

போனவாரம் ‘சமூக ஆதார கோட்பாடு’ (The principle of social proof) பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஒரு விஷயம் சரியா, தவறா என்று தெரியாத போது மற்றவர்கள் எதை சரி என்கிறார்களோ, எதை செய்கிறார்களோ அதுவே சரி என்று நினைப்பது, அவர்கள் செய்வதையே செய்வது தான் இந்த கோட்பாடு. பலர் ஒன்றைச் சொன்னால் அது சரியாய்தான் இருக்கும் என்று நாம் நம்புவதும் இதனாலேயே.
நம்பர் ஒன் பிராண்ட் என்று சில கம்பெனிகள் விளம்பரப் படுத்துகின்றன. தங்கள் பிராண்ட் எப்படி சிறந்தது என்று அவர்கள் மெனெக்கெட்டு நம்மை கட்டாயப் படுத்த வேண்டிய அவசியமே இல்லை. மக்களில் பலர் அப்படி நினைக்கிறார்கள் என்று கூறினால் போதுமானது. பலர் வாங்குகிறார்கள் என்றால் நல்ல பிராண்டாகத்தான் இருக்கும், நாமும் வாங்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது.
தற்கொலைகளின் பின்னணி
கல்யாணத்திலோ, ஒரு நிகழ்ச் சியிலேயோ பஃபே ஸ்டைல் சாப்பாட்டை சாப்பிட்டு தட்டை எங்கு போடுவது என்று தேடுகிறோம். குப்பை தொட்டி எதுவும் கண்ணில் படவில்லை. டேபிளில் சாப்பிட்ட தட்டுகள் சில இருப்பதை பார்க் கிறோம். அதன் அருகில் நம் தட்டை வைக்கிறோம். ஏற்கெனவே சிலர் வைத்திருப்பதால் அதுவே தட்டு வைக்க சரியான இடம் என்று நினைக்கிறோம்.
தட்டை விடுங்கள். தற்கொலைக்கே இந்த கோட்பாடு பொருந்தும். `கலிஃபோர்னியா பல்கலைக்கழக’ சமூகவியல் பேராசிரியர் `டேவிட் ஃபிலிப்ஸ்’ நியூஸ்பேப்பரில் பெரிய அளவில் பிரபலப்படுத்தப்படும் தற்கொலை செய்தியால் அந்த சுற்று வட்டாரத்தில் தற்கொலை கள் அதிகமாகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்.
1947 முதல் 1968 வரை நடந்த தற்கொலைகளை ஆராய்ந்ததில், செய்தித் தாளில் முதல் பக்கத்தில் பிரபலப்படுத்தப்பட்டிருந்த தற்கொலை செய்தி வந்த இரண்டு மாதத்தில் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக 58 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
எதனால் இது? தற்கொலை செய்தி பிரபலமாகும் போது அதை செய்தவர் களை போல் சோகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு தற்கொலை இன்னமும் கூட சரியான தீர்வாக தெரிகிறது. இவ்வளவு பேர் செய்துகொள்கிறார்கள் என்றால் நாமும் செய்யலாம், தப்பில்லை என்று மனம் நினைத்து தற்கொலைக்கு ஒரு லெஜிடமசி வந்துவிடுகிறது!
இருநூறு வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் ‘ஜொஹேன் வான் கெத்’ என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ‘The sorrows of Young Werther’ என்ற கதை எழுதினார். அதில் ஹீரோ வெர்தர் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டு கடைசியில் தற்கொலை செய்து கொள்வான். இக்கதை ஐரோப்பா முழுவதும் பிரபலமடைந்ததோடு கதை நாயகனைப் போல ஐரோப்பா முழுவதும் பலர் தற்கொலை செய்துகொள்ளத் துவங்க பல நாடுகள் அப்புத்தகத்திற்கு தடை விதித்தன. சீரியல் தொடராக தற்கொலை நடப்பதற்கு ‘வெர்தர் எஃபெக்ட்’ (Werther effect) என்று இன்றும் அழைக்கப்படுகிறது!
அமெரிக்கா, ஐரோப்பாவில் தான் இதெல்லாம் என்று அசால்ட்டாக நினைக்காதீர்கள். சென்னை கோட்டூர்புரத்தில் கூவம் பாலத்திலிருந்து ஒரு பிரபலமானவர் சில வருடங்களுக்கு முன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக அடிபட்டது. அதன் பின் அதே பாலத்திலிருந்து பலர் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனர். பார்த்தது சென்னை கார்ப்பரேஷன். `ஏண்டா இப்படி உங்க உயிரோடு எங்க உயிரையும் சேர்த்து எடுக்கிறீங்க’ என்று பாலத்தின் சுவற்றை பெரியதாக்கி யாரும் ஏற முடியாதபடி செய்து தற்கொலைகளைத் தடுத்தது.
