இந்திய ரூபாய் மதிப்பு 76 ஆக சரிவு: உக்ரைன் அணு உலை தாக்குதல் எதிரொலி

இந்திய ரூபாய் மதிப்பு 76 ஆக சரிவு: உக்ரைன் அணு உலை தாக்குதல் எதிரொலி
Updated on
1 min read

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ஆக சரிவடைந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. நேற்று முன்தினம் இதன் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. ப்ராண்ட் கச்சா எண்ணெய் முன்பேர வர்த்தகத்தில் நேற்று 118 டாலர்களை கடந்தது.

ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடரும் என பாங்க் ஆஃப் பரோடா ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் அங்குள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதுதான் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய அணுஉலை எனக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலை அணுஉலை அமைந்துள்ள ஜேப்போரிஜியா பகுதிக்கு அருகாமையில் உள்ள உக்ரைன் நகரத்தின் மேயர் உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதலால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தத்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளை பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ஆக சரிவடைந்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 76.06 ஆக பலவீனமாகத் தொடங்கியது. முதலீட்டாளர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டாததால் அமர்வின் போது மேலும் சரிந்தது. அமர்வின் போது உள்நாட்டு அலகு அதிகபட்சம் 75.99 மற்றும் குறைந்தபட்சம் 76.22 இடையே ஊசலாடியது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடைசியாக 22 பைசா குறைந்து 76.16 ஆக இருந்தது. வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் உள்நாட்டு பங்குகளில் பலவீனமான போக்கு ஆகியவை ரூபாய் மதிப்பை பாதித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in