Published : 13 Feb 2022 08:21 AM
Last Updated : 13 Feb 2022 08:21 AM
மும்பை: பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்ஹெச்எப்எல்) மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. நிறுவனத்தின் பங்குகளை முற்றிலுமாக பூஜ்ய நிலைக்கு தள்ளியது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக `செபி' தெரிவித்துள்ளது.
அனில் அம்பானி மற்றும் அமித் பாப்னா, ரவீந்திரா சுதாகர், பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோரும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 100 பக்க அறிக்கையை `செபி' வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு பேரிடம் எத்தகைய பங்குச் சந்தை சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர மேலும் 28 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. நிறுவனத்தை பூஜ்ய நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் இவர்களும் முக்கியமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-19-ம் நிதி ஆண்டில் ஆர்ஹெச்எப்எல் நிறுவனம் வழங்கிய கடன் அளவுகள் குறித்து `செபி' ஆய்வு செய்து வருகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட தடை நடவடிக்கையின் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் உள்ளதாக செபி குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் தணிக்கை விஷயங்களில் இனியும் ஈடுபடப் போவதில்லை என பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனம் விலகியதிலிருந்து நிறுவன செயல்பாடுகள் குறித்து கண்காணித்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நிறுவனத்துக்கு கடன் அளித்த பல நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செபி தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிறுவனர் என்ற வகையில் ஆர்ஹெச்எப்எல் நிறுவன செயல்பாடுகளை கட்டுப்படுத்தியது அல்லது வழிகாட்டியது தொடர்பாக அனில் அம்பானி மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ரவீந்திர சுதாகர், தலைமை நிதி அதிகாரி அமித் பாப்னா மற்றும் பிங்கேஷ் ஆர் ஷா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஹெச்எப்எல் நிறுவனம் பொது செலவின கார்ப்பரேட் கடனாக ரூ. 900 கோடியை 2018-ம் நிதி ஆண்டில் செலுத்தியுள்ளது. 2019-ம் நிதி ஆண்டில் ரூ. 7,900 கோடி வழங்கப்பட்டுள்ளதையும் செபி ஆய்வுக்குள்படுத்தியுள்ளது.
ஆதார் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் அண்ட் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட், இந்தியன் அக்ரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பிஹெச்ஐ மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அரியோன் மூவி புரொடெக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சிடி செக்யூரிடீஸ் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், டீப் இண்டஸ்ட்ரிய ல் பைனான்ஸ் லிமிடெட், அஸாலியா டிஸ்ட்ரிபியூஷன் பிரைவேட் லிமிடெட், விநாயக் வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கமேஸா இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், மெடிபிஸ் பிரைவேட் லிமிடெட், ஹிர்மா பவர் லிமிடெட், துலிப் அட்வைஸர்ஸ் பிரைவேட் லிமிடெட், மோகன்பிர் ஹை டெக் பில்ட் பிரைவேட் லிமிடெட், நெட்டிசன் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட், கிரெஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தவிர ரிலையன்ஸ் யுனிகார்ன் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலைன்ஸ் கமர்சியல் பைனன்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் ரியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெட்வொர்க் லிமிடெட், ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT