

கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கும் சூழலில் கிரெடிட் கார்டு என கூறப்படும் கடன் அட்டைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை கடந்த ஆண்டே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் அதிகமாக நடந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடன் அட்டைகளை உபயோகித்து செய்யப்படும் செலவு அதிகரித்து வருவது போல கடன் அட்டைகள் விநியோகமும் அதிகரித்து வருகிறது. கடன் அட்டையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
கரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பணிவரித்தனை, பொருட்களை வாங்குவது, சேவைகளை பெறுவது என மக்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள். அதனால் கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. அதன் வழியில் கிரெடிட் கார்டு பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
டெபிட் கார்டு- கிரெடிட் கார்டு
மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 மார்ச் மாதத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களில் சுமார் 7.3 கோடிப் பேர் ரூ.63,327 கோடியை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு செலவிட்டுள்ளனர். அதேநேரம், ஸ்வைப்பிங் செய்வதன் மூலமாக ரூ.38,773 கோடியை செலவிட்டுள்ளனர்.
ஆன்லைன் மூலமாக 11 கோடி பரிவர்த்தனைகளும், நேரடி ஸ்வைப்பிங் மூலமாக 11.1 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரையில் ஸ்வைப்பிங் மூலம் 11.9 கோடி பரிவர்த்தனைகளும், ஆன்லைன் மூலமாக 20.8 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன.
ரூபாய் மதிப்பு அடிப்படையில் நேரடியாக ரூ.40,831 கோடிக்கும், ஆன்லைன் மூலமாக ரூ.22,687 கோடிக்கும் பரிவர்த்தனை நடந்துள்ளது. காய்கறி வாங்குவது முதல் பெரும்பாலான பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமாகி வருவதால் நுகர்வோர்களும் இந்த எளிய முறைக்கு தங்களை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
ஆனாலும் கரோனா காலத்தில் டெபிட் கார்டுகளை உபயோகித்து செய்யப்பட்ட செலவுகளை விட கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்பட்ட செலவு அதிகமென்றும் தெரிய வந்திருக்கிறது. பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவு எனும் பட்சத்தில் டெபிட் கார்டுகளையும், விலை அதிகமான பொருள்களை வாங்க கிரெடிட் கார்டுகளையும் நுகர்வோர்கள் பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
இதன் மூலம் அவர்களுக்கு பணத்தைத் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசம் கிடைப்பதோடு தனித்துவமான அல்லது பிரத்யேக சலுகைகள், ரிவார்ட் பாயிண்ட்ஸ் ஆகியவையும் கிடைக்கும் என்பதால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதோடு கடந்த ஆண்டை விட சமீபத்தில் பயணமும் ஓரளவுக்கு அதிகரித்திருப்பதால் அது சார்ந்த செலவுகளுக்கும் கடன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
உரிய முறையில் பயன்படுத்துவது எப்படி?
அதேசமயம் கிரெடிட் கார்டுகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அதனை பயன்படுத்துவோர் தேவையில்லாத சிக்கல்களை சந்திக்கும் சூழலும் ஏற்பட்டு விடும். கடன் அட்டை மூலமான பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது என்பது பொருளாதாரத்தைப் பொருத்தவரை நல்ல செய்தியாக இருந்தாலும் கடனில் வாங்கிய பொருள்களுக்கு அல்லது சேவைக்கான பணத்தை உரிய கால அளவுக்குள் கட்டக்கூடிய நிலையில் மக்கள் இருப்பார்களா என்ற கேள்வி உள்ளது.
உரிய காலத்துக்குள் கட்டாவிட்டால் கட்ட வேண்டிய நிலுவைத் தொகையோடு வட்டியும் சேர்ந்து அவர்களை மேலும் ஓர் இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லும். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை தாமதமாகச் செலுத்துவது மிகப் பெரிய தவறாகும். அப்படிச் செய்யும்பட்சத்தில் அதிக வட்டியையும், அபராதங்களையும் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
அது மட்டுமல்லாமல் இதன் மூலம் கடன் மதிப்பெண்ணை (கிரெடிட் ஸ்கோர்) பாதிக்கும். மாதம்தோறும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முன்கூட்டியே செலுத்துவதை உறுதி செய்வது கட்டாயம் ஆகும்.
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தினால் வேறு சில சிக்கல்கள் ஏற்படும். நிலுவைத் தொகையை முழுவதுமாகத் திருப்பிச் செலுத்தும் வரை தேவையற்ற வட்டி கட்டி வர வேண்டியதாக இருக்கும்.
