விஜய் மல்லையாவின் சொத்துகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

‘லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் முடக்கப்பட்ட சொத்துகளை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிய செலாவணி தடுப்பு சட்டம் (பிஎம்எல்ஏ) வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக ஜனவரி 18-ம் தேதி வரை இதை செயல்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துகளில் பெரும்பாலானவை நிறுவன பங்கு பத்திரங்களாகும்.

விஜய் மல்லையாவுக்கு கடன்வழங்கிய எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு கடந்த மாதம் லண்டன் நீதிமன்றத்தில், விஜய் மல்லையாவுக்கு ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கிஉள்ளதாகவும் அவரை திவாலானவராக அறிவிக்கக் கோரி மனுதாக்கல் செய்தன.

மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அமலாக்கத் துறையின் மனு மீதான வழக்கும் தற்போது லண்டன் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இவர் நடத்திய கிங் ஃபிஷர் ஏர்லைன் கடுமையான நிதி நெருக்கடியால் முடங்கியது. இந்நிறுவனத்துக்காக வாங்கிய கடனை அவர் செலுத்தவில்லை. 2017-ம் ஆண்டு லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர்மீது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவரை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கின் மேல் முறையீடு அடுத்த மாதம் லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in