ரூ.50 உயர்வு | வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,015 என நிர்ணயம்; மக்கள் அதிர்ச்சி

ரூ.50 உயர்வு | வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,015 என நிர்ணயம்; மக்கள் அதிர்ச்சி

Published on

கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று (மே 7 ஆம் தேதி) மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஒரு சிலிண்டர் ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படும்.

இந்த விலையேற்றம் சாமான்ய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையுயர்வு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வு என பாதிக்கப்பட்டுள்ள சாமான்ய மக்கள் இந்த விலையேற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.965.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ.1,015-க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 17 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.307 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.2,508க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளதாக சாமான்ய மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்காக மட்டும் ஆயிரத்து நூறு ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in