

மலேசியாவில் இருந்து பாமாயில் உட்பட எந்த பொருளையும் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்தார். அவர் கூறும்போது, “மதச்சார்பற்ற நாடு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியா, முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். இதே நடவடிக்கையை நாங்கள் எங்கள் நாட்டில் செய்தால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இங்கு குழப்பமும், நிலையற்றத்தன்மையும் உண்டாகும். அனைவரும் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள்விவகாரம் என்று பதிலளித்து. இதனால் இந்திய – மலேசிய உறவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று அவர் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பாமாயிலை பொறுத்தவரையில் உள்நாட்டில் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால் பெருமளவு வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். குறிப்பாக மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் இருந்து அதிகஅளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறோம்.
மலேசியாவில் இருந்து பாமாயில் உட்பட எந்த பொருளையும் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் ஊகமே.
இவ்வாறு அவர் கூறினார்.
தவறவிடாதீர்