

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் லிட்டருக்கு ரூ.6.40 வரை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதிலிருந்து 9 நாட்களில் 8வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
| நகரங்கள் | பெட்ரோல் விலை | டீசல் விலை |
| டெல்லி | ரூ.101.81 | ரூ.93.07 |
| மும்பை | ரூ.116.72 | ரூ100.94 |
| கொல்கத்தா | ரூ.111.32 | ரூ.96.22 |
| சென்னை | ரூ.107.49 | ரூ. 97.56 |
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.24 வரை அதிகரிக்கலாம்! இந்நிலையில் கோட்டக் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனமானது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மாறிவரும் சூழலில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10.60 முதல் ரூ.22.30 வரையிலும், டீசல் விலையை ரூ.13.10 முதல் ரூ.24.90 வரையிலும் கூட அதிகரிக்கலாம் எனக் கணிக்கிறது.