

இந்தியாவில் எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி இந்த இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. சாலையில் வாகனங்களில் செல்லும் போது அது விபத்தில் சிக்கும் ஆபத்து இருப்பதால் அந்த வாகனம் விபத்தில் சிக்கும்போது பாதிப்புகளை ஈடு செய்யவும், உரிய இழப்பீடு கிடைக்கவுமே மோட்டர் இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் கட்டாயம் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
பாலிசி எடுத்தவரின் பாதுகாப்பு, உடன் செல்பவரின் பாதுகாப்பு, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ், வண்டிக்கு சேதம் அடைந்தால், அதற்கான நிவாரணம், வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ, குளிர்சாதன வசதிக்கான கருவிகள் போன்ற கூடுதல் பிட்டிங்குகள் காணாமல் போனாலோ அல்லது வண்டியே காணாமல் போனாலோ அல்லது திருட்டு போய்விட்டாலோ அதற்கான நிவாரணம், இப்படி பல்வேறு சூழ்நிலைகளிலும், விபத்துகளிலும் காப்பீட்டு பாதுகாப்பு கிடைப்பதற்கு இந்த விரிவான பாலிசி வழி செய்கிறது.
மூன்றாம் நபர் காப்பீடு
இந்தியாவில் மோட்டார் இன்சூரன்ஸை பொருத்தவரை முதலில் வருவது மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் ஆகும். இதில் வாகனம் விபத்தை ஏற்படுத்தினால் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் சேதாரத்தை இந்த இன்சூரன்ஸ் ஈடுசெய்யும். மூன்றாம் நபர் பாலிசி என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டப்படி, கட்டாயமாக எடுத்தே தீர வேண்டிய இன்சூரன்ஸ் ஆகும்.
அடுத்தாக சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை இருப்பதால் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே போதாது. கட்டாயம் சொந்தக் காப்பீடும் அவசியமாகிறது. விபத்து ஏற்பட்டால் வண்டிக்கான இன்சூரன்ஸ், தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் செய்து கொள்ள முடியும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தவிர மற்ற இன்சூரன்ஸ்கள் எல்லாம் வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மற்ற இன்சூரன்ஸ் எடுக்கும் போதும் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் சேர்ந்தே வரும். காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இது தவிர அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம்.
சரியான மோட்டார் இன்ஷூரன்ஸை தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதால் காப்பீடு எடுக்கும்போது முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பலவித நிறுவனங்கள், பலவிதமான காப்பீட்டுத்தொகை என்ற குழுப்பம் ஏற்படுவதால் மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது கவனத்துடன் ஒப்பிட்டு வாங்க வேண்டும். சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியது
வாகன காப்பீடு செய்ததுடன் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்த விவரங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம்.
வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம்.
அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது. அனுமதி கிடைத்த பிறகே வாகனத்தை எடுத்துச் செல்லலாம்.
உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும்.
உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம்.
திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.
நம்முடைய வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு. வாகனம் திருட்டுப்போனாலோ விபத்துக்கு உள்ளாகி சேதாரமானாலோ நம்மால் அதிகபட்சம் பெற முடிகிற தொகை ஆகும்.
இந்த மதிப்பு என்பது வாகனத்தின் உற்பத்தியாளர் பட்டியலிட்டுள்ள விற்பனை விலையிலிருந்து வாகனத்தின் சேதாரத்தைக் கழித்த பிறகு வரும் தொகையாகும். வாகனம் பழையதாக இருந்தால் அதன் ஆண்டை பொறுத்து மதிப்பு குறையும்