

வாடிக்கையாளர்கள் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது, அந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கலாமா, வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், அதற்கான வருமானம் அவர்களுக்கு இருக்கிறதா என்பன போன்ற விபரங்களை விசாரித்து சரிபார்த்த பின்னர் வங்கி கடன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யும். இவை தவிர கடனுக்கு ஈடாக செக்யூரிட்டிகளாக சில உடமைகளையும் வங்கிப் பெற்றுக் கொள்வதும் உண்டு.
இந்த அடிப்படையில் வங்கிகள், வாடிக்கையாளருக்கு பல வழிமுறைகளில் கடன் வழங்குகின்றன. அவற்றில் ஒன்றுதான் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியின் மீது வழங்கப்படும் கடன். ஒருவருக்கு வங்கியில் இருக்கும் வைப்பு நிதியின் அடிப்படையில், அதனை ஈடாக கணக்கில் எடுத்துக் கொண்டு வங்கிகள் கடன் வழங்குகின்றன.
அப்படி வைப்பு நிதி மீது வழங்கப்படும் கடன்கள், கடன் ஒப்புதல் கடிதம் குறித்து தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம.வீரப்பன்.
வைப்புத்தொகை மீது கடன் (Deposit Loan): "எதிர்காலத் தேவைக்காக குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக டெபாசிட் செய்திருப்பதற்கு நிரந்தர வைப்புத் தொகை என்று பெயர். இந்த வைப்புத் தொகைகளுக்கென்று முதிர்வு காலங்கள் உண்டு. அதுவரையில் அதனைத் திருப்பி எடுக்க முடியாது. இந்த நிலையில், இடையிலேயே வாடிக்கையாளர்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. ஆனால் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்கவும் முடியாது. அப்போது என்ன செய்யலாம் என்று வாடிக்கையாளர்கள் குழம்பிப் போகலாம். அப்படிபட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று வங்கி அவர்களுக்கு வழிகாட்டுகிறது. அதாவது குறிப்பிட்ட அவசரத் தேவையை சரி செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் வைப்புத் தொகையின் மீது கடன் பெற்றுக் கொள்ள வங்கி வகை செய்கிறது.
முன்தேதியிட்ட முதிர்வு: நிரந்தர வைப்புத் தொகையைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை 3 வருடங்களுக்கு நிரந்த வைப்பு தொகையாக வங்கியில் போட்டிருக்கிறார். ஆனால், ஏப்ரல் மாதத்தில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால், அவர் வங்கியை அணுகி, முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திருப்பித் தருமாறு கேட்கலாம். அப்படிக் கேட்கும்போது எத்தனை மாதம் பணம் வங்கியில் இருந்ததோ அந்த மாதங்களுக்கு வட்டி கணக்கிட்டு அதில் 1 சதவீதத்தை குறைத்துக் கொண்டு மீதித் தொகையை வாடிக்கையாளரிடம் வங்கிக் கொடுத்து விடும்.
இரண்டு வகை வைப்பு நிதிக்கடன்: மாறாக, வாடிக்கையாளருக்கு குறுகிய காலத்திற்கு மட்டுமே அவசரமாக பணம் தேவைப்படுகிறதென்றால், அவர் வைப்புத் தொகை மீது கடன் பெற்றுக்கொள்ளலாம். வைப்புத்தொகை மீதானக் கடன் இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறன. ஒன்று, வாடிக்கையாளரின் பெயரில் இருக்கும் சொந்த வைப்புத்தொகை மீது வழங்கப்படும் கடன். அதாவது, வாடிக்கையாளரின் பெயரிலோ, கூட்டாகவோ, மைனரின் பெயரில் வைத்திருக்கும் வைப்புத் தொகைகள் மீது கடன் வழப்படும்.
மற்றொன்று நண்பர்கள், உறவினர்கள் என மூன்றாவது நபர்கள் வைத்திருக்கும் வைப்புத் தொகையின் மீதும் வங்கி கடன் வழங்கும். சொந்த வைப்புத் தொகையின் மீது கடன் வாங்கும்போது வைப்புத் தொகை மீதான வங்கி வட்டியில் இருந்து 1 சதவீதம் அதிகமாக வட்டி வசூலிக்கப்படும். மூன்றாவது நபர் வைப்புத் தொகை மீது வங்கிக்கடன் வழங்கும் போது வட்டி 2 சதவீதம் அதிகம். அதேநேரத்தில் வட்டி ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் எனப்படும் ஆர்எல்எல்ஆர்-க்கு இணையாக இருக்க வேண்டும். உதாரணமாக, மூன்றாம் நபர் வைப்புத் தொகைக்கு வட்டி 5 சதவீதம் என்றால், அதிலிருந்து இரண்டு சதவீதம் சேர்த்து 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். அதே நேரத்தில் ரெப்போ வட்டி 7.5 சதவீதமாக இருந்தால் கடன் தொகைக்கான வட்டி 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.
எவ்வளவுக் கடன் வழங்கப்படும்? - வைப்புத் தொகை, அதன் மீது கடன் வாங்கும் காலம் வரையில் எவ்வளவு வட்டி வந்திருக்கிறதோ அந்தத் தொகையையும் இரண்டையும் சேர்த்து உள்ள தொகையின் மீது கடன் வழங்கப்படும். இந்த வகைக் கடன்களில் மார்ஜின், வைப்புத் தொகை முதிர்வடையும் காலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். வைப்புத் தொகை முதிர்வு அடைய நீண்ட காலம் இருக்கிறது என்றால், மார்ஜின் அதிமாக இருக்கும். சொந்த வைப்பு தொகை மீது குறைந்தது 5 சதவீதம், அதிகபட்சம் 20 சதவீதமும், மூன்றாவது நபர் வைப்பு தொகை மீது குறைந்த பட்சம் 25 சதவீதம் மார்ஜின் நிர்ணயம் செய்யப்படும். இந்த மார்ஜின் கணக்கிடும்போது நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியில் உள்ள டிடிஎஸ் தொகையை கழித்து விடுவார்கள். கடன் வழங்குவதற்கு நிரந்தர வைப்புத் தொகைக்கான உண்மை ஆவணத்தை வங்கி கேட்கும். அதனை லீனாக குறித்துக் கொண்ட பின்னர் கடன் ஒப்புதல் வழங்குவார்கள்.
ஒப்புதல் கடிதம் (Sanction Letter): வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகி கடன் கேட்டு விண்ணப்பித்து, அதற்கான அனைத்து நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் வங்கிக் கடன் கொடுக்க சம்மதிக்கும். கடன் வழங்கும் சமயம், வடிக்கையாளருக்கு ஒப்புதல் கடிதம் ஒன்றை வழங்கும். உதாரணமாக, வாடிக்கையாளர் வங்கியில் ரூ.10 லட்சத்திற்கு வாகனக் கடன் பெற்று கார் வாங்குகிறார். அதற்கு வங்கி ஒப்புதல் கொடுக்கும். வாடிக்கையாளர் மார்ஜின் போக, ரூ.7.5 லட்சம் வாகனக் கடன் கொடுக்க ஒப்புதல் தருகிறது என்றால், அந்த கடன் என்னென்ன விதிமுறைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது என்பது முக்கியம்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செய்கின்ற பெரிய பிழை, வங்கியில் வாகனக் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு, வங்கி கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் கொடுத்து, பின்னர் கடன் கிடைத்து வீட்டிற்கு கார் வந்த மகிழ்ச்சியில், வங்கியின் விதிமுறைகளை புறந்தள்ளி விடுவார்கள். பிற்காலத்தில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஏதாவது புரிதல் குறைபாடு அல்லது பிரச்சினை வரும்போது இந்த ஒப்புதல் கடிதம் முக்கியப் பங்காற்றும்.
அதனால், தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன், தொழிற்சாலைகளுக்காக வாங்கப்பட்ட கடன் என எந்த வகைக்கடனாக இருந்தாலும், அதற்கு ஒப்புதல் கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வது அவசியம். பெரும்பாலான வங்கிகள் அவர்களாகவே ஒப்புதல் கடிதத்தைக் கொடுத்து விடுவார்கள். அதேபோல அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என ஒப்பதல் கடிதத்தில் வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கும் வழக்கம் பல வங்கிகளில் இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளரிம் அந்தக் கடிதத்தின் பிரதி இல்லையென்றால் விதிமுறைகள் குறித்து வாடிக்கையாளருக்கு தெரிய வராது.
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வாடிகையாளர் ஒருவருக்கு கடன் வழங்கப்படும்போது அது என்னென்ன நிபந்தனைகள், விதிமுறைகளின் கீழ் வழங்கப்படுகிறது என்று சொல்ல வேண்டியது வங்கியின் கடமை. அதனைத் தெரிந்துகொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களின் உரிமை. பொதுவாக எந்த ஒரு கடன் வாங்கினாலும் அந்த வங்கிக்கடன் வாங்க கொடுத்த விண்ணப்பப்படிவத்தின் நகல், கடனுக்காக வழங்கப்பட்டட ஆவணங்களின் நகல்கள், வங்கி வழங்கிய ஒப்புதல் கடிதம், வங்கிக்கொடுத்த ஆவணங்களை தனியாக ஒரு பைலில் பாதுகாத்து வைத்திருப்பது நலம்.
கடிதத்தில் என்னென்ன இருக்கும்? - கடிதத்தில் வாடிக்கையாளரின் பெயர் இருக்கும். அடுத்ததாக எவ்வளவு தொகை கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு எந்த வகையில் கடன் வழங்கப்படுகிறது என்று கடன் தன்மைப் பற்றிய தகவல்கள் இருக்கும். பிறகு மொத்தக் கடன் தொகையில் வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மார்ஜின் தொகை எவ்வளவு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்ததாக, செக்யூரிட்டி என்று ஒரு காலம் இருக்கும். அதாவது, நீங்கள் வாங்கியக் கடனுக்கு என்ன செக்யூரிட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அடுத்தகாத திருப்பிச் செலுத்தும் காலம், வட்டி குறிப்பிடப்பட்டிருக்கும். இது மிகவும் முக்கியமானது. கடனை எத்தனைத் தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும். அதில் ஏதாவது தவணைச் சலுகை உண்டா, தவணையை எப்போது செலுத்த ஆரம்பிக்க வேண்டும் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அடுத்தது வட்டி, கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு, வட்டி ரெப்போ போன்றைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா, அது எப்போது மாறும் போன்ற விபரங்களும் அந்த கடிதத்தில் இருக்கும்.
இவை தவிர கியாரண்டி இருந்தால் யார் கியாரண்டி என்றும், கொலாட்ரல் செக்யூரிட்டி இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு மற்ற நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, வாடிக்கையாளர் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த காலதாமதம் செய்தால் அதற்கு எவ்வளவு வட்டி போடப்படும், உங்களிடம் இருக்கும் சொத்தை வங்கி எத்தனை மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வரும் அதற்காக ஆகும் செலவை யார் ஏற்றுக்கொள்ளவேண்டும் போன்ற விபரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்."