Published : 28 Feb 2022 12:23 PM
Last Updated : 28 Feb 2022 12:23 PM
மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. இந்தத் தங்கப் பத்திர விற்பனை தபால் நிலையங்களில் இன்று (28-ம் தேதி) முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109 ஆகும்.
சென்னை மத்தியக் கோட்டத்தில் உள்ள தி.நகர் தலைமை தபால் நிலையம், மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் உட்பட 22 துணை தபால் நிலையங்களிலும் தங்கப் பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
மேலும், ஒருவர் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். முதலீட்டுத் தொகை்க்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
5 ஆண்டுகள் முடிந்த உடன் முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணம் கிடைக்கும்.
இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயம். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்கப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மத்தியக் கோட்ட முதுநிலை அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா.டி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT