

"எங்கெல்லாம் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ அங்கெல்லாம் பொருளாதார வீழ்ச்சி நிகழும். அதுதான் இலங்கையில், பாகிஸ்தானில், துருக்கியில், வெனிசுலாவில், ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கிறது" என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் வாங்குவதற்காக மக்கள், விடிவதற்கு முன்பாகவே எரிபொருள் நிலையத்துக்குச் சென்று காத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரம் காத்திருந்தே எரிபொருள் வாங்க முடிவதாக கூறப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல குடும்பங்கள் 3 வேளை உணவை 2 வேளை யாக குறைந்துள்ளது. உணவு விடுதிகள் மூடப்பட்டுவருகின்றன. மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில், ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளன. வாக்கெடுப்பு நடுக்கும் முன்னரே ஆளுங்கட்சிக்கான ஆதரவை கூட்டணிக் கட்சியே விலக்கிக் கொண்டு பிரதமர் இம்ரான் கானை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அண்மைக்காலமாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கெல்லாம் இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என்று அங்கு எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது. ஆளும் பிடிஐ கட்சியோ, 'அரசைக் கவிழ்க்க வெளிநாட்டு சதி நடக்கிறது. பிரதமரைப் படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது' என்று வழக்கமான அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இரண்டு அண்டை நாடுகள், சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் இரண்டு மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியனவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், இது இந்தியா மீது தாக்கத்தை ஏற்படுத்துமா? அப்படி ஏற்படுத்தும் என்றால், என்ன மாதிரியான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுகின்றன.
இது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனிடம் கேள்விகளை முன்வைத்தோம். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்காக அவர் அளித்தப் பேட்டியில் இருந்து..
* இலங்கை, பாகிஸ்தான் என நமது அண்டை நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
"எங்கெல்லாம் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதோ அங்கெல்லாம் பொருளாதார வீழ்ச்சி நிகழும். இது வரலாற்று நிகழ்வு. அதுதான் இலங்கையில், பாகிஸ்தானில், துருக்கியில், வெனிசுலாவில், ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கிறது."
* இந்தியாவில் இதுபோன்றதொரு பொருளாதார நெருக்கடி வரலாம் என்ற அச்சம் நிலவுகிறதே..
"இந்தியாவில் இப்போதைக்கு இப்படியான பொருளாதார நெருக்கடி வராது. ஏனெனில், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் ஆட்சியாக இருக்கட்டும், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியாக இருக்கட்டும், இல்லை அதற்கும் முந்தைய நரசிம்ம ராவ் ஆட்சியாக இருக்கட்டும். அவர்கள் யாரும் வெளிநாடுகளில் கடன்கள் வாங்கவில்லை. இருந்த வெளிநாட்டுக் கடன்களையும் 1994-95லேயே நாம் அடைத்துவிட்டோம். இன்று வெளிநாடுகளில் இந்திய கம்பெனிகள் கடன் பெற்றுள்ளன ஆனால் இந்திய அரசு தனிப்பட்ட முறையில் கடன் வாங்கவில்லை. இப்போதைய சூழலில் வெளிநாட்டுக்கு கடன் பாக்கி செலுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தாததால் முன்பிருந்த தலைவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். இதில் அரசியல் கட்சி பேதம் ஏதுமில்லை.
உலக வங்கிகளில் பெரும்பாலும் மாநில அரசுகள் கடன் வாங்குகின்றன. அவை ரூபாயாகவே கடனைத் திருப்பிச் செலுத்தும். உலக வங்கியும் இந்தியச் சந்தை ரூபாய் பாண்டுகளை கோரி கடன் பெற்றுள்ளது. இந்தியா இதற்கு முன்னதாக வெளிநாடுகளில் பாண்டுகளாக கடன் பெற்றுள்ளது. அந்நியச் செலாவணியாகப் பெற்றதில்லை. சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்.பில்) கடன் பெற்றிருக்கிறோம். 2008-ல் உலகமே பொருளாதார மந்தநிலையை சந்தித்தது. அப்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சர்வதேச நிதியத்திடமிருந்து தங்கத்தைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தார். 2009-ல் அவர் மேற்கொண்ட இந்தப் பொருளாதார நடவடிக்கையும் இந்தியா வெளிநாட்டுக் கடன் இல்லாமல் தப்பித்ததற்கு ஒரு முக்கியக் காரணமாகும்."
