

தனது நிறுவனத்தின் விளம்பர தூதராக (பிராண்ட் அம்பாசிடர்) இருந்த ஆமிர்கானின் ஒப்பந்தத்தை ஸ்நாப்டீல் புதுப்பிக்கவில்லை. இதனால் இனி இந்நிறுவன விளம்பரங்களில் ஆமிர்கான் தோன்ற மாட்டார்.
ஸ்நாப்டீல் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருந்த ஆமிர்கானின் ஒப்பந்தம் ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. இதை அந்நிறுவனம் புதுப்பிக்கவில்லை. சகிப்புத்தன்மை குறித்து ஆமிர்கான் தெரிவித்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து ஸ்நாப்டீல் தரப்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை. அதேபோல ஆமிர்கானிடமும் கருத்து கேட்க முடியவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு சகிப்புத்தன்மை பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது மனைவி கிரண் ராவ், இங்கு பாதுகாப்பு இல்லாததால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று தெரிவித்ததாக ஆமிர்கான் கூறினார். இவரது இந்த கருத்து ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பெரிய விவாதப் பொருளானது. சிலர் ஸ்நாப்டீல் செயலியை தங்களது மொபைலில் இருந்து நீக்கி இருந்தனர்.
அப்போது ஆமிர்கான் கருத்துக்கும் ஸ்நாப்டீல் நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவருடைய சொந்த கருத்து, எங்களுக்கு பொருந்தாது என நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது.
மத்திய அரசின் `இன்கிரிடிபிள் இந்தியா’ திட்டத்தின் தூதராக இருந்த ஆமிர்கான் கடந்த ஜனவரியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அமிதாப்பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இப்போதைக்கு, ஆமிர்கானுக்கு பதிலாக எந்த ஒரு பிரபலத்தையும் நியமிக்கும் திட்டம் ஸ்நாப்டீலுக்கு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.