்படும். பொதுவாக ப்ளோட்டிங் விகிதத்தில் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் குறைந்தால், வட்டி விகிதம் குறையும். அதேசமயம் வட்டி அதிகரித்தாலும் வட்டி அதிகரிக்கும்.

பிக்சட் என்றால் முடிவு செய்த வட்டியை நீடிக்கும். எனினும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதத்தை தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே வட்டி விகிதம் மாறும்போது அதனை அறிந்து தங்களது தேர்வையும் வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in