

புதுடெல்லி: இந்தியாவில் ஏரளமானோர் சரியான வேலை கிடைக்காத சூழலில் வேலையை விட்டு விலகியுள்ளதுடன் வேலை தேடுவதையும் நிறுத்தி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகஅளவில் வேலையை விட்டு விலகும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை பல லட்சம் என்ற அளவில் இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின. நிலைமை படிப்படியாக சீரடைந்த பிறகும் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்தது.
பல நிறுவனங்கள் பெரிய அலுவலகங்களை காலி செய்துவிட்டு, வெறுமனே கருத்தரங்கு அறை மற்றும் கம்ப்யூட்டர் சர்வரை பராமரிக்க ஒரு அறை ஆகியவற்றைக் கொண்ட சிறிய அலுவலகங்களுக்கு மாறிவிட்டன. தற்போது கரோனா அச்சம் அகன்றுள்ள நிலையில் பொருளாதார சூழல் வேகமெடுத்து வருகிறது.
காலச் சக்கரம் எப்போதும் ஒரு தரப்புக்கு சாதகமாக சுழலாது என்பதைப் போல கடந்த ஆண்டு முதல் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜிநாமா செய்தனர். அதிலும் குறிப்பாக நடுத்தரப் பிரிவு அலுவலர்கள் பெரிய அளவில் வெளியேறினர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த நிலை எதிரொலித்தது. இந்த சூழல் புதிய நிதியாண்டிலும் காணப்படுகிறது. இதனால் ஊழியர்களை தக்க வைக்க கூடுதலான சலுகைகள் மற்றும் சம்பள உயர்வு இந்த ஆண்டு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
‘‘வேலை வேண்டாம்’’
இந்தநிலையில் இந்தியாவில் சரியான அல்லது அவர்கள் விரும்பும் வகையில் வேலையில்லாததால் லட்சக்கணக்கானோர் வேலையை விட்டு விடும் போக்கு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்கள் இந்த எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர்.
இவர்களில் பலர் இனி வேலை தேடுவதில்லை என்ற முடிவுக்கு சென்று விட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் நிலையில் தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறுவது என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
மும்பையில் உள்ள தனியார் ஆராய்ச்சி நிறுவனமான சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எகனாமி பிரைவேட்டின் புதிய தரவுகளின்படி, சரியான வகையான வேலை கிடைக்காமல் விரக்தியடைந்து, லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பெண்கள் அதிகஅளவில் வேலையை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சரியான வேலை கிடைக்காமல் விரக்தியடைந்து நிறுவனங்களை விட்டு வெளியேறும் போக்கு அதிரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அதற்கு மாறாக அவர்கள் வேலையை விட்டு வெளியேறும் போக்கு அதிகரிக்கிறது.
விரும்பிய வேலை இல்லை
2017 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 46 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெண்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுமார் 2 கோடிக்கும் அதிகமான பெண்கள் தொழிலாளர் என்ற தொகுப்பில் இருந்து மொத்தமாக விலகி சென்று விட்டனர். அதாவது வேலையை உதறியுள்ளனர். பெண்களை பொறுத்தவரையில் மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் மட்டுமே ஊழியர்களாக பணிக்கு சேருகின்றனர். தற்போது அந்த எண்ணிக்கையும் பெரிய அளவில் சரிந்து வருகிறது.
சிஎம்ஐஇ தரவுகளின்படி 90 கோடி உழைக்கும் வாய்ப்பு கொண்ட, வயது கொண்ட இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சட்டப்பூர்வ வேலை செய்யும் வயதுடையவர்கள் ஆவர். இந்த எண்ணிக்கை என்பது தோராயமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மக்கள்தொகைக்கு நிகரானது.
