

தங்கம், நிலம், வீடு ஆகியவை நம் முதலீட்டில் முக்கிய அங்கம் வகித்தாலும் எளிமையான முதலீடு வங்கி முதலீடாக பார்க்கப்படுகிறது. வங்கியில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தொகையை பிக்ஸடாக முதலீடு செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டியை பெறுவது என்பது பலரும் செய்யும் முதலீடாக உள்ளது. இதனை தாண்டி ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை நோக்கிச் செல்கின்றனர். ஆனால் சரியான புரிதல் இல்லாமல், கண்காணிப்பு இல்லாமல் போனால் இந்த முதலீடு கையை கடித்து விடும் ஆபத்தும் உண்டு.
இந்தவகையில் வங்கி வட்டியை விட சற்றே அதிகமாக அதேசமயம் பாதுகாப்பான முதலீடுகளை பலரும் எதிர்பார்க்கின்றனர். இதில் ஒன்று கடன் பத்திரங்கள் உள்ளடக்கிய பாண்டுகள் ஆகும். இது நிலையான வட்டியை, வருவாயை கொடுப்பதுதான் அதன் சிறப்பு.
பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால், லாபத்தில் பங்கு கொடுப்பார்கள். ஆனால், கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை, வட்டி மட்டுமே கிடைக்கும். அரசாங்கமும் பெரிய அளவில் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி தொடர்ந்து கடன் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு தேவையான நிதியை திரட்டி வருகின்றனர்.
கடன் பத்திரச் சந்தை என்பது பங்குச் சந்தையைவிட மிகப் பெரியது. மத்திய அரசு கடந்த ஆண்டு 12 லட்சம் கோடி அளவுக்கு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டியது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதை அரசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடன் பத்திரம், பாண்டுகள் என்றால் என்ன?
கடன் பத்திரங்களில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் Government Securities, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் Corporate Bond அல்லது Debenture என பல வகைகள் உண்டு. Bond என்பது ஒரு குறிப்பிட்ட வட்டித் தொகையை மாதம் அல்லது வருடம்தோறும் தருவதாகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட முதிர்வுத் தொகையை மட்டும் கொடுப்பதாகவும் இருக்கும்.
சில corporate debenture-கள் பின்னர் பங்குப் பத்திரமாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன் வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு காலகட்ட வரையறையில் பாண்டுகளை வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கி என்ன வட்டி விகிதத்தை இந்த பாண்ட்களுக்கு கொடுக்கிறதோ, அதை வைத்துத்தான் மற்ற அரசு மற்றும் தனியார் கார்பரேட் நிறுவனங்களும் வட்டியை நிர்ணயம் செய்கின்றன.
கடன் பத்திரங்களை வாங்குபவர்கள் 3 வருடம், ஐந்து வருடம், 7 வருடம், 10 வருடம் காலக்கெடுவுடன் வாங்குகின்றனர். வட்டி விகிதம், பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்பது கோட்பாடு. நீண்டகாலத்துக்கு (3 ஆண்டுக்கும் அதிகமாக) கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும்போது, நிகர வட்டி (ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி – பணவீக்க விகிதம்) சில ஆண்டுகளில் குறைவாகவும், சில ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும். அதன் அடிப்படையில் வருவாய் வரும்.
ஒருவர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். வருமான வரி, பணவீக்கம் நீங்கலாக உள்ள நிகர வருவாயைக் கணக்கிடுவது முக்கியம். ஆனால், வங்கியில் பிக்ஸட் டெபாசிட் செய்தால் கிடைக்கக்கூடிய வட்டியைவிட அதிக வட்டி கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கார்பரேட் பாண்டுகள்
கார்பரேட் நிறுவனங்கள் வெளியிடுகிற கடன்பத்திரங்களைப் பொறுத்தவரை அரசு வெளியிடும் பாண்டுகளை விடவும் கூடுதல் லாபம் தருகின்றன. அதேசமயம் அந்த நிறுவனம் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பது முக்கியம். அந்த நிறுவனத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன லாபம் ஈட்ட வாய்ப்பு உண்டு.
