

பரஸ்பர நிதி உள்ளிட்ட நிதிச் சேவையில் ஈடுபட்டுள்ள பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் கடந்த ஆண்டில் ரூ.15,300 கோடியை திரும்பப் பெற்ற விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விதிமுறை மீறல், சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் இந்தியாவில் 6 நிதித்திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அறிவித்தது. ஆனால் அவ்விதம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே நிறுவனத்தின் இயக்குநர்கள் இந்த நிதித் திட்டங்களிலிருந்து அதிக அளவில் நிதியை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக செபி இப்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதேபோன்ற செயல்பாடுகளுக்காக மேலும் இரண்டு நிதி நிறுவனங்களுக்கும் விளக்கம் கோரும்நோட்டீஸை செபி அனுப்பியுள்ளது.
பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தை தணிக்கை செய்த சோக்சி அண்ட் சோக்சி எல்எல்பி நிறுவனத்தின் தணிக்கை அறிக்கைஅடிப்படையில் இந்த விசாரணையை செபி மேற்கொண்டுள்ளது. ஏறக்குறைய ரூ.15,300 கோடிதொகையை 6 கடன் திட்டங்களிலிருந்து இந்நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையானது 6 நிதித் திட்டங்களிலிருந்து வெளியேறும் முடிவை அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக எடுக்கும் நிதி அளவைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிக அளவில் நிதி எடுக்கப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.
நோட்டீஸுக்கு உரிய பதிலைநிறுவனம் அளிக்கும் என்று பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.