

இன்றைக்கு நகைக்கடன் வணிகம் என்பது வங்கிகளுக்கு எந்த ரிஸ்க்கும் இல்லாமல் நிகர லாபத்தை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாக இருக்கிறது. தினசரி நாடு முழுவதும் பல லட்சம் பேர் நகைக்கடன் பெறுகின்றனர்.
வங்கிகளின் வணிகத்தில், நம்பிக்கையான லாபம் தரும் வணிகமாக நகைக்கடன் முன்னணியில் நிற்கிறது. ஆனால் நகைக் கடன்தாரர்கள் குறித்து வங்கிகள் கரிசனத்துடன் எண்ணிப் பார்க்கின்றனவா? நகைக்கடனும் சமூக பொருளாதார வளர்ச்சியும் பொதுத்துறை வங்கிகள் நகைக்கடனுக்கு 7 முதல் 8 சதவீதமும், கூட்டுறவு நிறுவனங்கள் 10 முதல்11 சதவீதமும் தனியார் துறை வங்கிகள் 8 முதல்12 சதவீதமும் வட்டி வசூலிக்கின்றன. மேலும் கெடு தவறும்போது 3 சதவீதம் வரை அபராத வட்டியும், நோட்டீஸ் செலவுகளும், ஏலம் போட்டால் ஏலச் செலவுகளும் கடன்தாரரிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.
நகைக்கடன் மூலம் வங்கிகள் பெரும் லாபம் ஈட்டும்போது, அவை ஏன் நகை மதிப்பீட்டாளா் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணங்களை தங்கள் நிர்வாகச் செலவினத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எந்த ஒரு வங்கியை எடுத்துக்கொண்டாலும் மொத்த நகைக் கடன்தாரர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரூ.5 லட்சத்திற்கு கீழ் நகைக்கடன் பெறும் மத்தி்ய தர வர்க்கத்தினரே. இதனால் மதிப்பீட்டு மற்றும் சேவைக்கட்டண சுமையால் அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்களே. வாராக்கடன்களை வசூலிப்பதற்காக வங்கிகள் வட்டி, அபராத வட்டி போன்றவற்றில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யும் திட்டங்களையும் அறிவிக்கின்றன.
ஆனால் நகைக் கடன்தாரா்களுக்கு இது போன்றதொரு சலுகையை அளிப்பதற்கு வங்கிகள் முன்வருவதில்லை. வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்து அடமானக் கடன்கள் வழங்குவதற்கு வங்கிகள் சர்வேயர் மதிப்பீடு, சந்தை மதிப்பீடு வில்லங்கச்சான்று, வழக்கறிஞர் சட்டக் கருத்துரை என பல நிலைகளை கடக்க வேண்டும். இவ்வகை கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணம் நியாயமே. ஆனால் நகைக்கடன்களோ, வங்கிகளின் கூற்றுப்படி 30 நிமிடங்களில் கொடுக்கப்படும் கடன்களாகும். நகைக் கடனாளருக்கு இந்த 30 நிமிடங்களை இலவச சேவை நேரமாக அளிக்கக் கூடாதா?
பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினர் கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்காகத்தான் நகைக்கடன் பெறுகிறரா்கள். எனவே இதுவும் நாட்டின் சமூக பொருளாதர வளா்ச்சி சம்பந்தப்பட்ட கடன்தான்.
எனவே, வங்கிகள் குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் வரை நகைக்கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பீட்டுக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் இந்தச் சலுகையை அளிப்பதன் மூலம் நகைக்கடன் வணிகத்தில் தனியார் நிதி நிறுவனங்களின் போட்டியை எளிதில் சமாளித்து அதிகமான அளவில் வாடிக்கையாளா்களை கவர முடியும். அட்சய பாத்திரத்தின் அருமையை வங்கிகள் உணர்வது எப்போது?
> இது, லெவின் ஆறுமுகம் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்