

ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதில் புதிய விதிமுறைகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் அதிக சொத்து மதிப்பு கொண்ட பொருட்களை வருமான வரி தாக்கலில் சேர்க்க வேண்டும் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிக மதிப்பு உடைய நகைகள், விமானங்கள், படகுகள் ஆகியவற்றின் மதிப்பை 2016-17ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கலில் சேர்க்க வேண்டும் என்று வருமான வரி துறை கூறியுள்ளது.
வருமான வரி துறை புதிய வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) படிவத்தில் ஐடிஆர் 3 மற்றும் ஐடிஆர் என்ற இரண்டு புதிய வரிசைகளை இணைத்துள்ளது. 50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் இந்த இரண்டு வரிசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் இதன் கீழ் வருவார்கள். மேலும் தங்களது சொத்துகளின் மொத்த மதிப்பை அந்த வரிசையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
நிலம் மற்றும் பர்னிச்சர் செய்யப்பட்ட கட்டிடம் ஆகியவை இந்த புதிய அறிவிப்பின் கீழ் வரும். மேலும் மொத்த கையிருப்பு பணம், நகைகள், தங்க கட்டிகள், வாகனங்கள், படகு, விமானம் போன்ற அசையும் சொத்துகளையும் வருமான வரி தாக்கலில் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்கின்றனவா என்பதை இந்த புதிய செயல்முறைகள் மூலம் சோதனை செய்ய முடியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனி நபர்கள் மற்றும் தொழில்கள் மற்றும் வேலை மூலம் வருமானம் பெறாத இந்து கூட்டு குடும்பம் மற்றும் வெளிநாட்டு சொத்துகள் இல்லாத இந்து கூட்டு குடும்பம் ஐடிஆர்-2ஏ என்ற வரிசையை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக முதன் முறையாக அவர்களது வருமானத்தை தெரிவிக்கும் விதமாக புதிய வரிசையை வருமான வரி தாக்கல் செய்யும் படிவத்தில் வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் அறிவிப்பில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு உள்ள படிவும் இந்த வருடத்திலிருந்து 8 பக்கங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.