

இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சரிவு தற் காலிகமானது. சர்வதேச சூழ்நிலைகள்தான் சரிவுக்கு காரணம். இந்த சரிவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் இந்தியாவுக்கு வலிமை உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து நாம் மேம்பட்டிருக்கிறோம். நமது அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்திருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அளவு மேம்பட்டிருக்கிறது. முக்கிய பொருட்களின் விலை குறைந்திருப்பது ஆகியவை நமக்கு சாதகமான நிலைமை ஆகும். நடுத்தர காலம் முதல் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நாம் சரியான பாதையிலேயே பயணித்து வருகிறோம்.
அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சர்வதேச சந்தையுடன் நெருங்கி இருப்பதால் இந்த சரிவில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது. சர்வதேச அளவில் ஏதாவது நெருக்கடிகள் ஏற்படும் போது நமக்கு பாதிப்பு ஏற்படும். அதனை நடுத்தர கால மற்றும் நீண்ட கால கொள்கைகளை உருவாக்கி தீர்க்க முடியும்.
ரூபாய் சரிவினை அல்லது உயர்வினை எப்போது தடுக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான இலக்கும் ரிசர்வ் வங்கி வைத்திருக்கவில்லை. ஆனால் அதிக ஏற்ற இறக்கங்கள் நிகழும் போது ரிசர்வ் வங்கி தலையிடும்.
வருடாந்திர வங்கியாளர்கள் மாநாட்டில் முந்த்ரா இவ்வாறு கூறினார்.