கிரெடிட் கார்டின் பரிவர்த்தனைகளின் பட்டியலை மதிப்பாய்வு செய்ய மாத இறுதி வரை காத்திருக்க கூடாது. கிரெடிட் கார்டு தொடர்பாக வங்கிகள் அனுப்பும் அறிக்கையை தவறாமல் சரிபார்க்க வேண்டும். கிரெடிட் கார்டில் தவறான கட்டணங்கள் மற்றும் தவறான பதிவு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் இதற்கு வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும்.
இப்போது வாங்குங்கள் பிறகு செலுத்துங்கள்
கிரெடிட் கார்டுகளுக்கு போட்டியாக இப்போது கிளம்பியிருப்பது கவர்ச்சிகரமான (Buy Now Pay Later) என்கிற இப்போது வாங்குகள் பிறகு செலுத்துங்கள் என்கிற திட்டமாகும். இதை வங்கிகள் மட்டுமல்லாமல் அமேசான் பே லேட்டர், பிளிப்கார்ட் பே லேட்டர், லேஸிபே, போஸ்ட்பே போன்ற பல நிறுவனங்கள் இந்த வசதியை வழங்கி வருகின்றன.
இந்தத் திட்டம் தற்போது இளைஞர்களிடம் அதிகஅளவில் பிரபலமாகி வருகிறது. சில கிரெடிட் கார்டோடு பிஎன்பிஎல்லும் சேர்ந்தே இருக்கும். குறைந்த விலையுள்ள பொருள்களை வாங்கி அதற்கானத் தொகையை வட்டியில்லாமல் சுமார் 15 நாட்களுக்குள் செலுத்தும் வசதியை இது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இருப்பினும் கிரெடிட் கார்டுக்கும் பிஎன்பிஎல் கார்டுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமை இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம் என்பதுதான். எனினும் இந்த இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.
கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் நிலுவைப் பணத்தை வட்டியில்லாமல் செலுத்துவதற்கான அவகாசம் சுமார் 45 நாட்கள் ஆகும். பிஎன்பிஎல்லில் இது 15 நாட்கள் முதல் 35 நாட்கள் ஆகும்.
கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதற்கான உச்சவரம்பு பயனளாரின் நிதிநிலைமையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். ஆனால் பிஎன்பிஎல்லில் இது ரூ.10,000 முதல் ரூ.60,000 வரையாகும்.
கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தால் அது பல காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படுவதால் ஒருவருக்கு வழங்கப்படுமா, மறுக்கப்படுமா என்று தெரிவதற்கு 2-3 வாரங்கள் ஆகலாம். ஆனால் பிஎன்பிஎல் கார்டுக்கென்று கடினமான தகுதிக் காரணிகள் எதுவுமில்லை என்பதோடு மிக சீக்கிரமாகவே வழங்கப்பட்டுவிடும்.
சில கிரெடிட் கார்டுகள் சேர்ப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
கிரெடிட் கார்டில் இருக்கும் நிலுவைத் தொகை முழுவதையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் கட்டவில்லையெனில் வட்டி வசூலிக்கப்படும்.
இது சுமார் ஆண்டுக்கு சுமார் 30-36 சதவிகிதமாகும். ஆனால் பிஎன்பிஎல் கார்டு திட்டத்தின் கீழ் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை ஆனால் திருப்பிச் செலுத்த நீண்ட நாட்கள் ஆகும்பட்சத்தில் தாமதக் கட்டணம் என்கிற பெயரில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
கிரெடிட் கார்டை பலதரப்பட்ட வணிக நிறுவனங்களும் அமைப்புகளும் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளும். ஆனால் பிஎன்பிஎல் கார்டுகளில் அந்த நெகிழ்வுத் தன்மையும் ஏற்புத் தன்மையும் இல்லை.
இதுமட்டுமல்லாமல் சில வங்கிகள் பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு கடன் அட்டைகளையும் (co-branded) வழங்கி வருகின்றன. இதுவும் தற்போது அதிகஅளவில் பிரபலமாகி வருகிறது.
மொத்தத்தில் கிரெடிட் கார்டுகள் என்பது தேவைபடுவோர், தேவைக்கு பயன்படுத்தினால் அதிக பயன். அதேசமயம் சரியான புரிதல் இல்லாமலோ, உரிய நிதி மேலாண்மை இல்லாமலோ பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படும். கிரெடிட் கார்டு மூலம் நெருக்கடிக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் இத்தகையவர்களே.