

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று மார்கன் ஸ்டான்லி அறிக்கை கூறியுள்ளது. நடப்பாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருக்கிறது.
முன்னதாக ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி கணித்திருந்தது. பருவநிலை மாற்றம், மற்றும் தேவை குறைவு காரணமாக ஜிடிபி வளர்ச்சி குறையும் என்று மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
வெளித்தேவைகள் தொடர்ந்து குறைந்து வருவது மற்றும் அரசின் மறு விநியோக கொள்கைகளால் கிராமப்புறங்களில் நுகர்வு விகிதம் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் வளர்ச்சி விகிதம் பின்னடைவை சந்திப்பதாக மார்கன் ஸ்டான்லி கூறியுள்ளது.
சமீபத்திய மழை அளவு குறைந்துள்ளதால் விவசாய வளர்ச்சி கவலையளிப்பதாகவும், இதன் காரணமாக கிராமப்புற நுகர்வு விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த குறித்து பேசிய மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆசிய பிராந்திய முதன்மை பொருளாதார அறிஞர் சேத்தன் அய, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் எதிர்பார்ப்பை மறுஆய்வு செய்துள்ளோம், 2016 நிதியாண்டில் முன்பு எதிர்பார்க்கப்பட்ட ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைந்துள்ளது. 2017 ஆம் நிதியாண்டில் ஜிடிபி 8.1 சதவீதமாக இருக்கும். இது இதற்கு முன்பு 8.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டார்.