அதன் எதிர்காலம் எப்படி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது கடன் பத்திரம் என்றாலும் நஷ்டத்தை சந்திக்கும் எந்த ஒரு நிறுவனத்தாலும் ஒப்புக் கொண்ட வட்டியை தர வாய்ப்பிலாமல் போகக்கூடும்.
இதுமட்டுமின்றி நிறுவனங்களின் பாண்டுகள் ஐந்து லட்சம், பத்து லட்சம் ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. குறைவான தொகையை முதலீடு செய்ய வாய்ப்பில்லை. ஆகவே அவ்வளவு பெரிய பணத்தை முதலீடு செய்யும் முன்பு நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொண்டு, அதன் செயல்பாடு, லாபம் ஈட்டுதல் உள்ளிட்டவற்றை அறிந்து செய்ய வேண்டும்.
வருவாய் எவ்வளவு?
வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட்டில் சராசரியாக 5 சதவீத வட்டி கிடைக்கும். அதில் வரி பிடித்தம் போக, 4.5 சதவீதம் கைக்கு வரும். ஆனால், 3 வருட கடன் பத்திரங்களில் ஆறே முக்கால் சதவீதம் அளவுக்கு வட்டி கிடைக்கும். கடன் பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி உண்டு. ஆனால், சில கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கான வரியை பிடித்த் செய்துகொண்டு தருவார்கள். சில கடன் பத்திரங்களில் முழுமையாகத் தருகிறார்கள்.
மாதம் அல்லது வருட வட்டி கொடுக்கும் நீண்ட கால கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். வட்டி வருவாய் மாதம் அல்லது வருடம்தோறும் உங்கள் செலவுக்கு தேவை என்றால் மட்டுமே அவ்வாறான கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் வரும் மாதாந்திர, வருடாந்திர வட்டி வருவாயை மீண்டும் சரியாக முதலீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு வரும் சிறியத் தொகைகளை மீண்டும் அதிக வட்டி வரும் வகையில் முதலீடு செய்ய முடியாது. எனவே, முதிர்வு கால வட்டி வழங்கும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது கால அளவை நிர்ணயிப்பது முக்கியம்.
பணத்தை பல்வேறு கால அளவுகளில், பல கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். வரி சேமிப்புக்கு அரசு கடன் பத்திரங்கள் உதவும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க நினைத்தால், corporate bond அல்லது debenture வாங்கலாம். இதில் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு.
எப்படி வாங்குவது?
பத்திரங்களில் முதலீடு செய்ய பொதுவாக வங்கியில் 'டிமேட்' கணக்கு தொடங்க வேண்டும். சில வகை கடன் பத்திரங்கள் சான்றிதழ் போன்று வாங்கிக் கொள்ளும் வாய்ப்புண்டு. ஆனால் பொதுவாக டிமேட் கணக்கு மூலம் வாங்குவதே பாதுகாப்பானது. ஆனால் டிமேட் கணக்கை பராமரிக்க ஆண்டுதோறும் ஒரு தொகையை செலுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக, அரசு கடன் பத்திரங்களில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி, சாதாரண மக்களும், சிறிய முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய, 'ரீடெய்ல் டைரக்ட்' என்ற திட்டம் உதவுகிறது.
ரிசர்வ் வங்கியின் ரீடெய்ல் டைரக்ட், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும், மூலதனச் சந்தைகளில் சுலபமாக முதலீடு செய்யவும் உதகிறது. இதில், சிறிய முதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திரங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம். முக்கியமாக நடுத்தர வர்த்தகத்தினர், தொழிலாளர்கள், சிறிய வர்த்தகர்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் நேரடியாக கடன் பத்திரங்களை வாங்கலாம்.
அரசு கடன் பத்திரங்கள் என்பதால் முதலீட்டிற்கு 100 சதவீதம் உத்தரவாதம், பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும். இத்திட்டம், நிதிச் சந்தையில் அனைவரையும் இணைக்க துணை புரிகிறது.