Last Updated : 02 Aug, 2015 12:01 PM

 

Published : 02 Aug 2015 12:01 PM
Last Updated : 02 Aug 2015 12:01 PM

நிலம் கையகப்படுத்துவது கடினமானதாக உள்ளது: நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தகவல்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை செயல்படுத்துவது மிகவும் கடினமான பணியாக இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ''ஸ்திரமான மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி'' குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், தேவையான நிலம் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதே சமயம் இது தொடர்பாக மிகப் பெரிய அளவில் விவாதம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது என்றார்.

புதிய நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் உங்களுக்கு நிலம் தேவை. அதேபோல வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை உருவாக அதிக அளவில் நிலமிருந்தால்தான் சாத்தியமாகும். அதற்கு ஏற்கெனவே உள்ள நகரங்களில் போதிய அளவுக்கு இடமில்லை என்றார்.

இப்போது உள்ள நிலையில் புதிய நகரம் உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது ஆகும். அதுவும் அனைத்து நடைமுறைகளும் பிரச்சினை, தடைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே 5 ஆண்டுகளில் புதிய நகரை உருவாக்க முடியும்.

தன்னார்வ தொண்டு அமைப்பு களால் பிரச்சினையோ, நீதிமன்ற தடையோ அல்லது எதிர்ப்போ இல்லாதபட்சத்தில் மட்டுமே புதிய நகரங்களை உருவாக்க முடியும். நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி இதை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று பனகாரியா குறிப்பிட்டார்.

அகலமாக கட்டுமானத்தை மேற்கொள்வதை விட உயரமாக மேற்கொள்வதுதான் ஒரே வழி, ஆனாலும் அதிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன என்றார்.

இந்திய நகரங்கள் அனைத்துமே குறைந்த தரைப்பரப்பை கொண் டவையாக (எப்எஸ்ஐ) உள்ளன. இதனாலேயே அதிக அளவில் வாடகை தர வேண்டியுள்ளது என்றார்.

சீரான நகர்ப்புற வளர்ச்சிக்கு, அதி விரைவான போக்குவரத்து வசதி, நெட்வொர்க் மற்றும் மக்கள் விரைவாக சென்று வருவதற்கு எளிய வழிமுறைகள் தேவை. இவை யெல்லாமே நகர்ப்புறத்தையொட் டிய பகுதிகளில் பெரிய அளவில் வசிப்பிடங்கள் உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு இந்திய பொருளாதாரத்துக்கு உண்டு என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா விரைவான பொருளதார வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. தற்போது 7.5 சதவீதமாக உள்ள வளர்ச்சி விரைவில் 8 சதவீதம் முதல் 9 சதவீத அளவுக்கு உயரும். இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவது கடினமான விஷயம் அல்ல என்றார்.

மாற்றங்கள் விரைவாகவும், நகர்மயமாதல் துரிதமாகவும் நடைபெறும்போது வறுமை ஒழியும், வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஸ்வாச் கி பாரத் திட்டத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்து தூய்மை இந்தியாவுக்கான முதலாவது பயிற்சி மாதிரியை வெளியிட்டார்.

மொத்தம் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் மத்திய அரசின் திட்டத் துக்கு மாநில அரசுகளிடமிருந்து 98 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விரைவில் 2 விண்ணப்பங்கள் வந்துவிடும் என நம்புவதாக அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x