Last Updated : 17 Mar, 2016 09:39 AM

 

Published : 17 Mar 2016 09:39 AM
Last Updated : 17 Mar 2016 09:39 AM

வாராக்கடன் சுமையால் வங்கிகள் முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரி குறைந்துள்ளது: வருமான வரித்துறை தகவல்

வங்கிகளின் வாராக்கடன் சுமை அதிகரித்துள்ளதால் அவை செலுத்த வேண்டிய முன் கூட்டியே செலுத்தும் வரி அளவு குறைந்துள்ளதாக வருமான வரித் துறை அலுவலகம் தெரிவித்துள் ளது.

இதேபோல நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரியின் ( அட்வான்ஸ் டாக்ஸ்) அளவும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

மார்ச் காலாண்டுக்கான முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரியை நிலுவை வைத்துள்ளதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பார்மா மற்றும் எண்ணெய் துறை நிறுவனங்கள் முன்கூட்டியே வரி செலுத்துவதில் முன்னணியில் உள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி தாங்கள் செலுத்த வேண்டிய வரியில் 60 சதவீதம் குறைவாக செலுத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி செலுத்த வேண்டிய வரி அளவு கடந்த ஆண்டை விட சிறிய அளவிலேயே அதிகரித்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி முன்கூட்டியே செலுத்த வேண்டிய வரி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் ரூ.1749 கோடி வரி செலுத்தியது. இந்த ஆண்டில் ரூ.690 கோடியாக குறைந்துள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விஷயத்தில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளது. இந்த நிதியாண்டில் வங்கி ரூ.1300 கோடி வரி செலுத்தியுள்ளது. இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.1295 கோடி வரியாக செலுத்தியுள்ளது.

நேரடி வரி வருமானம் செலுத்துவதில் மும்பை பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது. வரி வசூலிக்க வருமான வரி அதிகாரிகள் ரூ.2.56 லட்சம் கோடி இலக்கு வைத்திருந்தனர். அதில் ரூ.1.86 லட்சம் கோடி வரி வசூல் செய்துள்ளனர். 45 பெரிய நிறுவனங்களிடமிருந்து மார்ச் 14 வரை வசூல் செய்யப்பட்ட ரூ. 1.01 லட்சம் கோடி முன்கூட்டிய வரியும் இதில் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மும்பை பிராந்திய வருமான வரித்துறை முதன்மை ஆணையர் டி.எஸ் சக்சேனா கூறினார்.

முன்கூட்டியே வரி செலுத்துவதில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பின்தங்கியுள்ளன. எண்ணெய் மற்றும் பார்மா நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் நான்காவது காலாண்டுக்கான முன்கூட்டிய வரி 1,647 கோடி ரூபாயை செலுத்திவிட்டது. கடந்த ஆண்டில் 1,470 கோடி ரூபாய் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களில் முன்கூட்டியே வரி செலுத்துவதில் முகேஷ் அம்பானியின் ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனம் முன்கூட்டிய வரி செலுத் துவது 38 சதவீதம் அதிகரித்துள் ளது. நடப்பு நிதியாண்டில் 4-வது காலாண்டுக்கான ரூ.2,200 கோடி வரியை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.1,600 கோடி செலுத்தியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின் முன்கூட்டிய வரி அளவு இரண்டு மடங்காகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.200 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் முன்கூட்டிய செலுத்தும் வரி அளவு இந்த ஆண்டு 514 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான லுபின் பார்மாவின் வரி அளவு கடந்த ஆண்டு 200 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இந்த நிறுவனம் ரூ.430 கோடி முன்கூட்டியே வரி செலுத்தியுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் வரி ரூ.50 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் ரூ. 34 கோடியை வரியாக செலுத்தியது என்று இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ். என். ராஜேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டியே வரி செலுத்தும் நடைமுறை மூலம் நிறுவனங்களில் செயல்பாடுகள் குறிப்பிட்ட காலாண்டில் எந்த வகையில் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஒரு சரியான அளவுகோலாகக் கருதப்படுகிறது. நிறுவனங்கள் முன்கூட்டியே வரி செலுத்துவதை முதலீட்டாளர்கள் கவனிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்கள் மார்ச் காலாண்டுக்கான முன்கூட்டிய வரி செலுத்த நேற்று முன்தினம் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x