வருமான வரித் துறை வசமுள்ள தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்படுவது எப்படி? - ஓர் எளிய விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
3 min read

உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த தகவலையும் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று சாத்தியப்படுத்தி இருக்கிறது தொழில்நுட்பம். ஆனாலும் தங்களிடம் இருக்கும் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என அரசு நிறுவனங்கள் மக்களுக்கு நம்பிக்கையளித்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றத்தில் பல தில்லுமுல்லுகளும் நடத்தப்படுகின்றன.

விழித்திருக்கும் போதே ஆடையை உருவிக்கொண்டோடும் கதையாக வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வாங்கி, அவரது கணக்கிலிருந்தே பணம் பறிக்கும் சம்பவங்கள் அன்றாட செய்திகளாகிவிட்டன. இந்த நிலையில், தனிநபர் வருமானம் தொடர்பாக வருமான வரித் துறையில் இருக்கும் தகவல்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானது, எப்போது எல்லாம் வருமான வரித் துறையில் இருந்து விளக்கம் கேட்டுக் கடிதம் வரும், அதை எப்படி அறிந்து கொள்வது, தனிநபர் தகவல்களை வருமான வரித் துறை எவ்வாறு பாதுகாக்கிறது?

இது குறித்து தெளிவுபடுத்துகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...

எழுத்துபூர்வ விசாரணை: இன்றைக்கு பலர் வருமான வரித் துறையிலிருந்து தகவல்கள் கேட்டு எனக்கு கடிதம் வந்துள்ளது, நோட்டீஸ் வந்துள்ளது என்று அடிக்கடி சொல்லிக் கேட்கிறோம். வருமான வரித் துறையில் இருந்து எப்போதும் ஒருவருடைய தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவதே இல்லை. உங்களின் வங்கிக் கணக்கு எண் என்ன போன்ற கேள்விகளும் தனிப்பட்ட தகவல்களே. வருமான வரித்துறை ஒருபோதும் இது போன்ற கேள்விகளை கேட்பது இல்லை.

தனிப்பட்ட ஒருவருடைய வருமானம் தொடர்பான கேள்விகளை மட்டுமே வருமான வரித் துறை கேட்கும். அதுவும் எழுத்துபூர்வமாக மட்டுமே கேட்கும். அப்படி விளக்கம் கேட்டு அனுப்பப்படும் கடிதமும் வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியில் இருந்தே அனுப்பப்படும்.

வருமான வரித் துறையில் இருந்து பேசுகிறோம் என்று தொலைப்பேசி வழியாகவோ, கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தனிப்பட்ட தகவல்களே கேட்கப்பட்டால், அதற்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை, அதனைக் கண்டு கொள்ளவேண்டியத் தேவையும் இல்லை.

ரீ ஃபண்ட் என்னும் மாயை: இரண்டாவதாக பலர் குழப்பமடையும் ஒரு விஷயம், வருமான வரித் துறையில் இந்தாண்டு உங்களுக்கு "ரீ ஃபண்ட்" வந்திருக்கிறது. உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுங்கள் என்று வரும் செய்திகளில் குழப்பமடைந்து விடுகிறார்கள். இது குறித்து பல செய்திகள் வந்திருக்கின்றன.

நான் வருமான வரித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தபோது இது தொடர்பாக அதிமகன பத்திரிகைச் செய்திகளை வெளியிட்டிருக்கிறேன். வருமான வரித் துறை அதுபோன்ற தகவல்களை கேட்காது. அதுபோன்று தகவல் கேட்டு கடிதம் மின்னஞ்சல் வரும்போது நீங்கள் தைரியமாக வருமான வரித் துறையை தொடர்பு கொள்ளுங்கள். அப்படி எந்த தனிப்பட்ட தகவல்களையும் வருமான வரித் துறை கேட்பது இல்லை. இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் அதிகரித்துவிட்டன. அப்படிபட்ட மின்னஞ்சல்களுக்கும் வருமான வரித் துறைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

மூன்று விஷயங்கள் முக்கியம்: வருமான வரித் துறையில் இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வந்தால் அவற்றில் மூன்று, நான்கு விஷயங்கள் கட்டாயம் இருக்கும். முதலாவதாக உங்களின் "பான் எண்" அதில் இடம் பெற்றிருக்கும். தகவல் கேட்கப்படுபவரின் "பான் எண்" கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இரண்டாவதாக மதிப்பீடு ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது எந்த மதிப்பீடு ஆண்டு, நிதியாண்டு கணக்குப் படி ரீ ஃபண்ட் தரப்படுகிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். மூன்றாவதாக நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாமல், ரிட்டர்ன்ஸ் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பைசாவும் போலியும்: தனிப்பட்ட தகவல்கள் கேட்டு வரும் போலி மின்னஞ்சல் அல்லது கடிதங்களில், நீங்கள் இந்த ஆண்டு ரூ.52,000-ம் ரிட்டர்ன்ஸ் பெற தகுதியுடைவராக இருக்கிறீர்கள். இந்த தொகையினைப் பெறுவதற்கு உங்களின் வங்கி கணக்கு எண்ணை அனுப்பி வையுங்கள் என்று மட்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். அப்படி எதுவும் மின்னஞ்சல் அல்லது கடிதம் வந்திருந்தால் அதற்கு பதில் அளிக்காமல் தைரியமாக அதனை நிராகரித்து விடலாம். இதில் இன்னுமொரு விஷயம் இருக்கிறது. வருமான வரித் துறையில் இருந்து வரும் கடிதங்களில் இவ்வளவு பைசா என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்காது. அப்படி இருந்தால் அதை நாம் போலி என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் அதனை வருமான வரித் துறை மதிப்பீடு செய்து, அந்த கணக்கிற்கு வரி பாக்கி எவ்வளவு, எவ்வளவு வரி கட்டப்பட்டுள்ளது என்பதை சரிபார்த்து, பாக்கியை விட கட்டிய வரி அதிகமாக இருந்தால் தானாகவே அதனை வங்கிக்கணக்கில் திருப்பிச் செலுத்தி விடுவார்கள். அதிகமாக செலுத்திய தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 244 ஏ படி வட்டியும் சேர்த்து அனுப்பி விடுவார்கள்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை: வருமான வரித் துறையில் இருந்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் கேட்டு எந்தக் கடிதம், மின்னஞ்சல்களும் அனுப்பப்படுவதில்லை. அப்படி கேட்கப்படும் தகவல்களும் ஒருவரது வருமானம் தொடர்புடையதாக மட்டும் இருக்குமே தவிர, தனிப்பட்ட தகவல்களை விசாரிப்பதாக இருக்காது. இவையெல்லாவற்றையும் மீறி அந்தக் கடிதம் மின்னஞ்சல் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் தைரியமாக வருமான வரித் துறை அலுவலகத்தையோ அல்லது வருமான வரித் துறையில் பணிபுரிபவர்களையோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

வருமான வரித் துறையும் தனிநபர் தகவல்களும்: இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். ஒருவருடை தனிப்பட்ட தகவல்களை வருமான வரித் துறை கேட்காது சரி. தன்னிடமுள்ள தனிநபர் தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுமா? வருமான வரித் துறையின் மூலமாக என்னுடைய தனிப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமா என்று தோன்றலாம்.

வருமான வரிக்கு மற்றொரு பெயர் தனிநபர் வரி அல்லது தனிப்பட்ட நபரின் வரி என்பதே. இதற்கு என்ன அர்த்தம் என்றால் ஒருவருக்கு என்ன வருமானம் வருகிறது, அதற்கு எவ்வளவு வரி கட்டப்பட்டடுகிறது என்பது அந்த தனிநபர், வருமான வரித் துறைக்கு இடையிலான தனிப்பட்ட விஷயம். தனிநபருடைய வருமானம் பற்றிய தகவல்கள் வருமான வரித் துறையில் பணிபுரிவர்களுக்குள்ளேயே பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக, இரண்டு தனிநபர்களுடைய வருமானங்களை மதிப்பீடு செய்யும் இரண்டு வெவ்வேறு அலுவலர்களும் அந்தத் தகவல்களை தங்களுக்குள் பரிமாரிக்கொள்வதில்லை.

ஆர்டிஐ செல்லாது: ஒவ்வொரு மனிதருக்கும் அவரின் வருமானம் குறித்த தகவல்களை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பம் இருப்பதில்லை. அதனால் வருமான வரி தேவைக்காக பகிர்ந்து கொள்ளப்படும் தனிநபர் தகவல்கள் எப்போதும் பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை. அவை முழுவதும் தனிப்பட்டது மற்றும் பாதுகாக்கப்பட வேண்டியதும் கூட என்பது வருமான வரித் துறைக்குத் தெரியும். அதனால்தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் யார் என்ன கேள்வி கேட்டிருந்தாலும் தனிநபர் வருமானம் சார்ந்த தகவல்களை வருமான வரித் துறை வெளியிடுவதில்லை. இந்தக் கேள்வியில் எந்த பொதுநல நோக்கமும் இல்லை என்று கூறி பதிலளிக்க மறுத்துவிடும்.

கணவன், மனைவிக்குக் கூட தராது: அதனால்தான் தனிநபரின் வருமானம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம், தனிநபர் சார்ந்த விஷயம் அதனை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றங்களும் தெரிவித்திருக்கின்றன. இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான சங்கதி என்னவென்றால், கணவனுடைய வருமானம் எவ்வளவு என்று மனைவிக்கும், மனைவியினுடை வருமானம் எவ்வளவு என்று கணவன் தகவல் கேட்டாலும் வருமான வரித் துறை தகவல் அளிப்பதில்லை. ஏனெனில், வருமானம் தொடர்பான அனைத்து விஷயங்களும் தனி நபர் சார்ந்தது. ஒருவர் வங்கிக் கடனுக்காக விண்ணப்பித்திருந்து அவரது வருமானம் குறித்து வங்கி வருமான வரித் துறை அதற்கு பதில் அளிப்பது இல்லை.

தனிநபரின் வருமானம் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம் என்பதை வருமான வரித் துறை நன்றாக புரிந்து வைத்திருக்கிறது. எப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வருமான வரித் துறை கேட்பது இல்லையோ, அதுபோல தங்களிடமுள்ள தனிநபர் தகவல்களையும் யாரிடமும் பகிர்ந்து கொள்வதும் இல்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in