

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 20- 21 நிதியாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்த நிலையில் முந்தைய மதிப்பிட்டில் இருந்து மேலும் 2.5 சதவீதம் குறைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக குறையும் பிரபல பொருளாதார ஆய்வு மதிப்பீட்டு நிறுவனமான பார்க்லே என மதிப்பிட்டுள்ளது.
குறிப்பாக பொருளாதார சரிவால் பங்குச்சந்தைகள் சரிந்து வரும் நிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வணிகத்தை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிராங்ளின் டெம்பிள்டன் (franklin templeton) நிறுவனம் 6 திட்டங்களை முடக்கி அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
இந்தநிலையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த கடனுதவியை அறிவித்துள்ளது.