

பொதுத்துறை நிறுவனங்களிலும் பொது பங்களிப்பு குறைந்தபட்சம் 25 சதவீதம் தேவை என்று பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) விரும்புவதாகவும், இருந்தாலும் புதிய அரசிடம் கருத்துகேட்ட பிறகே இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
பட்டியலிடப்பட்ட தனியார் நிறுவனங்களில் பொதுபங்களிப்பு குறைந்தபட்சம் 25 சதவீதம் (அதாவது நிறுவனங்களின் பங்கு 75 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது) இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த செபி இப்போது பொதுத்துறை நிறுவனங்களிலும் இதேபோன்ற விதிமுறையை கொண்டுவர இருப்பதாகத் தெரிகிறது.
30க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்களில் 10 சதவீதம்தான் பொதுப்பங்களிப்பு இருக்கிறது. இந்த விஷயம் குறித்து விவரம் தெரிந்த நபர்கள் கூறும்போது, பொதுத்துறை நிறுவனங்கள் இந்த இலக்கை எட்ட மூன்று வருடம் காலம் கொடுக்க செபி கருதி இருப்பதாக தெரிவித்தார்கள்.
இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பும் அதிகமாக இருக்கும், அதேநேரம் அரசாங்கம் தன்வசம் இருக்கும் பங்குகளை விலக்கி தேவைப்படும் நிதியை திரட்டிகொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்தார்கள். இதே போல 2010-ம் ஆண்டு அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலும் குறைந்தபட்ச பொதுபங்களிப்பு 25 சதவீதம் இருக்க வேண்டும் என்றும், அதற்கு மூன்று வருடம் காலக்கெடுவும் செபி கொடுத்தது.
அதன் பிறகு பொதுத்துறை நிறுவனங்களில் பொதுப்பங்களிப்பு 10 சதவீதம் இருந்தால் போதும் என்று விதியை திருத்தியது. இந்த காலக்கெடு 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தபோது, அந்த விதியை கடைபிடிக்காத 105 தனியார் நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுத்தது.