

உலக அளவில் பெரும் மதிப்பு மிக்க உலோகமாக தங்கம் விளங்கி வருகிறது. பன்னெடுங்காலமாகவே தங்கத்தின் மீதான மதிப்பு மக்களிடம் இன்றும் தொடர்கிறது. உலக அளவில் வங்கிகள் தொடங்கி வணிக நிறுவனங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வர்த்தக பொருளாக பயன்படுத்துவதும் இன்று வரை வழக்கமாக உள்ளது. தங்கத்தை அதிகமாக இருப்பு வைப்பது பல்வேறு நாடுகளின் வங்கிகளே.
பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்படும் வீழ்ச்சி போன்றவற்றை ஈடுகட்ட தங்கம் உதவும் என்பதால் இது உலகளாவிய முதலீட்டு பொருளாக உள்ளது. இன்று அமெரிக்க நாணயமான டாலர் மதிப்பு மிக்கதாக இருப்பதுபோலவே உலகம் முழுவதும் எளிதாக விற்க முடியும் பொருளாக தங்கம் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் சாதாரண குடும்பங்களில் கூட தங்கம் என்பது வாழ்வில் ஒன்றாக கலந்து விட்ட ஒன்றாகும். இந்தியாவில் ஆபரணம் மற்றும் முதலீடும் கொண்ட ஒன்றாக கருதப்படுகிறது. முதலீடாக எண்ணினாலும் கூட இந்தியர்கள் பெருமளவு தங்கத்தை ஆபரணமாகவே வாங்குகின்றனர்.
கேரட் அளவீடு
எனவே தங்கத்தை ஆபரணமாக வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச தரம், சான்று, விற்பனை மதிப்பு என தங்கத்திற்கும் மற்ற பல பொருட்களை போலவே உலகளாவிய குறியீடுகள் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இந்த காலத்தில் தங்கம் வாங்கும் ஒவ்வொருவரும் இதனை கண்டிபாக அறிந்திருப்பது அவசியம்.
தங்கம் என்பது 24, 22, 18, 14 கேரட்களாக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையானதாகும். இதனை நாணயம், பிஸ்கட் என அளவில் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியாது. அதனுடன் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்தே ஆபரணம் செய்ய முடியும்.
22, 18, 14 கேரட்களில் தங்க ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. ஆபரணமாக தயாரிக்க பெருமளவு பயன்படும் 22 கேரட் தங்கம் 92 சதவீதம் தூயதாக இருக்கும். அதேசமயம் நகைகள் அனைத்துமே 22 காரட் (91.6 சதவீதம்) தங்கம் சேர்க்கப்பட்ட நகைகளாக இருக்கும் என கருதக் கூடாது.
எவ்வளவு கேரட் என்பதை பொருத்து அதில் கலந்துள்ள பிற உலோகங்களின் அளவு இருக்கும். 22 கேரட் தங்க ஆபரணத்தில் தங்கம் கூடுதலாகவும், செம்பு குறைவாகவும் இருக்கும். அதேசமயம் 14 கேரட் ஆபரங்களில் 22 கேரட்வை விடவும் தங்கம் குறைவாகவே பயன்படுத்தப்படும். எனவே அதற்கு ஏற்ப அதன் விலைகளில் மாற்றம் இருக்கும்.
எனவே நகை வாங்குபவர்கள் தங்கத்தின் தூய்மைக்கான அளவீடான கேரட் மதிப்பையும், அதற்குரிய விலையையும் சரியாக கொடுக்கிறோமோ என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை சரி பார்க்காமல் தங்க நகைகளை நீங்கள் வாங்கக்கூடாது.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்தாலும் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டங்களாக ஹால்மார்க் கட்டாயம் என்ற வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறன.
ஹால்மார்க் கட்டாயம்
சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது. இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும். இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பெற்றதாக இருக்க வேண்டும். அதேபோல இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும் .
ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கு நாடுமுழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மையங்கள் உள்ளன. இதில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்கள் பிஐஎஸ் பதிவு பெற்றுள்ளனர். மாவட்டங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அனைவரும் ஹால் மார்க் மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.
இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஹால்மார்க் என்பது தரத்துக்கு வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே. எனவே 18 காரட், 20 காரட் என எந்த மதிப்பிலான தங்கத்திற்கும் ஹால்மார்க் தரச்சான்று பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது அதில் உள்ள கேரட் எவ்வளவு என்பது நகையின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம்.
தயாரிப்பு, ஆண்டு, ரசீது
ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகள் என்பதைக் குறிக்கும் முக்கோண வடிவிலான குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். அதை உறுதி செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்க வேண்டும்.
நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் பழைய நகையை மெருகேற்றி விற்கும்போது, அதனை தவறுதலாக புதிய நகை என எண்ணி வாங்குவதை தவிர்க்க முடியும்.
நகையை யார் உற்பத்தி செய்தார்கள், எந்த விற்பனையாளர் விற்கிறார் என்பது குறித்த சீல் ஆபரணத்தின் மேல் இருக்கும். இதன் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் நகைகளை வாங்கி ஏமாறுவதைத் தவிர்க்க முடியும்.
ஹால்மார்க் தரச்சான்று அளித்த பரிசோதனைக் கூடத்தினை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு குறியீடு நகையின் மேல் அச்சிடப்பட்டிருக்கும். இதைக் கொண்டு எந்த இடத்தில் நகைக்கு தரச்சான்று வழங்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் ஹால்மார்க் தரச்சான்று பெற்ற நகைகளில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மற்றும் பரிசோதகர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கு ரசீது கட்டாயம் தேவை. எனவே ஜிஎஸ்டி வரியை தவிர்ப்பதற்காக சிலர் ரசீது இல்லாமல் நகை வாங்கும்போக்கு உள்ளது.
அவ்வாறு ரசீது இல்லாமல் நகை வாங்கினால் பிரச்சினை ஏற்படும்போது புகார் அளிப்பது கடினமாகி விடும். இதுமட்டுமின்றி வரும்காலங்களில் நகை திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ ரசீதின்றி எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது. எனவே ரசீதுடன் தங்கம் வாங்குவது அவசியமாகும்.