

மத்திய பட்ஜெட்டில் வரி அறிவிப்புகளை பொறுத்தவரை மிகப்பெரிய ஏமாற்றமளிக்கிறது என்று தொழில்துறை அமைப்பான சிக்கி கூறியுள்ளது. வரி அறிவிப்புதான் ஒரு பட்ஜெட்டின் முக்கியமான அம்சம். வரி அறிவிப்பில்தான் நாடு எந்த திசையில் செல்லவேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பட்ஜெட் மூலம் மக்கள் என்ன பயனடைகிறார்கள் என்பது வரி அறிவிப்புகளை பொறுத்துதான் மாற்றம் பெறும். ஆனால் இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை அறிவிப்புகள் பெரிதாக இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று தென் இந்தியா சேம்பர் ஆப் காமர்ஸ் கூட்டமைப்பின் (சிக்கி) தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொழில் புரிவதற்கு உகந்த சூழ்நிலையை பற்றி பட்ஜெட்டில் குறிப்பிட்டாரே தவிர அதற்கான செயல்முறைகளை பற்றி விரிவாக சொல்லவில்லை. இந்தியாவில் தொழில் புரிவதற்கு உகந்த சூழ்நிலைக்கு ஏற்ற தேவைகளை மேம்படுத்த வேண்டும். நீர்பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது விவசாயத்துறையை மேம்படுத்த உதவும்.
2016-17-ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.5 சதவீத மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சியிலும் மற்றும் பணவீக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
2019-ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் இந்தியாவில் கிராமப்புறங் கள் அனைத்திலும் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித் திருப்பது வரவேற்கத்தக்கது. சிறுகுறு தொழில்துறையினருக்கு சலுகைகள் வழங்கியிருப்பதும் வரவேற்கத்தக்கது.
மேலும் சிக்கி கூட்டமைப்பின் வரிவிதிப்புக் குழுவைச் சேர்ந்த ராம் பேசுகையில், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது. இது வரவேற்கத்தக்கது. வரி அறிவிப்புகளை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. தனிநபர் வரிச் சலுகை அறிவிப்புகளை எதிர்ப்பார்த்தோம் ஆனால் மிகப்பெரிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றமளித்தது என்று அவர் தெரிவித்தார்.
சிக்கி அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் சங்கர் கூறுகையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை முன்னேற்றும் வகையிலும் மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதற்காக நிறையத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.