

வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகி கடன் கேட்டு விண்ணப்பித்து, அதற்கான அனைத்து நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் வங்கிக் கடன் கொடுக்க சம்மதிக்கும். கடன் வழங்கும் சமயம், வடிக்கையாளருக்கு ஒப்புதல் கடிதம் (Sanction Letter) ஒன்றை வழங்கும். இதில்தான் மிக மிக கவனம் தேவை என்று நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான 'குறள் இனிது' சோம.வீரப்பன் கூறும்போது, "உதாரணமாக, வாடிக்கையாளர் வங்கியில் ரூ.10 லட்சத்திற்கு வாகனக் கடன் பெற்று கார் வாங்குகிறார். அதற்கு வங்கி ஒப்புதல் கொடுக்கும். வாடிக்கையாளர் மார்ஜின் போக, ரூ.7.5 லட்சம் வாகனக் கடன் கொடுக்க ஒப்புதல் தருகிறது என்றால், அந்த கடன் என்னென்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது என்பது முக்கியம்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செய்கின்ற பெரிய பிழை, வங்கியில் வாகனக் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு, வங்கி கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கொடுத்து, பின்னர் கடன் கிடைத்து வீட்டிற்கு கார் வந்த மகிழ்ச்சியில், வங்கியின் விதிமுறைகளை புறந்தள்ளி விடுவார்கள். பிற்காலத்தில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஏதாவது புரிதல் குறைபாடு அல்லது பிரச்சினை வரும்போது இந்த ஒப்புதல் கடிதம் முக்கியப் பங்காற்றும்.
அதனால், தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன், தொழிற்சாலைகளுக்காக வாங்கப்பட்ட கடன் என எந்த வகைக்கடனாக இருந்தாலும், அதற்கு ஒப்புதல் கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வது அவசியம். பெரும்பாலான வங்கிகள் அவர்களாகவே ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்து விடுவார்கள். அதேபோல அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என ஒப்பதல் கடிதத்தில் வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கும் வழக்கம் பல வங்கிகளில் இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளரிம் அந்தக் கடிதத்தின் பிரதி இல்லையென்றால் விதிமுறைகள் குறித்து வாடிக்கையாளருக்கு தெரிய வராது.
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வாடிகையாளர் ஒருவருக்கு கடன் வழங்கப்படும்போது அது என்னென்ன நிபந்தனைகள், விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுகிறது என்று சொல்ல வேண்டியது வங்கியின் கடமை. அதனைத் தெரிந்துகொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களின் உரிமை. பொதுவாக எந்த ஒரு கடன் வாங்கினாலும் அந்த வங்கிக்கடன் வாங்க கொடுத்த விண்ணப்பப்படிவத்தின் நகல், கடனுக்காக வழங்கப்பட்டட ஆவணங்களின் நகல்கள், வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதம், வங்கிக்கொடுத்த ஆவணங்களை தனியாக ஒரு பைலில் பாதுகாத்து வைத்திருப்பது நலம்.
கடிதத்தில் என்னென்ன இருக்கும்? - கடிதத்தில் வாடிக்கையாளரின் பெயர் இருக்கும். அடுத்ததாக எவ்வளவு தொகை கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு எந்த வகையில் கடன் வழங்கப்படுகிறது என்று கடன் தன்மைப் பற்றிய தகவல்கள் இருக்கும். பிறகு மொத்தக் கடன் தொகையில் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மார்ஜின் தொகை எவ்வளவு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்ததாக, செக்யூரிட்டி என்று ஒரு காலம் இருக்கும். அதாவது, நீங்கள் வாங்கியக் கடனுக்கு என்ன செக்யூரிட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அடுத்தகாத திருப்பிச் செலுத்தும் காலம், வட்டி குறிப்பிடப்பட்டிருக்கும். இது மிகவும் முக்கியமானது. கடனை எத்தனைத் தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும். அதில் ஏதாவது தவணைச் சலுகை உண்டா, தவணையை எப்போது செலுத்த ஆரம்பிக்க வேண்டும் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தது வட்டி, கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு, வட்டி ரெப்போ போன்றைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா, அது எப்போது மாறும் போன்ற விபரங்களும் அந்த கடிதத்தில் இருக்கும்.
இவை தவிர கியாரண்டி இருந்தால் யார் கியாரண்டி என்றும், கொலாட்ரல் செக்யூரிட்டி இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு மற்ற நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, வாடிக்கையாளர் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த காலதாமதம் செய்தால் அதற்கு எவ்வளவு வட்டி போடப்படும், உங்களிடம் இருக்கும் சொத்தை வங்கி எத்தனை மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வரும் அதற்காக ஆகும் செலவை யார் ஏற்றுக்கொள்ளவேண்டும் போன்ற விபரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்" என்றார்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்