ரான்பாக்ஸி முன்னாள் இயக்குநர் சொத்து முடக்கம்

ரான்பாக்ஸி முன்னாள் இயக்குநர் சொத்து முடக்கம்
Updated on
1 min read

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வி.கே. கௌல் மற்றும் அவரது மனைவி பாலா கௌல் ஆகியோரது சொத்துகளை முடக்க பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஆர்கிட் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் கௌல் உள் வர்த்தகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ரூ. 77.83 லட்சம் தொகையை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி இவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 64.85 லட்சமும், அவரது மனைவி பாலா கௌல் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 12.97 லட்சமும் மீட்கப்பட உள்ளது.

கௌலுக்கு ரூ. 50 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ. 10 லட்சமும் அபராதமாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் செபி விதித்தது.

இது தொடர்பாக ஜூன் 25-ம் தேதி செபி பிறப்பித்த உத்தரவில் இருவரது வங்கிக் கணக்கு மற்றும் மின்னணு பங்குகளை முடக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இவ்விருவரது டி-மேட் பங்குகளை முடக்குமாறு என்எஸ் டிஎல் மற்றும் சிடிஎஸ்எல்-லுக்கு செபி உத்தரவிட்டுள்ளது.

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆர்கிட் நிறுவனத்தின் பங்கு விலையில் மிகப் பெரும் சரிவு ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக முன்னேறியது. இது தொடர்பாக என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ இணைந்து கூட்டாக விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் மாதம் அளித்தது.

பாலா, கௌல் ஆகிய இருவரும் மார்ச் 27 மற்றும் 28-ம் தேதிகளில் ஆர்கிட் பங்குகளை வாங்கியது தெரியவந்தது. இந்நிறுவனத்தின் பங்குகளை ரான்பாக்ஸி நிறுவனத்தில்

அங்கம் வகிக்கும் சோல்ரெக்ஸ் நிறுவனம் மார்ச் 31-ம் தேதி வாங்குவதற்கு முன்பாக அவர்கள் பங்குகளை வாங்கியது கண்டுபிடிக் கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in