டெர்ம் இன்சூரன்ஸ் ஏன் முக்கியம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?

டெர்ம் இன்சூரன்ஸ் ஏன் முக்கியம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?
Updated on
3 min read

புதுடெல்லி: வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது போல மனிதர்களுக்கு காப்பீடு வழங்கும் அடிபடை திட்டமான டெர்ம் இன்சூரன்ஸ் மிக முக்கியமானது. எத்தனையோ வகையான ஆயுள் காப்பீடு திட்டங்கள் தற்போது வந்து விட்டபோதிலும் இதில் தனிச்சிறப்பு கொண்டதாகவும், அவசிய தேவையாகவும் டெர்ம் இன்சூரன்ஸ் மாறியுள்ளது.

ஆயுள் காப்பீடு எனப்படும் வாழ்க்கைக்கான இன்சூரன்ஸ் திட்டம் குறித்து தற்போது பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. வாகனம், வீடு, மருத்துவம், தொழில், விவசாயம் என அனைத்துக்கும் காப்பீடு இருப்பதை போலவே மனிதனுக்கு காப்பீடு அவசியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. இதனால் ஆயுள் காப்பீடு எடுக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

ஆயுள் காப்பீடு என்று கூறினாலும் பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்கள் நம் முன் உள்ளன. இதில் எதனை தேர்வு செய்வது எதில் அதிகமான பயன் என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுவது இயல்பு தான். அந்த வகையில் காப்பீடுகளில் முக்கியமானது டெர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும்.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் பாலிசிதாரருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நிதிக் காப்பீடு வழங்குகிறது. அந்தகாலத்தில் அவர் இறந்தால் யாரை வாரிசு தாரராக நியமித்து இருக்கிறாரோ அவருக்கு அல்லது அந்த குடும்பத்துக்கு அந்த தொகை வழங்கப்படும். இருப்பினும் பாலிசி காலம் முடிந்து விட்டால் மற்ற காப்பீடுகளில் உள்ளது போன்று கட்டிய தொகை திரும்பி வராது. அதாவது இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதை முதலீடாக கருதாமல் அதனை எதிர்கால பாதுகாப்பு என்ற நோக்கில் எடுக்கப்படுவதாகும்.

மற்ற பல பாலிசிகளை ஒப்பிடுகையில் இதற்கான பிரிமியம் மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம் உயரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் தொகை மிக அதிகமாகவும் இருக்கும்.

உதாரணமாக 25 வயது நபர் ஒரு கோடி ரூபாய் பாலிசி திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அவர் கட்டவேண்டிய டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 என்ற அளவில் மட்டுமே இருக்கும். அவர் இறந்து விட்டாலோ கிடைக்கும் தொகை ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சலுகைகள், வாய்ப்புகள்:

பாலிசிதாரர்கள் இறந்தாலும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். ஒருவர் செலுத்தும் பிரீமியம் வயது, பாலினம், கால அளவு, உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் பல காரணிகளைப் பொறுத்து மாறக்கூடியது.

சில திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் காப்பீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. சில திட்டங்கள் 60 வயதுக்கு மேல் வருமானம் குறைந்த பிறகு பிரிமீயம் செலுத்தாமல் அதேசமயம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு காப்பீடு தருகிறது.

சில நிறுவனங்களின் திட்டங்களில் தீவிர நோய் ஏற்பட்டால் பிரீமியத்தில் தள்ளுபடியையும் உறுதி செய்கிறது. மேலும், இந்தத் திட்டம் தற்போதுள்ள சட்டங்களின்படி வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.

விபத்துக்குப் பிறகு மொத்த நிரந்தர ஊனம் ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகையைத் தவிர கூடுதல் வருமானப் பலன்களைப் பாலிசிதாரர் பெறலாம். பாலிசிதாரருக்கு குறிப்பிட்ட முக்கியமான நோய்களில் ஏதேனும் இருப்பது கண்டறியப்பட்டால், காப்பீட்டுத் தொகைக்கு சமமான மொத்தத் தொகையையும் பாலிசிதாரர்கள் பெறுவார்கள்.

இந்தத் திட்டம் சில நிறுவனங்களில் பெண்கள் மற்றும் புகையிலை பயன்படுத்தாதவர்களுக்கு சிறப்பு பிரீமியம் கட்டணங்களையும் வழங்குகிறது.

டெர்ம் இன்சூரன்ஸிலும் மற்ற பல பாலிசிகளில் இருப்பது போன்று ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் பெறலாம்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன?

50 லட்சத்திற்கும் குறைவான கவரேஜ் தொகைக்கு பல நிறுவனங்கள் உடல்நலப் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என அறிவித்துள்ளன.

சில நிறுவனங்களின் திட்டங்களில் தேவைகளுக்கு ஏற்ப மாற்றும் வசதியும் உள்ளது. எந்த நேரத்திலும் உங்கள் வாரிசுதாரர் மாற்றலாம்.

பிரீமியம் தள்ளுபடி, பர்மனெண்ட் டிஸ்எபிலிட்டி, க்ரிட்டிக்கல் இல்னஸ் ரைடர், ஆக்சிடென்டல் டெத் பெனிபிட் ரைடர் மற்றும் பிற ரைடர்களுடன் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களில் வசதிகள் உள்ளன.

உங்கள் டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் critical illness coverage இருந்தால், உங்கள் திட்டத்தில் கவர் செய்யப்பட்டுள்ள முக்கிய நோய்கள் (critical illness) உங்களுக்கு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான தொகை செலுத்தப்படும். இதற்கு நீங்கள் செலுத்தும் பிரிமீயத்தில் கூடுதலாக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.

இதுபோலவே விபத்தால் மரணம் ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க Accidental death benefit வசதியும் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களிலும் உள்ளது. இதனை தேர்வு செய்தால் அதற்கான பயனை பெறலாம். பல நிறுவனங்கள் வழக்கமான மரணத்திற்கு வழங்கப்படும் தொகையை விடவும், விபத்து மரணத்துக்கு 2 மடங்கு தொகையை வழங்குகின்றன.

வருமான வரி விலக்கு

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளையும் டேர்ம் பிளான்கள் வழங்குகின்றன. கூடுதலாக, திட்டத்தின் கீழ் பெறப்படும் பலன்கள் பிரிவு 10 (10D) இன் கீழ் வரியற்றதாகக் கருதப்படுகிறது.

வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ், பாலிசிதாரரும் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1,50,000 வரை வரி விலக்குகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. பாலிசிதாரருக்கு மட்டுமின்றி வாரிசுதாரருக்கும் இந்த வகைத் திட்டம் வரியில்லா சலுகையை வழங்குகிறது.

அதேசமயம் சரியான டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்வது மிக முக்கியம். கிடைக்கக்கூடிய பல திட்டங்களில், நிறுவனங்களில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்திற்குச் செல்வது முக்கியமாகும்.

மேலும் பாலிசி எடுத்தவர் இல்லாத நேரத்தில் குடும்பத்திற்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் திட்டமாக இருக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் தொகை உங்கள் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in