பெங்களூரில் உள்ள சொசைட்டி ஜெனரல் ஜிஎஸ்சி பிரைவேட் நிறுவனத்தின் பொருளாதார வல்லுனரான குணால் கூறியதாவது:
வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான இந்தியாவின் சவால்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 64 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர், சிறு உழைப்பு கொண்ட வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஆனால் அதிலும் போட்டி கடுமையாக உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைகளுக்கு வழக்கமாக லட்சக்கணக்கில் விண்ணப்பிப்பவர்கள் இருப்பது இதையே காட்டுகிறது. பொறியியல் சார்ந்த துறைகளில் வேலைக்கு சேர்ந்த பலர், குறிப்பாக பெண்கள் பின்னர் பணி நேரம், கடுமையான உழைப்பு, குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் போன்ற காரணங்களால் பணியில் இருந்து விலகும் போக்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிட்யூட்டின் 2020 அறிக்கை ‘‘இந்திய இளைய தலைமுறையின் எண்ணிக்கை மற்றும் வயதை கணக்கிட்டால் இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 90 மில்லியன் புதிய விவசாயம் அல்லாத வேலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை தேவைப்படும். இந்த வளர்ச்சிக்கு தேவையான உழைப்பாளிகள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் இரண்டும் இணை கோடுகளாக இல்லை. இளைஞர்களை வேலை சூழலுக்கு சேர்க்கத் தவறினால் இந்தியா வளர்ந்த நாடுகளில் சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். தேவையான தொழிலாளர்கள், ஊழியர்கள் இல்லாமல் நிறுவனங்கள் தள்ளப்படலாம். இதனால் உற்பத்திச் செலவும் கணிசமாக அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு முன்பாகவே இந்த போக்கு தொடங்கி விட்டதாகவும், கரோனாவுக்கு பிறகு இது அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 2016ல், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் பெரும்பாலான கரன்சி நோட்டுகளை அரசு தடை செய்த பிறகு, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதுபோலவே ஜிஎஸ்டி அறிமுகமான பிறகு மீண்டும் ஒரு பொருளாதார மாற்றம் ஏற்பட்டது. இந்த காலத்தில் பல நிறுவனங்களின் செயல்பாடு மாறிப்போனதும், நிதி நெருக்கடிய சந்தித்ததும் தொழலாளர்களையும் மறைமுகமாக பாதித்துள்ளது.
பெண்களுக்கு நெருக்கடி
முறைசாரா பொருளாதாரத்தில் இருந்து முறையான பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு இந்தியா முயன்ற வருகிறது. இதில் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றி வருகின்றன. இதுவும் தொழிலாளர்கள் வெளியேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த வேலையிழப்பு என்பது ஊழியர்களை அந்த வளையத்துக்குள் இருந்து வெளியேற்றி விட்டது. அதாவது தொடர்ச்சியான வேலையிழப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பலர் தொடர்ந்து வேலை செய்யும் மனோபாவத்தையே இழந்து விட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிஎம்ஐஇ ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த மகேஷ் கூறியதாவது:
வேலையில்லாத இந்தியர்கள் பெரும்பாலும் படிப்பை முடித்துள்ள புதிய இளைஞர்கள் அல்லது இல்லத்தரசிகள். அவர்களில் பலர் வாடகை வருமானம், வயதான குடும்ப உறுப்பினர்களின் ஓய்வூதியம் அல்லது அரசாங்க இடமாற்றம் ஆகியவற்றால் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். இதனால் வேலைக்கு செல்லாமல் அந்த பணத்தை வைத்தே தங்கள் வாழ்க்கையை நடத்தும் மனநிலைக்கு சென்று விட்டனர்.
பொருளாதாரத்துக்கு பாதிப்பு
விரைவான தொழில்நுட்ப மாற்றத்தின் தாக்கமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை செய்ய முடியாதவர்கள் அல்லது இதற்கு ஏற்ப தங்களை தகவமைக்க முடியாதவர்கள் பணிகளில் இருந்து விலகுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை சில சமயங்களில் வீட்டின் பாதுகாப்பு, குழந்தைகளின் நலன், குடும்பத்துக்காக நேரத்தைச் செலவழிக்கும் பொறுப்பு போன்றவையும் காரணமாக அமைந்து விடுகின்றன.
அவர்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் 49 சதவீதமாக உள்ளனர். பொருளாதார உற்பத்தியில் பெண்கள் 18 சதவீதத்தை மட்டுமே பங்களிக்கும் சூழல் உள்ளது. உலக அளவிலான சராசரியில் இது பாதியாக உள்ளது.
பெண்கள் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களாக தொடர்ந்து இருக்க முடியாமல் போகிறது. ஏனெனில் வேலைகள் பெரும்பாலும் அவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை. உதாரணமாக ஆண்கள் தங்கள் வேலையை அடைய பல மாற்றங்களுக்கும் தயாராக உள்ளனர். பெண்கள் அதைச் செய்யும் சூழல் இல்லை. இதற்கு குடும்ப அமைப்பு முறை ஒரு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலை மாற்றும் சில நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டமும் இதற்கு பயனளிக்கும். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, உயர்கல்வி மற்றும் தொழிலைத் தொடர 21 வயதுக்கு பிறகு திருமணம் என்ற இலக்கு சரியாக இருக்கும் எனத் தெரிவிக்கிறது.