

உலக அளவில் கனவில் நினைத்து பார்க்க முடியாத பெரும் முதலீடாக கருதி பலரும் கிரிப்டோகரன்சியில் தற்போது தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். கிரிப்ட்டோ என்பது உண்மையில் முதலீடா, மோசடியா, அதில் முதலீடு செய்தால் பணத்தை திரும்ப பெற முடியுமா, பல நாடுகளும் இதனை ஏற்க முன் வராதநிலையில் இதன் எதிர்காலம் என்னவாகும் என்பது போன்ற பல கேள்விகள் உள்ளன.
உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்ட்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக இன்று இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்க்கின்றனர். கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு லட்சத்தில் இருந்தாலும், அதில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும் என்பதால் அதில் சிறுசிறு முதலீட்டாளர்களும் கூட முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்களா? அல்லது பணத்தை இழக்கிறார்களா? என்னதான் நடக்கிறது கிரிப்டோ சந்தையில் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனால் இவை எதுவும் விடை தேட முடியாத கேள்விகள். காரணம் அதன் தொழில்நுட்பம் அப்படி.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகள் கூட சட்டபூர்வமாக அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றன. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் விரைவில் தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை அறிவிக்கவும், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
கிரிப்டோகரன்சி என்றால் டிஜிட்டல் நாணயங்கள் ஆகும். கிரிப்டோகரன்சிகளை போலியாக உருவாக்க முடியாது. பிளாக்செயின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்படுகின்றன. எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோகரன்சிகளில் செய்ய முடியாது. கிரிப்டோகரன்சிகளுக்கு எல்லைகளும் கிடையாது. சுருக்கமாக கூறினால் யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் வராது.
யார் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்ற விவரமும் வெளியே தெரியாது. ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும்.
கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகளையும் வாங்கிக்கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகள் மையப்படுத்தப்படாதவை. அதாவது, கிரிப்டோ காயின்களை எந்தவொரு நிறுவனமும் கட்டுப்படுத்துவதில்லை.
பிறந்த வரலாறு
சர்வதேச வர்த்தகம் செய்வதற்கு பெரும்பான்மையாக பரிமாற்ற நாணயமாக அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி உலகத்தைப் புரட்டி போட்ட பிறகு, உலக நாணயங்களின் மதிப்பு என்பது நிலையற்றதாகத் தோன்றியதால் சதோஷி நாகமோடோ என்ற பெயரில் அடையாளம் தெரியாத நபர் 2009-ல் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் பிட்காயின் என்ற டிஜிட்டல் கரன்சியை கம்ப்யூட்டரில் உருவாக்கினார்.
இதுபோன்ற டிஜிட்டல் கரன்சி முறை புதியதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்கவே விரைவிலேயே பிட்காயின் பிரபலமானது. பல இடங்களில் பிட்காயின் மூலம் பொருட்களும், சேவைகளும் கிடைக்கும்படியான சூழலும் உருவானது. கிரிப்டோ மீது இருந்த ஈர்ப்பால் ஒரு குழுவினர் உலகம் முழுவதும் இதனை வாங்கவும் விற்கவும் தயாராகினர். இதனால் கிரிப்ட்டோ பரிவர்த்தனை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது.
உடனடியாகவே கிரிப்டோகரன்சியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் 8000-க்கும் மேலான கிரிப்டோகரன்சிகள் புழங்கிக் கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கிரிப்டோகரன்சிகளின் இன்றைய சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரைக் கடந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிட்காயின் மட்டும் தானா?
பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோகரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. முதலில் உருவான பிட்காயினை தொடர்ந்து எத்ரியம் காயின் பிரபலமானது. இது இரண்டுக்கும் தான் நீண்டகாலமாக போட்டியாக இருந்தது. தற்போது டோஜ் காயின் என பலவித கிரிப்ட்டோகரன்சிகள் வந்துவிட்டன.
பைனான்ஸ், சொலானா, கர்டானோ, டெரா, எக்ஸ்.ஆர்.பி, அவலாஞ்சி என வெவ்வேறு கிரிப்ட்டோகரன்சிகளும் புழக்கத்தில் உள்ளன. இவற்றையெல்லாம் யார் இயக்குகிறார்கள், கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே உலகில் யாருக்கும் தெரியாது.
மோசடியா?
