

தற்போதைய சர்வதேச பொருளாதார சூழலில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவது என்பது மிகவும் கடினமானது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறியதாவது.
தற்போதைய சூழ்நிலையில் இரட்டை இலக்க வளர்ச்சிக்கு அருகில் வர முடியும் என்று கூற முடியாது. மிகவும் கடினம். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.
இரட்டை இலக்க வளர்ச்சி மிகவும் கடினம் என்றாலும் சீர்திருத்தங்களைத் தொடரும் பட்சத்தில் நாம் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இந்தியா திட்டமிட்டலாம்.
உதாரணத்துக்கு கிடப்பில் இருக்கும் சீர்த்திருத்தங்களை நிறைவேற்றுவது, உற்பத்தித் துறையில் கவனம் செலுத்துவது, விவசாயத் துறையில் முதலீடு செய்வது, பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமையை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களை செய்யும் போது இந்தியாவின் வளர்ச்சி உயரும்.
இரட்டை இலக்க வளர்ச்சி இல்லை என்றாலும் தற்போதைய நிலையில் இருந்து மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. அதாவது சர்வதேச சூழல் மோசமாக இருந்தாலும் நம்முடைய வளர்ச்சியை தற்போதைய நிலையில் இருந்து உயர்த்த வேண்டும் என்பதுதான் திட்டம்.
தற்போது உள்ள 7 முதல் 7.5 சதவீத வளர்ச்சி என்பது சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது நல்ல வளர்ச்சி ஆகும். இருந்தாலும் நம் திறனுக்கு ஏற்ற வளர்ச்சியா என்று கேட்டால், நம்மால் மேலும் வளர்ச்சி அடைய முடியும் என்பதே பதிலாக இருக்கும்.
தற்போதைய நிலையில் இருந்து 2 சதவீதம் கூடுதல் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் பல காரணங்கள் சாதகமாக இருக்க வேண்டும். குறிப்பாக விவசாயத் துறையில் நாம் வளர்ச்சி அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல உற்பத்தி துறையிலும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.
நாம் மெதுவாக சரியான திசையை நோக்கி பயணம் செய்து வருகிறோம். அனைத்து விதமான கொள்கை முடிவுகள், வரி சீர்த்திருத்தங்கள், பருவமழை, முதலீடுகள், சர்வதேச சூழல் அனைத்தும் சாதகமாக இருக்கும் போது தற்போதைய வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியை அடைய முடியும் என்றார்.
மல்லையாவுக்கு கொடுத்த கடன் வசூலிக்கப்படும்
விஜய் மல்லையாவுக்கு கொடுத்த மொத்த தொகையும் வங்கிகள் வசூல் செய்யும். புலனாய்வு அமைப்புகள் கடுமையான நடவடிக்கைகள் விஜய் மல்லையா மீது எடுத்து வருகின்றன. மல்லையா எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி இருக்கிறாரோ அங்கெல்லாம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைப்பும் அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேபோல பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையில் கவனம் செலுத்த அரசு முடிவெடுத்துள்ளது. உருக்கு, ஜவுளி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் வாராக்கடன் அதிகரித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக வாராக்கடன் உருவானது. நிலைமை சீரடையும் பட்சத்தில் வாராக்கடன் குறையும். இருந்தாலும் சில தனிப்பட்ட நபர்களின் தவறான முடிவுகளும் வாராக்கடன் அதிகரிக்க ஒரு காரணமாகும்.
மத்திய அரசின் முக்கியமான பணிகளில் ஒன்று பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்துவது. அதற்குத் தேவையான முதலீடுகள் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜேட்லி கூறினார்.