

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை 19 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5-வது மாத மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 140 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.695க்கு விற்கப்பட்ட நிலையில், இனிமேல் 714 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மும்பையில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.695 ஆக அதிகரித்துள்ளது.
கொல்கத்தாவில் மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.21.50 பைசா உயர்ந்து, ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்ந்து, ரூ.734 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த 5 மாதங்களில் ரூ.139.50 பைசாவும், மும்பையில் 138 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. அதாவது சராசரியாக சிலிண்டர் விலை 25 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,241 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,308.50 பைசாவும், மும்பையில் ரூ.1,190, சென்னையில் ரூ.1,363 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தற்போது மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் ஓர் ஆண்டுக்கு வழங்குகிறது. இந்த 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுவோர் வெளிச்சந்தையில் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.
மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 26 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. நியாய விலைக் கடையில் விநியோகம் செய்யப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை தற்போது ரூ.35.58 பைசாவாக இருக்கும் நிலையில் 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.