* அப்படியென்றால் நம் தேசம் வேறு என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்..?
"இந்தியாவின் (Wholesale Price Index) மொத்த விலை குறியீட்டு எண் 13% ஆக உயர்ந்துள்ளது. இது ஓராண்டாகவே இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. ஆனால், நமது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாட்டில் விலைவாசி உயரவில்லை எனக் கூறுகிறார். அதற்குக் காரணம் (Consumer Price Index) நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கணிப்புகள். நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) என்பது போக்குவரத்து, உணவு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்ற நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒரு கூட்டு விலைகளின் சராசரி எடையை ஆய்வு செய்யும் அளவீடு ஆகும். ஆனால் இந்த நுகர்வோர் பட்டியலில் உள்ள 20% பொருட்கள் இப்போது இந்திய மக்கள் பயன்பாட்டிலேயே இல்லாத சிடி.,க்கள், வீடியோ கேசட்டுகள், கேசட் ரெக்கார்டர் போன்ற பல பொருட்கள் உள்ளன. அப்படியிருக்க இந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) வைத்து ஆளுநர் விலைவாசி உயர்வு இல்லை எனக் கூறுகிறார்.
ஆனால் விலைவாசி 13%-க்கும் மேல் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால், இலங்கையைப் போல் இந்தியாவில் பொருள் இல்லாமல் பற்றாக்குறை வராது. ஆனால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிடும். அதாவது பணத்தின் மதிப்பு குறைந்து மக்களால் பொருட்களை வாங்க முடியாமல் போகும் நிலை வரும். இன்றைக்கு அதற்கான சாட்சி பெட்ரோல், டீசல் விலை. போன ஆண்டு நாம் 78 ரூபாய்க்கு வாங்கிய ஒரு லிட்டர் பெட்ரோலை இன்று ரூ.107க்கு வாங்குகிறோம். கேஸ் விலை ரூ.700-ல் இருந்து ரூ.1000-க்கு அதிகரித்துள்ளது. விலைவாசி ஓராண்டில் 13% அதிகரித்துள்ளது. இதுதான் இந்தியாவின் பிரச்சினை. பணவீக்கம் அதிகரிக்கும் போது பணத்தின் மதிப்பு நிச்சயமாகக் குறையும். அதுவே நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது."
சரி, இலங்கை, பாகிஸ்தான் நிலவரத்தால் இந்தியாவுக்குக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தாக்கம் என்னவாக இருக்கும்..?
"இலங்கைப் பிரச்சினையால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டு. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதில் இன்னும் அதிக ஊடக வெளிச்சம் பாய்ச்ச வேண்டும். இலங்கையில் போர் நடந்தபோது அகதிகள் வந்ததைவிட இப்போது அதிகம் பேர் வருவார்கள். இதை சமாளிக்க இந்திய அரசு குறிப்பாக தமிழக அரசு தயாராக வேண்டும்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை குறையக் குறைய ஸ்டேட் ஸ்பான்ஸர்ட் இஸ்லாமிக் டெரரிஸ்ட்ஸ் எனப்படும் அரசாங்க மறைமுக ஆதரவுடனான தீவிரவாதிகள் அதிகமாக உருவாவார்கள். அது நம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்."
நம் அண்டை நாடுகள் பல்வேறு சிக்கல்களில் இருக்கும்போது பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கை என்ன?
"நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டியது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது மட்டுமே. அதில் மத்தியில் ஆளும் அரசு மெத்தனமாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டும் செயல்படாமல், சாமானிய மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு ரூ.24 வரை ஏறும்."