விளம்பர உத்தி
மற்றவர்கள் என்ன நினைக் கிறார்கள், எப்படி செயல்படு கிறார்கள் என்பதை வைத்தே நம் சிந்தனைகளை, செயல் களை வடிவமைக்கிறோம். இதுவே சமூக ஆதார கோட்பாட்டின் அடிப்படை. பலர் செய்யும் செயலே மனதிற்கு சரியானதாகபடுகிறது. அதுவும் நம்மைப் போலவே இருப்பவர்கள் செயலைப் பார்க்கும் போது அவர்கள் செய்வதைப் போல் செய்யத் தோன்றுகிறது. நம் மீதே நமக்கு நம்பிக்கையில்லாமல் அன்ஷுவராக இருக்கும் போதும், குழப்பமான நிச்சயமற்ற நிலை நிலவும் போதும் இந்த கோட்பாடு இன்னும் ஜோராக வேலை செய்யும். அது போன்ற சமயங்களில் நம்மை போன்றவர்களைப் பார்த்து அவர்கள் செய்வதே சரி, அதையே நாமும் செய்வோம் என்று செய்யத் தோன்றும்.
இது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்குக் கூட பொருந்தும். பள்ளிகளில் சிகரெட்டிற்கு எதிரான நிகழ்ச்சி களை பள்ளிக் குழந்தைகள் கொண்டு நடத்தும் போது அது பெரிய அளவில் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகளில் கண்டுபிடிக் கப்பட்டிருக்கிறது.
தங்கள் பேச்சைக் கேட்காத மகனிடம் இனி பேசிப் பிரயோஜனமில்லை என்று அவன் நண்பனிடம் ‘ஏம்பா, உன் பிரெண்ட் தானே, நீ கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா’ என்று பெற்றோர்கள் கேட்பதும் இதனால் தான்!
டெஸ்டிமோனியல் என்னும் விளம்பர உத்தி பிரபலமாக, பவர்ஃபுல்லாக இருப்பதற்கு காரணமும் இதுதான். அழகிய மாடல்கள் கொண்டு விளம்பரப்படுத்தாமல் பொருளை உபயோகித்தவர்களை கொண்டு விளம்பரப்படுத்தும் முறைக்கு டெஸ்டிமோனியல் என்று பெயர். பிராண்டை உபயோகித்தவர்கள் தான் என்றில்லை. அழகிய மாடலாய் இல்லாமல் பிராண்டை உபயோகித்தவர்கள் போல் தெரியும் சாதாரணமானவர்களை கொண்டும் விளம்பரப்படுத் தலாம். ‘டவ்’ சோப் விளம்பரங்கள் இந்த டெக்னிக்கை அதிகம் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
பிரபலங்கள் அல்லது அழகிய மாடல்கள் தோன்றும் விளம்பரங் களைப் பார்க்கும் வாடிக்கை யாளர்களுக்கு பிராண்ட் பயன் மீது ஒருவித அவநம்பிக்கை தோன்ற கூடும். விளம்பரம் சொல்வது போல் பிராண்ட் செய்யுமா என்ற சந்தேகம் வரலாம். இது மாடல்களுக்கும், அழகாய் இருப்பவர்களுக்கும் வேண்டுமானால் பயன்படும், நமக்கு பயன்படாது என்ற ஒருவித சலிப்பு தோன்றும்.
சாதாரணமாக, நம்மில் ஒருவரைப் போல் இருப்பவர் விளம்பரங்களில் தோன்றி பிராண்டை பற்றி பேசி, தான் உபயோகித்ததைப் பற்றி கூறி, தான் பயன் பெற்ற விதத்தை விளக்கும் போது அந்த விளம்ப ரத்தைப் பார்க்கும் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். ‘அட, இவர் நம்மை போலிருக்கிறார், இவர் உபயோ கித்து நன்றாக இருக்கிறதென்றால் நாமும் உபயோகிக்கலாம் போலிருக்கிறதே’ என்று நினைப்பார்கள். ‘அஸ்வினி’ ஹேர் ஆயில் விளம்பரங்கள் இது போல் அமைந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
இந்த கோட்பாடு தொழிலை வேறு எப்படி பாதிக்கிறது? அப்படி பாதிக்காமல் தற்காத்துக்கொள்ள என்ன வழி? அதற்கென்ன செய்ய வேண்டும்?
ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.
அட, அதை விவரிக்க இங்கு இடமில்லை சார், அடுத்த வாரம் சொல்கிறேன் என்று சொல்ல வந்தேன்!
satheeshkrishnamurthy@gmail.com