கிரிப்டோகரன்சி பற்றி கேள்விப்படும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய ஆர்வமாய் இருக்கிறார்கள். ஆனால் எந்த உத்தரவாதமும், கட்டுப்பாடும் இல்லாமல் ரகசியமாக செயல்படும் இந்த கிரிப்ட்டோ சந்தையை தடை செய்யவே உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நாணயம் என்பது எப்போதுமே அரசுக்கு உரிமையானது. இறையாண்மை பெற்ற அரசின் மையப் புள்ளியாக நாணயம் செயல்படுகிறது. ஆனால், கிரிப்டோகரன்சிகள் இதனை கேள்விக்குள்ளாக்குகிறது. உலகம் முழுவதும் உள்ள டாலர்கள், ரூபாய் நோட்டுகள், பவுண்டுகள் என அனைத்த விதமான நாணயங்களின் மொத்த மதிப்பு என்பது 80 ட்ரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அறிமுகமாகி 12 ஆண்டுகளில் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 3 ட்ரில்லியன் டாலராக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவேதான் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் கிரிப்ட்டோ கரன்சியை எதிர்க்கின்றன. யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காத இந்த நாணயத்தை ஏற்பது குறித்து எல்லா நாடுகளுமே தயக்கம் காட்டுகின்றன.
இதுமட்டுமின்றி கிரிப்டோகரன்சிகளில் பல மோசடிகளும், திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் இதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. 2014 ஆம் ஆண்டில், உலகின் மிகப் பெரிய பிட்காயின் எக்சேஞ்சான மெட்காக்ஸ் திடீரென திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதன் வசம் இருந்த 473 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயின்களை யாரோ திருடிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து முதலீ்ட்டாளர்கள் யாரும், எங்கும் சென்று புகார் அளிக்க முடியாது என்பது தான் வேதனையான விஷயம்.
கிரிப்டோகரன்சிகளில் முறைகேடான பணத்தை முதலீடு செய்யவும் முடியும். இது கறுப்புப் பணத்தை புழக்கத்தில் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. வங்கிகள் மூலமான பரிவர்த்தனைகளில் முறைகேடான, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பதால் இதுபோன்ற வழிகள் மூலம் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் இதற்கு தடை விதிக்க அரசுகள் விரும்புகின்றன. இதன் பரிவர்த்தனையை வரி நடைமுறைக்குள் கொண்டு வருவது என்ற குழப்பமும் பல்வேறு நாடுகளில் நீடிக்கிறது.
இந்த கிரிப்டோகரன்சிகளை பொன்சி திட்டம் போன்ற மோசடித் திட்டங்கள் போன்று செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. கிரிப்டோகரன்சிகளுக்கு அனுமதி அளித்தால் அது பற்றி தெரியாதவர்களும் அதில் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. போதுமான அறிவும் விழிப்புணர்வும் இல்லாதவர்கள் அதில் பணத்தைப் போட்டுவிட்டு பறிகொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கடுமையாக எதிர்க்கும் இந்தியா
இந்தியாவும் கிரிப்டோகரன்சிகளை கடுமையாக எதிர்க்கிறது. காரணம் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரித்தால் அதனால் நாட்டின் நாணய மதிப்பும் நாணயத்துக்கான அவசியமும் கேள்விக்குறியாகும். இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் உள்ள தயக்கம் தான். கிரிப்டோகரன்சியை வரன்முறைபடுத்த அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் கிரிப்ட்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும் என இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கிரிப்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இவை அனைத்துமே கிரிப்ட்டோகரன்சியை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முதல்கட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
எதிர்காலம் என்னவாகும்?
கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். அதன் பின்னணிகளைச் சாதாரண முதலீட்டாளர் புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதனை மேலும் சிக்கலாக்குகிறது. கிரிப்டோகரன்சியின் மதிப்பை கேட்டால் ஒவ்வொருவருக்கும் தலை சுற்றுகிறது. ஒரு பிட்காயினின் மதிப்பு இன்றைய நிலையில் 22 லட்சத்து 49 ஆயிரத்து 309 ரூபாய் ஆகும். ஆனால் மூன்று மடங்கு விலை உயர்வதும், ஒரே நாளில் மூன்று மடங்கு விலை சரிவதும் சகஜம். விலை மிக அதிகம் என்பதால் சரிவு கண்டால் மொத்த முதலீடும் காலியாகி விடும்.
உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஒரு பிட்காயினின் விலை சுமார் 20,000 டாலராக இருந்தபோது, ஒரே நாளில் திடீரென மூன்றில் ஒரு பங்கு விலை குறைந்தது. 2018-ல் இதன் விலை வெறும் 3,122 டாலர் அளவுக்கு வந்தது. கிரிப்டோசந்தையில் இருந்த பல லட்சம் கோடி ரூபாய் காணாமல் போனது.
ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் பணம் ஈட்ட முடியும் என்ற ஆசை உள்ளதோ அதே அளவுக்கு பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி செய்த முதலீட்டை பாதுகாப்பாக பெறுவதும் கேள்விக்குரியாகவே உள்ளது. இதனால் கிரிப்ட்டோகரன்சி என்பது விடை தெரியாத புதிராகவே தொடர்கிறது.