தங்கம் விலை உயர்வு ஏன்; கரோனா சூழலுக்குப் பின் விலை குறையுமா?

தங்கம் விலை உயர்வு ஏன்; கரோனா சூழலுக்குப் பின் விலை குறையுமா?
Updated on
2 min read

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் காரணமாக தொழில்துறை தேக்கமடைந்து உலகப் பொருளாதாரச் சக்கரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்கம் விலை மட்டும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அதிலும் கடந்த 3 நாட்களில் தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில் இதற்கான காரணம் என்ன, தங்கம் விலை குறையுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

தங்கம் விலை உயர்வு குறித்து பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன் கூறியதாவது:

தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வங்கி முதலீட்டுக்கான வட்டி விகிதம் குறைந்தது, சர்வதேச வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது, பொருளாதார நெருக்கடி போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளன.

இதனால் தங்கம் முதலீடாகக் கருதி வாங்கப்படுகிறது. இதனால் அதன் விலை உயர்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், கரோனா பிரச்சினையால் எழுந்துள்ள அசாதாரணச் சூழல், சர்வதேச அரசியல் பதற்ற நிலை ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன.

சோம.வள்ளியப்பன்
சோம.வள்ளியப்பன்

ஆன்லைன் மூலம் வாங்குவது சாத்தியப்படுவதாலும் மக்கள் அதில் முதலீடு செய்கின்றனர். கரோனா பாதித்துள்ள சூழலில் தங்கத்தின் விலை ஏற்றம் இன்னும் சில காலத்திற்கு இருக்கவே செய்யும். எப்படியாகிலும் மிக அதிகமாக விலை உயர்ந்த ஒன்று மீண்டும் விலை குறையவே செய்யும்.

அதனடிப்படையில் பார்த்தால் பொருளாதாரச் சிக்கல்கள் தீரத் தொடங்கிய பிறகு மற்ற துறைகளில் முதலீடு செய்யும் ஆர்வம் தொடங்கினால் தங்கம் விலை கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது’’.

இவ்வாறு சோம.வள்ளியப்பன் கூறினார்.

இதுபோலவே தங்கம் விலை உயர்வு குறித்து இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சாந்தகுமார் கூறியதாவது:

சாந்தகுமார்
சாந்தகுமார்

''டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலுக்கேற்ப தங்கத்தின் சப்ளை இல்லாததால் அதன் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஸ்திரமடைந்த பிறகு மக்கள் அதை ஏற்று வாங்கத் தொடங்குவர். அதன் பிறகு மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக எழுந்துள்ள பாதுகாப்பற்ற சூழலும் விலை உயர்வுக்குக் காரணமாகும்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையும்போது அல்லது அதற்கான தடுப்பூசி விற்பனைக்கு வரும் சூழலில்தான் தங்கத்தின் விலை உயர்வ ஓரளவு சீராக வாய்ப்புள்ளது''.

இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in