மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு: தேவை உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடு

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பு: தேவை உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடு
Updated on
2 min read

இந்தியப் பொருளாதார சூழல் மந்தமாக இருப்பதால் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், நடப்பு நிதியாண்டில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவான 5 சதவீதமாக வீழச்சியடைந்தது.

குறிப்பாக உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை மோசமாகச் செயல்பட்டதாலும், வேலையின்மை அதிகரிப்பாலும் வளர்ச்சி குறைந்ததுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்த நிலையில், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு பாதைக்கும், வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டுவரும் போக்கில் மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.

குறிப்பாக முதலீடுகளை ஈர்க்கவும் குறிப்பாக உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்தநிலையில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து ஜிஎஸ்டி வரி ஆலோசகரும், ஆடிட்டருமான ராஜேந்திர குமார் கூறியதாவது:

ராஜேந்திர குமார்
ராஜேந்திர குமார்

பொருளாதார சூழல் மந்தமாக இருப்பதால் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பொருளாதார மந்தநிலையுடன் வரிகுறைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் மத்திய பட்ஜெட்டில் வரி விகிதங்களில் பெரிய அளவு மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

இருப்பினும் பொருளாதார சுழற்சி ஏற்பட மத்திய அரசு உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரயில்வே, விமானம், சாலைகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யலாம்.

அதுபோலவே கிராமப்புறச் சாலைகள், குளங்கள் தூர் வாருதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், மக்களின் வருவாயையும் உயர்த்த வழி ஏற்படும். இதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறை உற்பத்தி குறைந்து அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்துள்ள நிலையில் அரசு முதலீடு செய்ய முடியாத திட்டங்களில் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றலாம். உள்கட்டமைப்பு துறைக்கு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் பெருமளவு பொருளாதார சுழற்சி ஏற்பட வாய்ப்புண்டு.எனவே அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in