

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தொலைத் தொடர்பு துறையை மீட்க போன் கால், மொபைல் டேட்டா போன்றவற்றுக்கு குறைந்தபட்ச கட்டண நிர்ணயத்தைக் கொண்டுவர வேண்டும். இதைத்தவிர வேறு வழி இல்லை என்று நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
வருவாய்ப் பகிர்வு தொகை தொடர்பான விவகாரத்தினால் வோடபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நெருக்குதலுக்கு ஆளாகின. மேலும் டெலிகாம் துறையில் உள்ள போட்டியினால் கட்டணங்களைக் குறைக்கவேண்டிய நிலையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. இதனால் ஒட்டுமொத்த டெலிகாம் துறையும் நெருக்கடியில் இருக்கிறது.
இந்த நெருக்கடி நிலையிலிருந்து துறையை மீட்க போன் கால், மொபைல் டேட்டா போன்றவற்றுக்கு குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அமிதாப் காந்த் கூறினார்.
ரூ.3.5க்கு ஒரு ஜிபி டேட்டா
தற்போது ஒரு ஜிபி டேட்டா ரூ.3.5க்கு கிடைக்கிறது. குறைந்தபட்ச கட்டண முறை கொண்டுவரப்பட்டால் கட்டணம் 5 முதல் 10 மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது. தற்போது டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை சுதந்திரமாக நிர்ணயிக்கலாம் என்ற வகையில் உள்ளன. இதனால் போட்டிப் போட்டுக்கொண்டு விலையைக் குறைத்துவந்தன. குறைந்தபட்ச விலை நிர்ணய முறை வந்தால், அதற்குகீழே கட்டணத்தைக் குறைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.