

நடப்பு ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபியின் தகவல்படி 2015-ம் ஆண்டில் 70,173 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய் திருக்கின்றன.கடந்த 2014-ம் ஆண்டில் 23,843 கோடி ரூபாயை மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.
சிறுமுதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதால் மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் தகவல்படி (ஆம்பி) ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை யிலான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள். 2015-ம் ஆண்டு பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூட பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு உயர்ந்தது என்று குவாண்டம் ஏ.எம்.சி. நிறுவனத்தின் பண்ட் மேலாளர் ஐ.வி. சுப்ரமணியன் தெரிவித்தார்.
ரூ.6,500 கோடி வெளியேற்றம்
கடந்த சில மாதங்களாக இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறும் சூழ்நிலையில் டிசம்பர் மாதமும் 6,500 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. இதில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 3,949 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 2,588 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது. மொத்தம் 6,537 கோடி ரூபாய் டிசம்பர் மாதத்தில் வெளியேறியுள்ளது. இந்த மாதத்தில் இன்னும் நான்கு வர்த்தக தினங்கள் இருப்பதால் வெளியேறும் அந்நிய முதலீடு இன்னும் அதிகமாகும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரி வித்துள்ளனர்.