

அடுத்த மூன்று ஆண்டுகளில் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள்நாட்டு மக்கள் அனைவருக்குமானதாக விரிவாக்கப்படும் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜான திட்டம்40 சதவீத மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் வேறு சில திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் அனைத்துமருத்துவ காப்பீட்டு திட்டங்களையும் ஒரே அமைப்பின்கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்மூலம் 100 சதவீத மக்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் பிரதம மந்திரி ஜன்ஆரோக்கிய யோஜனா திட்டத்தின்கீழ் 50 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அவர்களின் மருத்துவ செலவுக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் அந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. அந்ததிட்டத்தை விரிவாக்கும் முயற்சி விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இஎஸ்ஐசி உள்ளிட்ட திட்டங்களின்கீழ் 33 கோடி பேர் மருத்துவ காப்பீடு பெறுகின்றனர்.
இதுபோன்ற திட்டங்களின்கீழ் நாட்டு மக்களில் 70 சதவீதத்தினர் பயன்பெறுகின்றனர். மீதமுள்ள 30 சதவீதத்தினருக்கு மட்டும் எந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களும் வழங்கப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் வரி செலுத்தும் பிரிவினர் என்பதால் அவர்களுக்கு காப்பீட்டு திட்டங்களின்கீழ் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக காப்பீட்டு திட்டங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளது.