அட்சய பாத்திரத்தின் அருமையை வங்கிகள் உணர்வது எப்போது?

அட்சய பாத்திரத்தின் அருமையை வங்கிகள் உணர்வது எப்போது?
Updated on
4 min read

அண்மையில் ஒரு பொதுத்துறை வங்கிக்குச் சென்றிருந்தபோது ஒரு பெண் என்னிடம் வந்து, தான் வங்கியில் ரூ.2.25 லட்சம் நகைக்கடன் வாங்கியதாகவும் கடன் தொகையில் ரூ.1,600 அளவில் பிடித்தம் செய்து பாக்கி கொடுத்திருப்பதாகவும் தெரிவித்து, ஏன் அந்தத்தொகை பிடிக்கப்பட்டது என்று விவரம்கேட்டார். நான் அவரது வங்கிக் கணக்குப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.

அப்பெண் அவ்வங்கியில் ரூ.70,000 மற்றும் ரூ.1,55,000 என இரண்டு நகைக்கடன்கள் பெற்றுள்ளார். ரூ.70,000 கடனுக்கு ரூ.350 மதிப்பீட்டாளர் கட்டணமும், ரூ.256 சேவைக்கட்டணம் மற்றும் வரியாகவும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் ரூ.1,55,000 கடனுக்கு ரூ.500 மதிப்பீட்டாளா் கட்டணமும் ரூ.457 சேவைக்கட்டணம் மற்றும் வரியாகவும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. ஆக, ரூ.2.25 லட்சம் கடனுக்கு ரூ.1564 பிடித்தம் செய்யப்பட்டிருந்தது. இதை நான் அப்பெண்ணிடம் தெரிவித்த போது, “ஏனய்யா.. வட்டியை முதல்லேயே பிடித்துவிட்டார்களா” என்றார் அப்பாவியாய்! “இல்லை. இது நகை மதிப்பீட்டாளா் மற்றும் சேவைக்கட்டணம். கடனுக்கு வட்டி தனியாக செலுத்த வேண்டும்” என்றேன்.

எனினும் இது குறித்து மேலாளரிடம் விபரம் கேட்டுச் சொல்லச் சொன்னார். நான் வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு, “சார். இந்தம்மா இரண்டேகால் லட்சம் ரூபாய் கடனை இரண்டு கடன்களாக பிரித்து வாங்கியுள்ளார். அதனால் ஒவ்
வொரு கடனுக்கும் மதிப்பீட்டாளா் மற்றும் சேவைக்கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரே கடனாக இருந்தால் கட்டணம் குறைந்திருக்கும்” என்றார். இதை நான் அந்தப் பெண்ணிடம் தெரிவித்தபோது, "என்னய்யா இது அநியாயமா இருக்கு.

நான் தனித்தனியாக நகையைக் கொடுத்தாலும், மொத்தமா கொடுத்தாலும் அத உரசிப் பாத்துமதிப்பு செய்றது ஒரே வேலைதானே. அதுக்கு ஏய்யா நான் தனித்தனியா கட்டணம் கொடுக்கனும். ஒரே கடனாக இருந்தால் என்னால் நகைகளை திருப்புவது சிரமம். இரண்டு கடனாக இருந்தால் சிறுக சிறுக கட்டி ஒவ்வொரு நகையாக திருப்பி விடுவேன். ஆனா இப்படி ஒவ்வொரு கடனுக்கும் தனித்தனியாக பணம் கட்ட வேண்டும் என்று சொன்னால் நாங்க எங்கையா போறது” என்றார் பரிதாபமாக. இது அந்த ஒரு பெண்ணின்கதை மட்டுமல்ல. நகைக்கடன் பெறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் கதையும் இதுதான்.

வங்கிகள் நகைக்கடனுக்கான வட்டி வீதத்தை பகிரங்கமாக அறிவிப்பதைப் போல மதிப்பீட்டுக் கட்டணம், சேவைக்கட்டணம் மற்றும் வரி விவரங்களை அறிவிப்பதில்லை. இதனால் குறைவான வட்டி வீதங்களின் அறிவிப்பால் கவரப்பட்டு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், நகைக்கடன் தொகையை பெறும்போதுதான் வட்டி அல்லாமல் மேலும் பல கட்டணங்களையும் செலுத்த வேண்டும் என்பதை அறி்ந்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

நகைக்கடன் எனும் அட்சய பாத்திரம்

இன்றைக்கு நகைக்கடன் வணிகம் என்பது வங்கிகளுக்கு எந்த ரிஸ்க்கும் இல்லாமல் நிகர லாபத்தை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாக இருக்கிறது.தினசரி நாடு முழுவதும் பல லட்சம் பேர் நகைக்கடன் பெறுகின்றனர்
ஆனால், ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, ஒருவர் நகை அடகுக்கடைக்கு போய்வருவதே கவுரவக் குறைச்சலாக இருந்தது. நகை அடகுக்கடைகளில் யார் நகையை அடகு வைக்கிறார்கள் என்பது தெரியாமலிருக்க ஒரு திரைச் சீலை தொங்கும். அந்த அளவுக்கு நகை அடகு வைப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் நகைக்கடன் வணிகத்தை வங்கிகள் துவக்கியபோது நகைக்கடன் குறித்த சமூகத்தின் பார்வை மாறியது. பிறரிடம் கடனுக்கு கையேந்து வதை விட, நமது நகைகள் மீது கடன் பெறுவது ஒன்றும் கவுரக் குறைவு கிடையாது என்ற எண்ணம் ஏற்படத் தொடங்கியது. இதற்கு தகுந்தாற் போல ‘நகை அடமானக் கடன்’ என்பதற்கு பதிலாக ‘நகைக்கடன்’ என்றும் ‘கோல்டு லோன்’என்றெல்லாம் கவுரமான பெயர்கள் சூட்டப்பட்டன. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகும், தமிழகத்தில் கிராமக் கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்கள் நகைக்கடன் வழங்கத் தொடங்கிய பிறகும் நகைக்கடன்கள் கிராம அளவிலும் விரிவடைந்தது.

இன்றைக்கு தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேசிய வங்கிகளின் கிளைகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நகைக்கடன் வணிகத்தில் முழு மூச்சாக இறங்கி உள்ளன. இவற்றில் 60 சதவீதத்திற்கு மேலான நிறுவனங்கள் கிராமங்களில் உள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவில் ரூ.20 ஆயிரம் கோடி நகைக்கடன் வணிகம் செய்திருக்கிறது. வங்கி சாரா நிதி நிறுவனமான முத்துாட் பைனான்ஸ் கடந்த நிதி ஆண்டு மூன்றாவது காலாண்டில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி நகைக்கடன் வழங்கி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா காரணமாக ஏற்பட்ட வேலை வாய்ப்பு இழப்பு நகைக்கடன் வணிகம் பன்மடங்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஊரடங்கு தளர்விற்குப் பிறகும் நகைக்கடன் வணிகம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 40 கிராமிற்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு செய்யப்பட்ட தள்ளுபடி தொகை மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிகளாகும்..

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம், இன்றைக்கு வங்கிகளின் வணிகத்தில் நகைக்கடன்கள் முக்கிய இடத்தை பெற்று விட்டன என்பதை பறை சாற்றுகின்றன. வங்கிகளின் வணிகத்தில், நம்பிக்கையான லாபம் தரும் வணிகமாக நகைக்கடன் முன்னணியில் நிற்கிறது. ஆனால் நகைக் கடன்தாரர்கள் குறித்து வங்கிகள் கரிசனத்துடன் எண்ணிப் பார்க்கின்றனவா? நகைக்கடனும் சமூக பொருளாதார வளர்ச்சியும் பொதுத்துறை வங்கிகள் நகைக்கடனுக்கு 7 முதல் 8 சதவீதமும், கூட்டுறவு நிறுவனங்கள் 10 முதல்11 சதவீதமும் தனியார் துறை வங்கிகள் 8 முதல்12 சதவீதமும் வட்டி வசூலிக்கின்றன. மேலும் கெடு தவறும்போது 3 சதவீதம் வரை அபராத வட்டியும், நோட்டீஸ் செலவுகளும், ஏலம் போட்டால் ஏலச் செலவுகளும் கடன்தாரரிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் நகை மதிப்பீட்டாளா் கட்டணமாக அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் கூட்டுறவு வங்கிகள் ரூ.300வரையிலும் வசூலிக்கின்றன. இது தவிர பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் நகைக்கடனுக்கு1 சதவீதம் வரை சேவைக்கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படுகிறது
மதிப்பீட்டாளா் கட்டணம், சேவைக்கட்டணம், ஜிஎஸ்டி வரி ஆகியவை ஒன்றும் சொற்பத் தொகையல்ல. உதாரணமாக, ஒருவர் 7.5 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கினால் அதற்கு ஓராண்டு வட்டி ரூ.7500 ஆகும். இத்துடன் நகை மதிப்பீட்டாளர் கட்டணம் ரூ.500 சேவை கட்டணம் மற்றும் வரி வகையில் ரூ.300 ஆக மொத்தம் ரூ.800 வரை செலுத்த வேண்டும்.

எனவே ஓராண்டில் அவர் செலுத்தும் தொகை ரூ.8,300 ஆகும். வட்டி வீதப்படி ரூ.7,500 வட்டி என்றாலும் அவர் உண்மையில் செலுத்துவது ரூ.8,300 ஆகும். இது 8.33 சதவீத வட்டி வசூலிப்பதற்கு சமமான தொகையாகும். ஒருவர் ரூ.3 லட்சத்தை மூன்று கடன்களாக பிரித்துப் பெற்றுக் கொண்டிருந்தால் அவர் நகை மதிப்பீட்டாளர் கட்டணம், சேவைக்கட்டணம் என ஒவ்வொரு கடனுக்கும் தலா ரூ.800 வீதம் மொத்தம் ரூ.2,400 செலுத்தியாக வேண்டும். இதை விட அதிகமாக வசூலிக்கும் வங்கிகளும் உண்டு.

நகைக்கடன் மூலம் வங்கிகள் பெரும் லாபம் ஈட்டும்போது, அவை ஏன் நகை மதிப்பீட்டாளா் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணங்களை தங்கள் நிர்வாகச் செலவினத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எந்த ஒரு வங்கியை எடுத்துக்கொண்டாலும் மொத்த நகைக் கடன்தாரர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் ரூ.5 லட்சத்திற்கு கீழ் நகைக்கடன் பெறும் மத்தி்ய தர வர்க்கத்தினரே. இதனால் மதிப்பீட்டு மற்றும் சேவைக்கட்டண சுமையால் அதிகம் பாதிக்கப்படுவதும் அவர்களே. வாராக்கடன்களை வசூலிப்பதற்காக வங்கிகள் வட்டி, அபராத வட்டி போன்றவற்றில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யும் திட்டங்களையும் அறிவிக்கின்றன.

ஆனால் நகைக் கடன்தாரா்களுக்கு இது போன்றதொரு சலுகையை அளிப்பதற்கு வங்கிகள் முன்வருவதில்லை
வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்து அடமானக் கடன்கள் வழங்குவதற்கு வங்கிகள் சர்வேயர் மதிப்பீடு, சந்தை மதிப்பீடு வில்லங்கச்சான்று, வழக்கறிஞர் சட்டக் கருத்துரை என பல நிலைகளை கடக்க வேண்டும். இவ்வகை கடன்களுக்கு பரிசீலனைக் கட்டணம் நியாயமே. ஆனால் நகைக்கடன்களோ, வங்கிகளின் கூற்றுப்படி 30 நிமிடங்களில் கொடுக்கப்படும் கடன்களாகும். நகைக் கடனாளருக்கு இந்த 30 நிமிடங்களை இலவச சேவை நேரமாக அளிக்கக் கூடாதா?

பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தினர் கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக் காகத்தான் நகைக்கடன் பெறுகிறரா்கள். எனவே இதுவும் நாட்டின் சமூக பொருளாதர வளா்ச்சி சம்பந்தப்பட்ட கடன்தான். எனவே, வங்கிகள் குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் வரை நகைக்கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பீட்டுக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணத்திலிருந்துவிலக்கு அளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.பொதுத்துறை வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் இந்தச் சலுகையை அளிப்பதன் மூலம் நகைக்கடன் வணிகத்தில் தனியார் நிதி நிறுவனங்களின் போட்டியை எளிதில் சமாளித்து அதிகமான அளவில் வாடிக்கையாளா்களை கவர முடியும். அட்சய பாத்திரத்தின் அருமையை வங்கிகள் உணர்வது எப்போது?

லெவின் ஆறுமுகம்
levinarumugam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in