

இந்தியாவில் கரோனா வைரஸ் பெருமளவு பரவி வரும் நிலையில் அதற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பெரிய அளவில் பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதுபற்றி பொருளாதார ஆலோசகர் சேகரிடம் பேசினோம். கரோனாவுக்குப் பிந்தைய சூழல், தனி மனித வாழ்க்கை, இந்தியாவின் வளர்ச்சி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
* கரோனாவுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரச் சூழல் எப்படி இருக்கும்?
கரோனா காரணமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் ஒப்பீட்டளவில் பாதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு இந்திய மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை காரணமாக உள்ளது.
இந்தியாவும் சரி, தமிழகமும் சரி பல சவால்களை இதுவரை சந்தித்துள்ளன. ப்ளூ காய்ச்சல் தொடங்கி மலேரியா வரை ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம். அதுவும் மலேரியா காய்ச்சலால் சென்னை மிக அதிகமான பாதிப்பை சந்தித்தது. இதுபோன்ற சவால்களை சந்தித்த நாம் தற்போது கரோனா எனும் சவாலை சந்தித்து வருகிறோம். பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்கள் பல சவால்களை கடந்து மீ்ண்டும் சாதித்து காட்டிய வரலாறு உண்டு. எனவே கரோனா சவாலையும் இந்தியா, குறிப்பாக தமிழகம் எதிர்கொண்டு வெற்றி நடைபோடும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக புதிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு புதிய பாதையில் பயணம் செய்வார்கள்.
* கரோனா பாதிப்பு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் பொருளாதாரச் சூழலால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
கரோனாவால் நமது பொருளாதாரம் பாரம்பரியப் பொருளாதாரத்தை நோக்கிப் பயணம் செய்யும். அதாவது பெரிய அளவில் சேமிப்பு சார்ந்த பொருளாதாரச் சிந்தனை மக்கள் மத்தியில் எழும். பல்வேறு துறைகளில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால் தனிநபர் வருமானம் மிக முக்கியமாகக் கருதப்படும்.
சில ஆண்டுளுக்கு முன்பு ஐடி துறையின் வளர்ச்சியால் பெரிய அளவில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழ்க்கைத் தரம் மாற்றமடைந்தது. அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறியது. ஆனால் தற்போது வேலைவாய்ப்பு குறையும் ஆபத்து இருப்பதால் வசதியான வாழ்க்கை முறை என்ற கண்ணோட்டத்திற்குப் பதிலாக பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறை உருவாகும்.
செலவினங்கள் பெருமளவு குறையும். உணவகங்களுக்குச் செல்லாமல் மக்கள் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடும் போக்கு அதிகரிக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதுடன், செலவும் குறைவு என்பதால் இது வாழ்க்கை முறையாக மாறக்கூடும்.
இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாடு பெரிய அளவில் வளரும். தகவலைத் தெரிந்து கொள்ளவும், செய்திகளை அறியவும் அதிகஅளவில் இணையதளங்களை மக்கள் பயன்படுத்துவர். இதுமட்டுமல்லாமல், சமையல், பொழுதுபோக்கு, கல்வி என அனைத்துமே டிஜிட்டல் வடிவில் தெரிந்து கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதனால் வேலைக்குச் செல்லாத பெண்கள் கூட வீட்டில் இருந்தபடியே, இதுசார்ந்த தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இணையத்தில் தகவல்களைப் பகிருவதன் மூலம் வருமானம் ஈட்டவும் வாய்ப்பாக அமையும்.
வெளிநாட்டினருக்கு இந்தியப் பாரம்பரிய உணவு மீது ஆர்வம் ஏற்படும். இதனால் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் குறிப்பாக உணவுப் பழக்கத்தின் மீது உலகம் முழுவதுமே ஈர்ப்பு ஏற்படும். இதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி சார்ந்த தொழில்கள் இந்தியாவில் அதிக அளவில் வளருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
தமிழகத்தில் என்ன மாதிரியான பொருளாதார மாற்றம் ஏற்படும்?
கரோனாவைத் தொடர்ந்து சீனா மீதான உலகளாவிய அதிருப்தி இந்தியாவுக்குச் சாதகமாக அமையும். சீனாவின் தொழில் வாய்ப்புகள் பெரிய அளவில் இந்தியாவுக்குத் திரும்பும். சீனப் பொருட்கள் தரத்தைப் பற்றிய கேள்வி எழுந்துள்ளது. இதுவும் இந்தியாவுக்குச் சாதகமே.
இதனை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சீனாவில் முதலீடு செய்த அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்கள் தங்கள் தொழில்களையும், முதலீடுகளையும் இந்தியாவிற்கு மாற்ற முயலும். இதனால் அதுசார்ந்த தொழில்கள் நன்கு வளர்ச்சியடையும்.
தமிழகத்தில் ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சியடையும். இந்த வாய்ப்பை தமிழக மக்களும் அரசும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நெசவுத் தொழில்; ஜவுளி துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படலாம். எனவே இந்தத் தொழிலில் ஏற்படும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விலை ரீதியாகப் போட்டியுடன் பொருட்களை உற்பத்தி செய்யும் முறையை நாம் வளர்க்க வேண்டும். இதன் மூலம் பெரிய தொழில் வாய்ப்பு ஏற்படலாம். இதற்கு அரசும் உதவிகள் செய்ய வேண்டும். சலுகைகள், மானியங்கள் கொடுக்க வேண்டும்.
சுகாதாரத்துறை, விவசாய உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், துறைகளில் இந்திய அரசு அதிகமாக கவனம் செலுத்தும். எனவே தமிழகத்திலும் அது சார்ந்த உற்பத்திகள் அதிகஅளவில் நடைபெறலாம்.
* புதிய வாய்ப்புகள் நமக்குச் சாதகமாக அமையுமா?
அடுத்த 6 மாதங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும் சுய சார்புடன் செயலாற்றவும், கற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் நமக்குப் பெரிய அளவில் உதவியாக அமையும்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் தாயகம் திரும்பும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியா திரும்பும் அவர்கள் முதலீடு செய்யவும், புதிய தொழில்களைச் செய்யவும், பெரிய அளவில் மனித வளமாக மாறவும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவு நனவாகக் கூடிய நேரம் இது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா நிச்சயமாக வல்லரசாகும். அது நமது கைகளில் தான் உள்ளது.
இவ்வாறு சேகர் கூறினார்.